உன்னையல்லால் வேறே யார்? – இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் இருபது

 

வழக்கம் போல தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் பம்பாயில் இருந்து மெட்ராஸ் வந்திறங்கின போது சென்ட்ரல் ஸ்டேஷனில் நிச்சயம் அப்பாவை எதிர்பார்க்கவில்லை என்பது அர்ச்சனாவிற்கு வியப்பாக இருந்தாலும், பல விதங்களில் புண்பட்டு நொந்த மனதிற்கு சற்றே ஆறுதலாகவே இருந்தது.

 

“வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கலாம் அர்ச்சனா, ஒன்றரை மணி நேரம் தானே. அம்மா உனக்காக சமைச்சு வச்சு காத்திட்டு இருக்கா. இங்க ஹோட்டல்’ல எல்லாம் வேண்டாம்”, என்று கூறி உடனேயே தொடர்பு பஸ் மூலம் காஞ்சிபுரத்திற்கு பஸ் ஏறிவிட்டனர். வயதான காலத்தில் தன்னை வரவேற்க என்ற ஒரே காரணத்திற்காக மெட்ராஸ் வரை பயணம் செய்த அப்பாவின் பாசத்தில் நெகிழ்ந்து சீட்டில் சாய்ந்த அர்ச்சனாவிற்கு வெங்கட்டின் நினைவும் கூடவே வந்தது. அதுதான், நாணயத்தின் மறுபக்கம் போல, எந்த சம்பவம் என்றாலும் கூடவே வெங்கட்டின் நினைவுகள் தன்னுள் பயணிப்பது இயல்பாகவே போய்விட்டதே!

வரும்போது, கடந்து சென்ற குகைகளை எண்ணக் கூடாது என்று கண்களை இறுக மூடி பிடிவாதமாக ஆயிரத்தில் இருந்து தலைகீழாக ஒன்று வரை எண்ணுவதில் முழு கவனத்தையும் வைத்திருந்த போது தானா டிக்கட் செக்கர் வர வேண்டும்? எழுநூற்று முப்பத்தாறு வரை எண்ணிய நினைவு இருந்தது. அதற்கு பிறகு தாண்டி சென்ற குகைகள் தான் வந்து மனதை அழுத்தியது. சென்ற இரண்டு மாதங்களாகவே அவனை தவிர்த்து வந்து தானே இருக்கிறாள்! அப்பா அம்மா இருவரும் ஊருக்கு திரும்பியதும் அதற்கு பிறகு அவன் சந்திக்க பெரிதாக முயலவில்லை. வேலைப் பளுவினால் நேரில் வர முடியவில்லை என்ற காரணம் சொன்னாலும், வாரம் தவறாமல் போன் செய்து நலம் தானா என்று விசாரித்தான்.

இப்போது எந்த மன அழுத்தத்தை பற்றியும் நினைக்காமல் நிம்மதியாக பத்து நாட்கள் இருக்க வேண்டும். நவராத்திரியை ஒட்டி இந்த பத்து நாட்கள் ஊரில் பெற்றோருடன் செலவழிக்கவேண்டும் என்றே தீர்மானம் செய்து வந்திருக்கிறாள். அதிலும், ஊருக்கு கிளம்பும் முன்னால் இருந்தே விசாலாட்சியும் ரங்கபாஷ்யமும் படித்து படித்து அடுத்த விடுமுறைக்கு காஞ்சிபுரம் வருமாறு சொன்னதால், அவர்களையும் மனதில் கொண்டே இப்போது ஊருக்கு வந்திருக்கிறாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பொன் உருகக் காயும் புரட்டாசி வெயிலின் விளைவாக ஓய்ந்து போய்விட்டிருந்தாள் அர்ச்சனா.

“கன்னமெல்லாம் ஓட்டிப் போய், இதென்ன இப்படி ஈர்க்குச்சி மாதிரி வந்திருக்கே! தலைமுடியப் பாரு! காய்ஞ்சு போய் தென்னமட்டை மாதிரி வர வரன்னு….. ப்ச்…..”, அங்கலாய்ப்பாகவே வரவேற்றார் விசாலாக்ஷி.

இந்த அங்கலாய்ப்பு அவள் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தருணத்திலும் அரங்கேறியது.

“அம்மா, பாவம்மா அப்பா. இந்த வெயில்ல ஒன்றரை மணி நேரம் பிரயாணம் பண்ணி எனக்காக காஞ்சிபுரத்தில் இருந்து மெட்ராஸ் வரை வந்து அழைச்சிட்டு போக வந்திருக்கார்”, பாசமாகவும் பெருமையாகவும் சொன்னாலும் அப்பாவின் உடல்நலம் குறித்து அக்கறையும் கூடவே வெளிப் பட்டது அர்ச்சனாவின் குரலில்.

“ஹ்ம்ம்…… என்ன பண்ண சொல்லறே? நீ மாப்….. துணையோடு வரும் பட்சத்தில் நாங்க கவலையே படாமல் வீட்டு வாசலில் வந்து ஆரத்தி எடுத்து வரவேற்று இருப்போம். இப்படி தன்னந்தனியா ஒத்தை மரமா வரும்போது, கவலைப் படாமல் இருக்க முடியுமா சொல்லு. அதான், அப்பா கிளம்பி மெட்ராஸ் வந்து கூட்டி வந்தார்”,

ஏண்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது அர்ச்சனாவிற்கு!

