உன்னையல்லால் வேறே யார்? – இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் பத்து

 

அடுத்த நாள் – ஞாயிறு – 01/12/1992

அப்பா அம்மா புறப்பட தயாராகிக் கொண்டு இருக்க, சமயலறையில் அவர்களுக்கு ரயிலில் கொண்டு செல்ல சப்பாத்தி, மிளகாய் பொடி தடவின இட்லி, தக்காளி தொக்கு மற்றும் பகாளாபாத் ஆகியவற்றை தயாரித்து அகல அகல பேசின்களில் போட்டு ஆற வைத்துக் கொண்டிருந்தனர் அர்ச்சனாவும் ராஜலக்ஷ்மியும்.

“மீதி இருக்கிற தக்காளி தொக்கை பிரிட்ஜுல எடுத்து வச்சிடு அர்ச்சனா. இனிமேல் நான் பார்த்துக்கறேன். நீ போய் கொஞ்ச நேரமாவது உங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டு இரு. கார்த்தால ஏழு மணியில இருந்து இங்கேயே நின்னுட்டு இருக்கே. இப்போ மணி ஒன்பதரை! மத்தியானம் சாப்பிட்டானதும் அவங்க கிளம்பணும். அதுக்குள்ளே, அவங்களோட ரெண்டு வார்த்தையாவது பேசிட்டு வா…. போ, ஓடு!”, என்று விரட்டின ராஜலக்ஷ்மியின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல் பிரிட்ஜில் வைக்க வேண்டியவற்றை வைத்து விட்டு அம்மா அப்பாவை தேடி சென்றாள்.

பெட்டியில் அடுக்க வேண்டியவற்றை அடுக்கி விட்டு, ஏர் பேக் ஒன்றில் வைக்க முடிந்த அளவு வைத்துவிட்டு எடுத்துப் போக வேண்டிய சாப்பாட்டு பொட்டலங்களை வைக்க பையில் இடம் இருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் விசாலாக்ஷி.

“ஏம்மா, இதோ, அப்பாவோட சின்ன சூட்கேசுலையே இன்னும் நிறைய இடம் இருக்கே. அப்பறம் ஏன் உங்க எல்லா புடவை துணிமணிகளையும் ஒரே சூட்கேசில போட்டு அடைச்சு வச்சிருக்கீங்க?”

“ஆமா உங்கப்பா தானே, அவர் சூட்கேஸ், பை எதிலையும் என்னோட கர்சீப் கூட கொண்டு வர மாட்டார். கேட்டா, மூட்டை தூக்காதேன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவார். இவர மாதிரி ரெண்டு பாண்டு ரெண்டு ஷர்ட்டு மட்டும் எடுத்து வச்சுட்டு என்னால எந்த ஊருக்கு வர முடியும்?”

வெகு நாட்களுக்கு பிறகு கேட்கும் அம்மா அப்பா முட்டல் மோதலை மெல்லிய புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா, ஒன்றும் பதில் சொல்லவில்லை. இது இன்று நேற்று நடப்பதில்லை….. வீட்டில் வழக்கமாக நடக்கும் வாக்கு வாதங்கள் தான். அம்மா சற்றே பட படவென்று பேசும் ரகம்; அப்பாவோ எண்ணி எண்ணி தான் பேசுவார், குரலும் மிக அருகே சென்று கேட்டாலேயொழிய அதிர்த்து ஒலிக்காது. ஆனாலும், அபூர்வமாகவே வெளி வரும் அப்பாவின் வார்த்தைகளுக்கு இருக்கும் உறுதியும் சக்தியும் அம்மாவின் படபடப்பை குலைத்துவிடும். “இப்படி சொல்லிட்டார் பாரேன்…. என்னை போய் இப்படி சொல்லிட்டார் பாரேன்”, என்று மறுகி விடுவார் அம்மா.