அடுத்த நாள் காலை காபி குடித்த படி, எதார்த்தமாக, “உன் கையால போட்ட காபி குடிச்சு எத்தனை நாள் ஆச்சும்மா! இனி அடுத்த பத்து நாளும் உன் சமையல் தான். இன்னைக்கு என்ன செய்யப் போகிறே?”, என்று விசாரிக்க,

“இன்னைக்கு பத்திய சமையல் தான்! வா…. வந்து உட்காரு, உனக்கு விளக்கெண்ணையை தலைக்கு தேய்ச்சு விடப் போறேன்”

“ப்ச்…. என்னம்மா, பத்திய சமையலா? நானே ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் வந்திருக்கேன். நல்லா உப்பும் உரைப்புமா செஞ்சு போடுவேன்னு பார்த்தா… முருங்கைக்கா சாம்பாரும் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டும்….”

அர்ச்சனா வாக்கியத்தை முடிக்கும் முன்னால் சமையல் அறையில் இருந்து ணங்கென்று ஒரு சப்தம் எழ, சொல்லிவந்ததை பாதியில் நிறுத்தினாள். அதற்கு தோதாக விசாலாட்சியின் குரல் கேட்டது, “எனக்கு கூட தான் சந்தோஷமா வாசலை அடைச்சு கோலம் போட்டு, பண்டிகை சமையல் செஞ்சு, தலை வாழை இலை போட்டு, வேளைக்கு ஒரு ஸ்வீட் செய்ஞ்சு போட்டு கண்ணு குளிர என் பொண்ணு மாப்…. பெண்ணை கவனிச்சுக்கணும்னு இருக்கு. ஆசைப்பட்டபடி எல்லாம் நடக்க கொடுத்து வைக்கலையே!”, தனக்குள் முனகிக் கொள்ளுவதை போல சொன்னாலும் மேடை ரகசியம் போல அதெல்லாம் அர்ச்சனாவின் காதுகளில் எட்டவேண்டும் என்றே சொல்லப்பட்டன.

அதற்குப் பிறகு அர்ச்சனா வேறெதுவும் சொல்லவே இல்லை. எந்த விஷயத்திற்கும் வெளிப்படையாக அவள் மனதை திறந்தாளில்லை. எதையாவது சொல்லி, இன்னமும் அம்மாவின் புலம்பலை கேட்கவேண்டுமே என்று பயமாகவும் இருந்தது. அத்தனை சொல்லியும், தான் மட்டும் தான் இதற்கு காரணம் போல தன்னை இப்படி வறுத்தெடுப்பது வருத்தத்தை தந்தது. ஆனால், இவள் எந்த விதமான வாதமோ விவாதமோ செய்யாவிட்டாலும் விசாலாக்ஷி அவரது புலம்பலை நிறுத்தவில்லை. விதண்டாவாதமாக பேசுகிறாரோ என்று அர்ச்சனா நினைத்தாலும் எதிர்பேச்சு பேசினால் அதிகமாக தான் ஆகும் என்று தெரிந்ததால் அமைதியாகவே இருந்தாள்.

அன்று இரவு ரங்கபாஷ்யத்தின் முன்னிலையில் இதே போல புலம்பும் போது, அர்ச்சனாவின் முகம் கூம்பி விட, வாடின கண்களை செய்தித்தாளில் பதித்து அப்பாவை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்தவளை ரங்கபாஷ்யத்தின் வார்த்தைகள் மெல்ல சீண்டிப் பார்த்தது. “அவ அப்படி புலம்பராளேன்னு வருத்தப் படாதே. அவ ரொம்பவே ஓய்ஞ்சு போய் இருக்கா. உன்னை இப்படி பார்க்கறது எங்களுக்கு எத்தனை வேதனையா இருக்கு தெரியுமா? அதான் அப்பப்போ இப்படி வார்த்தைகள் வந்துடறது. அவளும் மனசுல இருக்கிறதை யார்கிட்ட தான் வெளிப்படையா சொல்லுவா….மற்றவங்க கிட்ட சொன்னா, கண்ணும் காதும் வச்சு வெளிய வேண்டாத விஷயம் எல்லாம் பரவும். அதான், நாம மட்டும் இருக்கிற சமயத்துல இப்படி புலம்பி மனசுல இருக்கிற பாரத்தை இறக்கி வைக்கிறா!”, என்று மனைவிக்கு வக்காலத்து வாங்கினார்.

அம்மாவை பற்றி மட்டும் கவலை படறாரே, என்னை பற்றி கவலை பட இன்னும் வேற யாராவது தான் வரணும் போல இருக்கு என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டாள்.

பத்து நாள் இருக்க வேண்டும் என்று புறப்பட்டு வந்தவளுக்கு ஐந்தாம் நாளே மூச்சு முட்டத் தொடங்கி விட்டது. அதிலும் நான்காம் நாள் இரவு தொலைக் காட்சியில் சித்ர மாலா நிகழ்ச்சி முடியும் நேரம், சரியாக தொலைப்பேசி கூவி அழைத்தது. அம்மா ஏற்கனவே தலை வலி என்று படுக்கப் போய்விட, அப்பாவோ காலுக்கு தென்னமரக்குடி எண்ணையை நீவிவிட்டுக் கொண்டு ஈசி சாரில் அமர்ந்திருக்க, அர்ச்சனாவே எழுந்து சென்று, “ஹலோ!”, என, எதிர்பக்கம் ஒரு உள்ளிழுத்த மூச்சு மட்டுமே கேட்டது.

“ஹலோ…. யார் பேசறது?”

“……………”

“ஹலோ…… யார்ங்க வேணும்?”

“………………..”

“ப்ச்……லைன் டிஸ்கனெக்ட் ஆகிடுத்தா இல்லை கனக்ஷனே சரியா கிடைக்கலியோ என்னவோ…. ஒண்ணும் சத்தமே காணும்பா!”, என்றபடி ரிசீவரை மீண்டும் அதன் தாங்கியில் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.

நவராத்திரி சமயம் ஆதலால் அடுத்த நாள் வழக்கமான பூஜைகளில் நேரம் செல்ல, ஏனோ அர்ச்சனாவிற்கு ஒவ்வொரு வருடமும் செய்யும் அளவு நவராத்திரி பூஜைகளில் மனமும் கவனமும் செல்லவில்லை. அம்மா, விசாலாக்ஷி செய்யும் போது நானும் அந்த அறையில் இருந்தேன் என்னும் அளவு தான் அர்ச்சனாவின் பங்களிப்பும் ஈடுபாடும் இருந்தது.

“முன்னெல்லாம் இருபது பைசா தாமரைக் காசு நூற்றியெட்டு வச்சு பூஜை பண்ணுவியே, இந்த வருஷம் ஒண்ணுமே செய்யலையே அர்ச்சனா! ஒரு நாள் குங்குமம், ஒரு நாள் உதிரிப் பூ, ஒரு நாள் தாமரைக்காசு அப்படின்னு விதம் விதமா அர்ச்சனை பண்ணுவியே…. என்னாச்சு?”, என்று விசாலாக்ஷியுமே மகளின் போக்கை கண்டு ஆச்சரியப் பட்டுவிட்டார்.

அடுத்த நாள், அதாவது அர்ச்சனா வந்த ஐந்தாம் நாள் காலை, வந்த தொலைப்பேசி அழைப்பில் இன்னுமே தான் அவர் குழம்பிப் போனார்.

“நான்தான்அத்தை, வெங்கட் பேசறேன். எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு தான் கூப்பிட்டேன். மாமா எப்படி இருக்கார்?”, என்று கேள்விக் கணைகளாக தொடுத்த எக்ஸ்-மாப்பிள்ளையின் குரலில் தெரிந்த பரபரப்பிற்கும் காரணம் புரியவில்லை.

வெங்கட்டிடம் மேம்போக்காக பேசி சமாளித்து போனை வைத்த சில மணி நேரங்களில் காலை பத்து மணி அளவில் வீட்டு வாசலில் மணிச்சத்தம் கேட்க, கதவைதிறந்த விசாலாட்சிக்கு வந்த விருந்தாளியைக்கண்டு வியப்போ வியப்பு. விசாலாட்சியின் பின்னால் நின்று பார்த்திருந்த அர்ச்சனாவிற்கும் ஆச்சரியம் தான். ஆனால் அதற்கு மேல் தவிப்பும் அவஸ்தையுமாக ஆகிவிட்டது. தான் எங்கே வந்திருக்கும் இந்த நேரம் பார்த்து இப்போது தானா வர வேண்டும்?

வியந்த விழிகளால் நாவிற்கு பூட்டு போட்டது போல வந்தவரை ‘வாங்க’ என்று கூட அழைக்கத் தோன்றாமல் அமைதியாக இருக்க, விசாலாக்ஷி தான், “வாங்க வாங்க சம்பந்திம்மா. பண்டிகையும் அதுவுமா…. என்ன ஆச்சரியம்? வரப் போவதா முன்னாடியே ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா நான் இவரை வீட்டுல இருக்க சொல்லி இருப்பேன். அவரோட ரிட்டையர்ட் பிரெண்ட் ஒருத்தரை பார்த்துட்டு வர கொஞ்ச நேரம் முன்னால தான் கிளம்பி போனார்”, என்று பரபரப்பாக வரவேற்றார்.

வந்த ராஜலக்ஷ்மிக்குமே அர்ச்சனாவை அங்கே எதிர்பார்க்கவில்லை என்று அவரது சங்கடப் புன்னகையே காட்டிக் கொடுத்தது. கையில் கொண்டு வந்த ஒரு பெரிய சூட்கேசும் இன்னொரு சிறு பையுமாக ராமானுஜமும் பின்னோடு வந்தார்.

அவர் கையில் இருந்த சாமான்களை பார்த்த விசாலாட்சியும் அர்ச்சனாவும் வியப்பாக பார்க்க, ராஜலக்ஷ்மி தான் சங்கடம் குறையாமல் சொன்னார், “போன் பண்ணிட்டு தான் வரணும்னு நினைச்சோம்… திடு திப்புன்னு வந்து நிக்கரோம்னு தப்பா எடுத்துக்காதீங்க. டாக்சி புக் பண்ணிட்டு தான் வந்திருக்கோம். அரை மணியிலையோ ஒரு மணியிலையோ கிளம்பிடுவோம்”, என,

கேட்டிருந்த விசாலாக்ஷிக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது. “ரொம்பத்தான் நல்லா இருக்கு. வந்ததும் வராததுமா கால்ல வெந்நீரை கொட்டினது போல கிளம்பறேன்னு சொல்லிட்டிருக்கீங்க. கொஞ்சம் இருங்க, இவரோட பிரென்ட் வீட்டுலயும் போன் இருக்கு. ஒரு நிமிஷம் கூப்பிட்டு சொல்லிட்டேன்னா அவர் புறப்பட்டு வந்துடுவார். டி வி எஸ் 50 தான் கொண்டு போய் இருக்கார்”, என்று கூறி விட்டு போன் செய்யப் போக, செல்லும் முன்னால் மறக்காமல் மகள் பக்கம் ஒரு கண் ஜாடையும் கொடுத்து விட்டே சென்றார்.