“ஆனாலும் தான் என்ன, முப்பது வருட தாம்பத்யம் நிறைவாக தானே நடத்தியிருக்கிறார்கள். என்னைப் போல, அசட்டுத்தனம் எதுவும் “, நினைத்துக் கொண்டே வந்த எண்ண ஓட்டங்களுக்கு திசை தடுமாறியதால் வழி மாறிப் போய் அம்மா அப்பா இல்வாழ்க்கையை விட்டுவிட்டு ஆற மறுத்த புண்ணில் அமிலத்தை ஊற்றப் பார்த்தது.

எங்கெங்கோ செல்வதற்கு முன்னால் லகானை கையில் எடுத்து, அவள் பேச தொடங்கும் முன்னால் விசாலாட்சியே, “அர்ச்சனா, அடுத்து நீ எப்போ ஊருக்கு வரப் போகிறே?”

“ஒரு ரெண்டு மாசம் போகட்டும்மா அதுக்கப்பறம் வரேன்”

“டிசம்பர் ஜனவரியில் நாலு நாள் லீவு சேர்ந்தாற்போல வருமே, அப்போ வாயேன்”, மீண்டும் மீண்டும் வற்ப்புறுத்தினார் விசாலாக்ஷி .

“லீவு கிடைக்குமான்னு பார்க்கிறேன்மா”, இதமாகவே அர்ச்சனா ஒத்திப் போட்டாள் பதிலை.

“சரி, கிடைச்சதும் சொல்லு, நான் ஸ்ரீதரையும் மைத்ரேயியையும் லீவு போட்டு வர சொல்லறேன். எல்லாருமா ஒரு நாலு நாள் சேர்ந்து இருக்கலாம்”, அம்மா சொல்வது போல எல்லாமே நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அப்படி லீவு போட்டுவிட்டு ஊருக்கு போனதுமே அவர் மாப்பிள்ளை புராணத்தையோ ஊரில் எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க, நீ மட்டும் தான் இப்படி அசட்டு காரியம் செஞ்சுட்டு வந்திருக்கே என்று பாடும் பல்லவியையோ கேட்கவே வேண்டி வருவது அர்ச்சனாவிற்கு மட்டுமே நடப்பது.

கீழ் உதட்டை கடித்த படி பேசாமல் இருக்க, அவளது தயக்கத்தை புரிந்து கொண்ட தாய் மனம், “இதோ பாரு அர்ச்சனா, நீ உன் சொந்த கால்ல நிற்க பழகணும்னு தான் நான் உன்னை இப்படி கண்டிக்கறது. அம்மா, நான் நல்லதுக்கு தான் சொல்லுவேன். உன் கிட்ட நான் கெட்ட பேரு வாங்கினாலும் பரவாயில்ல, மற்ற யாரும் வந்து வளர்த்திருக்கா பாரு ஒரு பெண்ணை அப்படின்னு குறை சொல்ல விட்டுட மாட்டேன்”, என்று சொன்னவர், இப்படி முதல்லையே நான் கண்டிச்சு வச்சிருந்தா நீயும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு உன் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து நிற்க மாட்டே, ஒரே பொண்ணு என்று நான் செல்லம் கொடுத்ததுனால தான் நீ இப்படி பிடிவாதமா இருக்கியோன்னு தோணறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