மிலிட்டரி ஆபிசரின் கறாரிற்கு சிறிதும் குறையாத அம்மாவின் பார்வையில் இருந்து அவரது ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற, திறக்காத வாய்ப்பூட்டை திறந்து, “நீர் மோர் கொண்டு வரட்டுமா அத்…. ஆண்ட்டி, அங்கிள்?”, என்று வினவ,

வலித்த மனதை வெளியில் காட்டாமல், சாந்தமாகவே, “ஒண்ணும் வேண்டாம்மா, ஒரு டம்பளர் சில்லுன்னு தண்ணி கொண்டு வா போதும்!”, என்று முடிக்க, ராமானுஜமும் அதையே வழிமொழிந்தார்.

வெட்டி வேர் போட்டு வைத்த பானை நீரை இரு டம்பளர்களில் கொண்டு வந்து கொடுத்த அர்ச்சனா, அதற்குள் விசாலாட்சியும் போன் கால் முடித்து விட்டு வந்து விட்டதால் அதற்கு மேல் பேசுவதற்கு அம்மாவிற்கே வேலை கொடுத்துவிட்டு பார்வையாளராக மட்டுமே ஒதுங்கிக் கொண்டாள்.

பத்து பதினைந்து நிமிட பொதுவான சம்பாஷணைக்குள் ரங்கபாஷ்யமும் வீடு திரும்பி விட, மேலும் பத்து நிமிட பொதுவான பேச்சுக்கு பிறகு, கணவரின் கண்ணசைப்பை ஏற்று கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் ஏர்பாக் முதலியவற்றை முன்னால் நகர்த்தினார் ராஜலக்ஷ்மி.

விசாலாக்ஷி மற்றும் ரங்கபஷ்யதின் கேள்வியான பாவனையை கண்டு, “இதெல்லாம் அர்ச்சனாவுக்கு நீங்க கல்யாணத்தின் போது போட்ட நகைகள்…… பட்டுப் புடவைகள்…. வெள்ளிப் பாத்திரங்கள்….. அங்க பம்பாயில திருட்டு பயம் ஜாஸ்தின்னு அதிகம் கொண்டு போகாம இங்கேயே வைக்க சொல்லி இருந்தேன். கொஞ்ச நாள் தனிக் குடித்தனம் பண்ணி செட்டில் ஆன பிற்பாடு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு எடுத்துட்டு போக சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்….. அதுக்குள்ளே தான் என்னென்னவோ நடந்துடுத்து. அதுக்காக நகையும் வெள்ளிப் பாத்திரமும் பட்டுப் புடவையும் நாங்களே வச்சுக்க முடியாதே…. அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தோம்!”, யாரையும் குறையும் சொல்லாமல், அலுப்போ சலிப்போ வெறுப்போ காட்டாமல்….. இது தான் இன்றைய நடப்பு…. அதை சொல்கிறேன், என்று ஒரு செய்தி வாசிப்பாளரை போல சொன்னார் ராஜலக்ஷ்மி.

சும்மாவே பல காரணங்களால் பலமான வாய்ப்பூட்டு போடப் பட்டு இறுகிப் போயிருந்த அர்ச்சனாவிற்கு, இப்போது இதமான ஆச்சரியத்தில் என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தாள். ராஜலக்ஷ்மி அம்மாவின் அனுசரணையான போக்கு, முதல் முறையாக அவளது நெஞ்சை தொட்டது. காயப் பட்டு வலித்த மனதிற்கு மெல்ல நீவி விட்டது போல ஒரு இதம் பரவியது. இதம் பரவும் போது தான், இத்தனை நாள் வலித்து மரத்து போன ரணங்களின் வலிகள் இன்னுமே தீவிரமாக தெரிந்தனவோ! அல்லது, அந்த இதம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்ததால் ஏற்பட்ட ஆச்சரியமோ! ஏதோ ஒன்று கண்ணில் புருபுருவென்று நீர் சுரக்கத் தொடங்கியது!

வழக்கம் போல கேட்டிருந்த விசாலாக்ஷி மீண்டும் மகளின் புகுந்த வீட்டினரின் பக்கம் வரிந்து கட்டி சமாதானத்திற்கு வந்தவர், “அதுக்கென்ன சம்பந்தியம்மா. இந்த நகையையும் பணத்தையும் தூக்கிட்டு நீங்க என்ன இமயமலைக்கா ஓடிடப் போறீங்க? இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம்? எது எப்படி போனா என்ன? நீங்களும் நானும் நாத்தனார் மதனி உறவு முறைய மறக்கவேண்டாம்….. இவ மூளை கேட்டுப் போய் மடத்தனமா….. ஹ்ம்ம்… சரி சரி, யாரை நொந்து என்ன பிரயோஜனம்!”, அப்போதும் கிடைத்த நூலிழை சாக்கில் மறைமுகமாக பெண்ணையும் சாட மறக்கவில்லை.

இந்த ஐந்து நாட்களாக அம்மாவின் குத்தல்கள் அர்ச்சனாவை போதும் போதும் என்று நினைக்க வைத்தது என்றால், இப்போது விசாலாட்சியின் பேச்சு முழுமையாகவே அவளை ராஜலக்ஷ்மியின் பக்கம் சாயவைத்தது. தன்னை குறை கூறவும் ஒதுக்கி வைக்கவும் எல்லா காரணமும் நியாயமும் இருந்தாலும் இத்தனைக்கு பிறகும் இதமும் அனுசரணையும் சிறிதும் குறையாமல் பேசுகிறாரே!

அர்ச்சனாவைப் போலவே ரங்கபாஷ்யத்திற்கும் ராஜலக்ஷ்மி மற்றும் ராமானுஜத்தின் பேரில் பெருத்த அபிமானம் வந்துவிட, “இருக்கட்டும்…. இந்த புடவை, நகை இதுக்கெல்லாம் ஒண்ணும் அவசரமில்லை. நீங்க முதல்ல சாப்பிடுங்க. இத்தனை தூரம் வந்துட்டு சாப்பிடமா போகக் கூடாது. விசா…..”

“இல்ல… இல்ல…. நாங்களே சொல்லாம கொள்ளாம…”

“அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமே இல்லை சம்பந்தி அம்மா. நீங்க இங்க பேசறதுக்குள்ள இன்னொரு ரெண்டு ஆழாக்கு சுட சாதம் வடிச்சிடுவேன். மற்றதெல்லாம், நாலு பேர் சாப்பிடற அளவு தான் செய்திருக்கேன். நீங்க கண்டிப்பா இருந்து சாப்பிட்டுட்டு தான் கிளம்பணும்”, விசாலாக்ஷி சிறு குரலில் சொன்னாலும் உறுதி குறையாமல் சொல்லிவிட்டு, சேலைத் தலைப்பை செருகிக் கொண்டு சமயலறைக்கு விரைந்தார்.

சங்கடத்தோடு மறுத்து சொல்ல வாயெடுத்த ராஜலக்ஷ்மியை அவருக்கு அருகே வந்து அமர்ந்த அர்ச்சனாவின் வலுவான கைப் பிடி தடுத்தது.

சட்டென குரலை அடக்கிய ராஜலக்ஷ்மி, கேள்வியாக அர்ச்சனாவை பார்க்க, அர்ச்சனாவும், “இருந்து சாப்பிட்டுட்டு வெயில் தாழ கிளம்பலாம் அத்தை! நாலு மணிக்கு கிளம்பினா கூட, சாயந்திரம் விளக்கேற்ற ஊருக்கு போய் சேர்ந்துடலாமே”, பிசிறற்ற குரலில் ஒலித்த இதமான தன்மைக்கு நேரெதிராகக் கண்கள் வற்புறுத்தலாக வேறொரு செய்தியை சொன்னது.

அதற்குப் பிறகு அன்று மதிய உணவின் போதும், அதற்குப் பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த போதும் ராஜலக்ஷ்மியின் ஆத்மார்த்த அன்பு அர்ச்சனாவிற்குத் தெளிவாகப் புரிந்தது. மூன்று மணிக்கு காபி குடித்தானதும், “சரி….. அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்! இப்போ கிளம்பினா தான் இருட்டறதுக்குள்ள ஊருக்கு போய் சேர முடியும்!”, என்று ராமானுஜம் கிளம்ப எத்தனிக்க,

“அர்ச்சனா, முடிஞ்சா மறுபடியும் பம்பாய்க்கு கிளம்பறதுக்குள்ள ஒரு முறை மதுராந்தகத்துக்கு வந்துட்டு போ! இன்னும் எத்தனை நாள் இருப்பே?”, வழக்கம் போல பாசமாக அழைத்தாலும் அவள் வருவாளா என்ற நிராசையும் சேர்த்தே ஒலித்தது ராஜலக்ஷ்மியின் குரலில்.

“ஒரு வாரம் அத்தை!”

“ஒ…. இப்போ வர முடியாது…. பண்டிகையாச்சே! உங்கம்மாவுக்கு பண்டிகை சமயத்துல உன்னை அனுப்ப கஷ்டமா இருக்கும்….. அதுனால, வர்றதா இருந்தா திரும்பிப் போகிறதுக்கு முன்னால தான் வர முடியுமோ என்னவோ….”, ராஜலக்ஷ்மி அம்மா யோசனையாக நிறுத்த,

“அதெல்லாம் பரவாயில்லை சம்பந்தி. அவளுக்கு அங்க வரணும்னு இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. அவளை இங்கேயே இருக்க சொல்லி எல்லாம் நான் வற்புறுத்த மாட்டேன். மற்ற எதுல நாம சொன்னதை இவங்க கேட்டுடாங்க….?”, விசாலாட்சியின் விட்டேற்றியான பதில் அர்ச்சனாவிற்கு ஊசியாய் குத்தியது.

கண நேரத்தில் தீர்மானம் செய்தாள்! “நிச்சயம் இப்போவே உங்களோட வர்றேன் அத்தை. கொஞ்சம் இருங்க, நான் போய் என்னோட டிரெஸ் எல்லாம் பேக் பண்ணி கொண்டு வர்றேன்”, சொன்னது போலவே அடுத்த அரை மணி நேரத்தில் சூட்கேசினுள் மூட்டை கட்டின உடைகள் மற்றும் சாமான்களோடு புறப் பட தயாராகி விட்டாள்.

////////////////////////////////////

கடந்த இரண்டு மாதமாகவே ஓய்வில்லாத வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட வெங்கட்டிற்கு ஒவ்வொரு நாளுமே எந்தவிதமான உற்சாகமும் இல்லாத சூன்யமாகவே இருந்தது. கோபதாபங்களும் ஆத்திரத்தில் பரிமாறிக் கொண்ட அர்த்தமற்ற ஆயிரம் வார்த்தைகளுமாக இல்லறம் ஓடினாலும், தினசரி சூரிய உதயமும் அஸ்தமனமும் கால ஓட்டம் மாறாமல் எவ்வளவு நிச்சயமாக நிகழ்கிறதோ, அத்தனை ஸ்திரமாக அர்ச்சனாவின் இருப்பும் அந்த வீட்டில் இருந்து வந்தது.

சம்சார போராட்டத்தின் உச்சகட்டத்தில் வெவ்வேறு படுக்கை அறைகள் என்று அர்ச்சனா சென்ற போது கூட, அதே வீட்டில் சில பல அடிகள் தொலைவில் தான் இருக்கிறாள் என்ற நிம்மதியான உணர்வு அவனுக்கு அடிப்படை பலத்தையும் நிறைவையும் கொடுத்தது. அடுத்த நாள் காலை வேலைக்குக் கிளம்பும் முன்னாலோ அன்று மாலை வேலை விட்டு வந்த பிறகோ அவளது நடமாட்டம் வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் பார்த்து, கேட்டு, உணர்ந்து, நுகர்ந்து இருக்கிறான்.

இத்தனை நிறைவையும் அனுபவிக்கும் போதே, மனதின் மூலையில் ஒரு நமநமப்பு தோன்றத் தான் செய்தது. நாளடைவில் அது விருத்தி ஆகி, அவனது மனசாட்சியே அவனை இடித்துரைக்கவும் தொடங்கி விட்டது. அவளது பங்கிற்கு தவறுகள் இருந்தாலும், தன் பக்கத்தில் இருந்து இன்னமும் சிறிதளவு பொறுமையும் அனுசரணையும் இருந்திருக்க வேண்டும் என்பதே அந்த இடித்துரைத்த மனசாட்சியின் முக்கிய செய்தி.

ஆனால், உடனேயே இன்னொரு சைத்தானும் “ஏன் நான் மட்டும் தான் விட்டுக் கொடுத்திருக்கணுமா? அவ விட்டுக் கொடுத்திருக்க கூடாதா? கொஞ்சமாவது இந்த கல்யாணம் நிலைக்கணும்னு அவளுக்கு ஆசை இருந்திருந்தா அவ நான் சொன்ன வார்த்தைகளுக்காக எல்லாம் உடனே கோவிச்சுட்டு மூஞ்சியை தூக்கி வச்சிருந்திருக்க மாட்டா!”, என்று குதர்க்க வாதம் பேசியது.

காலக் கிரமத்தில் மனசாட்சியின் ஓசை பெரும் ஓசையாகிவிட, “அவ அப்படி மூஞ்சிய தூக்கி வச்சுக்கறதுக்கும் நான் தான் காரணம்! நான் போட்டு இப்படி குத்தி குதறினா யாருக்கு தான் ரோஷம் வராது! இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்துக்கும் பிச்சு பிடுங்கறதுக்கு அவ ஒரேயடியா விலகிப் போக நினைச்சாக் கூட ஆச்சரியப் படறதுக்கில்லை. இப்படிப் பட்ட சிடுமூஞ்சியோட குப்பை கொட்டறதுக்கு பதில் டைவோர்சின்னு பேர் கிடைச்சாக் கூட பரவாயில்லைன்னு நினைக்கறாளோ என்னவோ? அதான், போன முறை சண்டை வந்தப்போ தனி படுக்கை அறை வரை போய்ட்டா….. ஒத்துமையா சேர்ந்து வாழணும்னு அவ ஆசைப் பட அவளுக்கு நான் என்ன மாதிரி வாய்ப்பு கொடுத்தேன்? அடுத்த முறை சண்டை சச்சரவுன்னு வந்தா நானே டைவர்ஸ் பண்ணிடலாம்னு அவ கிட்ட கேட்டுடப் போறேன்!”, என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

துரதிர்ஷ்ட வசமாக மனதின் மூலையில் சிறு குரல் கொடுத்துக் கொண்டிருந்த சைத்தானுக்கு மனசாட்சியின் இந்த நொந்த முடிவு சாதகமாகிவிட்டது தான் வெங்கட்டின் வாழ்விலும் நாவிலும் பாதகமாகிவிட்டது!

அடுத்தமுறை சண்டை என்று வந்தபோது டைவர்ஸ் கேட்க வைத்தது!

சைத்தானின் குழந்தைகளான ஈகோவும் சுயகௌரவமும் கூட்டு சேர்ந்து, எத்தனை பேர் எத்தனை விதமாக கெஞ்சல், சமாதனம், வாக்குவாதம், சண்டை என்று முயன்றும் அவர்களது முயற்சிக்கு பிடி கொடுக்காமல், விவாகரத்து போட்டு அர்ச்சனாவை நிரந்தரமாக பிரிய முடிவு செய்யவைத்தது.

இந்த கட்டம் வரை, வெங்கட்டிற்கு தன் தவறுகள் தெரிந்த அதே அளவு, அவளது குறைகளும் தவறுகளும் அதனால் விளைந்த கோப தாப மனஸ்தாபங்களும் சேர்ந்தே வந்து அவனது உணர்வுகளை ஆட்சி செய்தன.

ஆனால், அவள் ஹாஸ்டலுக்கு சென்ற போது தான் நிதர்சன வாழ்வில் அர்ச்சனா இல்லாத வெறுமை அவனது மடத்தனத்தை புரிய வைத்தது. அதற்கும் மேலாக, அடித்துப் பிடித்து வந்து சேர்ந்த பெரியவர்களும் ஊருக்கு கிளம்பிவிட, தினம் தினம் அவனை தின்று தீர்த்த தனிமையும் கூட அவனை உடைத்துப் போட்டது. சண்டைகளுக்கும் கடுமையான வார்த்தைகளுக்கும் பயந்து, அவசரப் பட்டு விவாகரத்து என்று கோழைத்தனமாக முடிவெடுத்தது விஸ்வரூபம் எடுத்து அவனை சாடியது.

சொல்லி வைத்தது போல, அர்ச்சனாவும் அதற்குப் பிறகு அவனை பார்ப்பதை தவிர்த்தாள். இவனது சம்பளத்தில் இருந்து ஐம்பது சதவீதம் சென்று சேர்ந்த அவளது அக்கவுன்ட் மற்றும் அந்தப் பணம், தொடப்படாமலே இருந்தது.

ராஜலக்ஷ்மி ஊருக்கு கிளம்பிய போது பார்க்க விரும்புவதாக சொன்ன போது கூட அவர்களை பிளாட்டிற்கு சென்று வழியனுப்பாமல் ஸ்டேஷனில் வந்து சந்தித்து வழியனுப்பினாள் அர்ச்சனா. தொடக்கத்தில் அவன் சென்று பார்க்காவிட்டாலும் அவளாக கூட தொடர்பு கொள்ள முயலவில்லை என்பதும் வீட்டிற்கு போன் செய்து பெரியவர்களிடம் கூட பேச நினைக்கவில்லை என்கிறதும் வெங்கட்டிற்கு உறுத்தலாகவே இருந்தது. சரி, இன்னமும் காயப் பட்ட மனது என்று அதை பெரிது படுத்தாமலே விட்டு, அவன் போன் செய்து அவளது நலத்தை விசாரித்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் என்ன முயன்றும் மீண்டும் பிளாட்டிற்கு வருவதை தவிர்த்தவள், ராஜலக்ஷ்மியை வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்தபோது எரிச்சலில் மிதந்தான் வெங்கட்.

அவளாக ஒதுங்கி இருக்க நினைத்து விட்ட போது இனி இங்கே வர சொல்லி வற்புறுத்த கூடாது, அதே போல, அடிக்கடி அவளை தொலைபேசியில் அழைத்து தொல்லை பண்ணுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் முடிவெடுத்தான். அதன் விளைவாக, அவளை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் பேச முடியாவிட்டாலும் அவளது அலுவலகம் முடியும் நேரத்தில் சாலையின் மறுபக்கம் பைக்கில் வந்து நின்று அவள் வந்து போவதை கவனித்திருக்கிறான். அப்படி ஒன்றும் அவளும் சிரித்து பேசி மகிழ்ந்து இருந்தது போல காண முடியவில்லை.

பம்பாயின் காலை நேர அவசர நெரிசலில் இடிபட்டு ‘பாயிண்ட் – டு – பாயிண்ட்’ பஸ்சில் இருந்து இறங்கிய அர்ச்சனாவை காண கஷ்டமாக இருக்க, அடுத்த நாள் காலை சீக்கிரம் அலுவலகத்திற்கு கிளம்பி அர்ச்சனா ஹாஸ்டலில் இருந்து புறப்படும் நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாகவே ஹாஸ்டல் வாசலில் சென்று நின்றிருந்தான்.

அன்றைய போராட்டத்திற்கு செல்லும் போர்வீரனை போல ஒரு முகபாவனையோடு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்த அர்ச்சனா, ஹாஸ்டல் வாயிலில் வெங்கட்டை எதிர்பார்க்கவில்லை என்பது அவளது திகைத்த பாவனையிலேயே தெரிந்தது. Please do not copy or distribute all or any part of this story electronically or otherwise. Published only in http://www.amuthas4ui.wordpress.com All rights of this copyrighted story reserved by the author only.
“தினம் காலை டிரைன், பஸ் என்று எல்லாத்திலையும் ஒரே நெரிசல். அத்தனை கஷ்டப் பட்டு இடிபட்டு நீ ஆபீஸ் போயிட்டு இருக்கிறதை பார்க்க எனக்கு வேதனையா இருக்கு! அதான் இன்னைக்கு நான் சீக்கிரமாகவே கிளம்பி வந்துட்டேன். நானே இனிமேல் தினம் உன்னை ட்ரோப் பண்ணறேன்….. வா….. வண்டியில ஏறிக்கோ”, என்று கூற, நிஜமாகவே அந்த போர்வீரனுக்கு உரிய வேகமும் ஆக்ரோஷமும் வந்தது அர்ச்சனாவிற்கு.

“எதுக்கு இப்போ இந்த மாதிரி உருகல் எல்லாம்? எனக்கு கஷ்டமா இருக்குன்னு உன்கிட்ட…. உங்க கிட்ட வந்து நான் புலம்பினேனா?”, நெறிப்பட்ட புருவத்திற்கு ஈடாக வார்த்தைகளும் கடித்து துப்பியபடியே தான் வந்தது.

“இல்ல…. நீயா ஒண்ணும் சொல்லலை. ஆனாலும்……”, என்ன சொல்லி அவளுக்கு புரியவைப்பது என்று யோசித்துவிட்டு, “பம்பாய் டிராபிக் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியுமே அர்ச்சனா. எதுக்கு இன்னமும் இந்த வேலையை தொடரணும்? நான் தான் அக்கவுன்ட்’ல பணம் போடறேன் இல்லையா? இத்தனை கஷ்டப் பட்டு வேலைக்கு போய்தான் ஆகணுமா?”

ஒரு கணம் அவனை வெறித்துப் பார்த்தவள், “வேலைக்கு போய் கஷ்டப் பட்டு பணம் சம்பாதிக்கிரதுன்னா என்னன்னு எனக்கும் தெரியரதுல என்ன தப்பு வெங்கட்? அப்போ தானே பணத்தோட அருமை தெரியும்!”

தான் அன்று கோபத்தின் பிடியில் உபயோகித்த அதே வார்த்தைகள்! இன்று பிரிந்த பிறகு கேட்கும் போது குற்ற உணர்வு அழுத்தியது.

“அர்ச்சனா…….”

“ஐயம் பைன் வெங்கட்! ஆபீஸ்’க்கு லேட் ஆச்சு. நான் கிளம்பணும்”, என்று விட்டு அவனை சுற்றிக் கொண்டு செல்ல முற்பட்டால்.

“அர்ச்சனா… ஒரு நிமிஷம்! சாயந்திரம் ஓவர்டைம் பண்ணிட்டு திரும்பிப் போகும் போது பஸ்’சுல டிரைன்ல ஏறும் முன்னால் கூட்டம் அதிகம் இருந்தால் டாக்சி பிடிச்சு போய்டு அர்ச்சனா. தவிர, பணம், ஹன்ட்பாக் மற்ற பாக் எல்லாமே பத்திரம். பிக் பாக்கட்ஸ் ஜாஸ்தியா இருப்பாங்க”, என்று கூறினவன், “ஜாக்கிரதை அர்ச்சனா. கவனமா இருந்துக்கோ!”, என்று குரல் தழுவி தழுக்க அறிவுரை சொன்னான்.

தலையை சரித்து, “இதுக்கு பேர் தான் பாட் கால் தி கெட்டில் ப்ளாக் என்கிறதா வெங்கட்?”, என்று சொல்லிவிட்டு அவன் முகம் கருக்க வெறிப்பதை கண்டு தலை சிலுப்பில் உதறிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்.
அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அவனாலும் சென்று பார்க்கவோ தொலை பேசியில் பேசவோ முடியவில்லை. முதல் ஹியரிங்கிர்க்கு அழைத்த போது கூட அவளது நேரத்தை மாற்றி வைத்துக் கொண்டு அவனை சந்திப்பதை தவிர்த்தாள்.

எதேச்சையாக இன்று காஞ்சிபுரத்திற்கு தொலைபேசியில் அழைத்த போது தான் அர்ச்சனா அங்கே சென்றிருப்பது தெரியவந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக கேட்காமல் இருந்த அவளது குரல் அன்று கேட்டபோது ஆண்மகன் என்றும் பாராமல் கண்கலங்கி வந்தது.

தான் என்று வெளிப் படுத்திக் கொண்டால் அவள் நிச்சயம் அதை ஒன்றும் ரசிக்கப் போவதில்லை என்று புரிந்ததால் ஒன்றும் பேசாமலேயே வைத்துவிட்டான்.

அதே போல, அவளே ஹாஸ்டல் வாழ்கையின் வெறுமையில் இருந்து விடுபட என்று அவளுடைய பெற்றோரை காண சென்றிருக்கிறாள். கடந்த சில முறைகளாக அவள் தன்னிடம் நடந்து கொண்ட முறையில் இருந்தே அவளது ரணமும் வேதனையும் தன்னை கான்பதாலும் தன்னோடு பேசுவதாலும் அதிகமாகிறது என்றும் புரிகிற போது எதற்காக அவளை தொந்திரவு செய்யவேண்டும், என்றும் தோன்றியது.

அடுத்த நாளே அலுவலகத்தில் வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஏதேனும் ப்ராஜெக்ட் வந்தால் அதற்கு செல்ல தான் தயார் என்று சொல்லி வைத்து, அப்படி ஏதும் ப்ராஜெக்ட் வரும் பட்சத்தில் தனக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.

 

2 thoughts on “உன்னையல்லால் வேறே யார்? – இரண்டாம் பாகம்”

  1. ,இரண்டு பேருமே சாரி என்ற ஒரு வார்த்தையை சொல்லி இருக்கலாமே

    Like

Leave a comment