விவாகரத்து என்று அர்ச்சனாவும் வெங்கட்டும் முடிவு செய்த போது, அர்ச்சனாவின் அப்பா ரங்கபாஷ்யம் முதலில் சுட்டிக் காட்டினது விசாலாட்சியின் பக்கம் தான். “ஆடி மாசம்னு அவ வந்து இங்க தங்கினப்போவும் சரி அதுக்கப்பறமும் சரி அவ புகுந்த வீட்டு மனுஷங்களோட எத்தனை தூரம் ஒட்டி பழகறா என்று கவனிச்சு திருத்தியிருக்கணும். அவளோட அலட்சியம் அங்க இருந்து ஆரம்பிச்சு இருக்கு. அவளுக்கு கிடைச்ச மாமியார் அத்தனை அருமையானவங்களா இருக்கக் கொண்டு நம்ம மானம் சந்தி சிரிக்காம போச்சு. இல்லேன்னா, சம்பந்தியம்மாவோ மாப்பிள்ளையோ நம்ம மானத்தை கப்பலேத்தி இருப்பாங்க. உன் பெண்ணோட ஒவ்வொரு வாரமும் டிரங்கால் போட்டு அப்படி என்னதான் பேசுவே? சமையல் குறிப்பும் கை வேலைய பத்தியும் அரட்டை அடிப்பே போல இருக்கு. அதான் அவளும் கொஞ்சம் கூட புகுந்த வீட்டுல பொறுப்பா நடந்துக்கணும்னு தெரியாம இருந்திருக்கா. பொண்ணு கல்யாணம் பண்ணிப் போனா அம்மாக்கள் இந்த மாதிரி தான் அறிவுரை சொல்லி நாலு விஷயமும் கத்துக் கொடுப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். நீ உன் பொண்ணு அவ வாழ்கையை தொலைச்சிட்டு வர்ற வரை கனகாம்பரம் பறிச்சிட்டு நின்னிருக்கே….. இப்போ கைய பிசைஞ்சிட்டு இப்போ என்ன செய்யறதுன்னு பினாத்தற….”, என்று தொடங்கி விசாலாட்சியை வறுத்தெடுத்து விட்டார்.

குழந்தைகள் நல்லதை செய்தாலும் அந்த பெருமை பெற்றோரை தான் சேரும், தவறுகள் செய்தாலும் அந்த குற்றம்(அவர்களை சரியான நேரத்தில் திருத்தி நல்வழிபடுத்தாத குற்றம்) பெற்றோரை தான் சேரும் என்று விசாலாட்சிக்கு புரிந்தது. ஆனாலும், சொன்ன வரை கூட அர்ச்சனா பெரிதாக எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதை கணவரிடம் எங்கிருந்து சொல்வது?

ஆனால், தன்னெஞ்சறிவது பொய்யற்க என்ற கூற்றுக்கு ஏற்றது போல, மகளை பற்றியும் தெரிந்தவர் ஆனதால், தான் கண்டிக்காதது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மகள் அவசர கோலம் அள்ளித் தெளித்தார் போல என்று கல்யாண உறவை முடித்துக் கொண்டு வந்த பிறகு அம்மா வீட்டிற்கு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொள்ள கூடாது.
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.
மாப்பிள்ளை கொடுமைக்காரனாகவோ அடி உதை என்று இவளை கஷ்டப்படுத்துபவனாகவோ இருந்தால் அது வேறு விதம். இங்கே மாப்பிள்ளையை குறை சொல்லவே முடியாது! அப்படி இருக்க, பொறுத்துப் போகும் குணமும் அனுசரித்துப் போகும் குணமும் இல்லாமல் அர்ச்சனா திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு வந்தால் அம்மா வீட்டில் எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது.

வாழ்க்கையில் தனிமை என்பதும் ஒற்றைக் காலில் நிற்கும் போது வரும் நடை முறை கஷ்டங்களும் அவளுக்குப் புரியணும். அது தான் மனதில் முதிர்ச்சியையும் எல்லாவற்றையும் அனுசரித்து போகும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் அவளுக்கு கொடுக்கும். அப்படி அந்த மாதிரியான மனப்பான்மை வரவேண்டும் என்றால் நாம் நம் மனதை கல்லாக்கி கொண்டு அவளிடம் கண்டிப்பாக தான் இருக்க வேண்டும்.

விசாலாட்சியின் உள்மனம் இப்படி நினைத்திருக்க, அப்பா அம்மாவை கண்டித்தது தெரிந்த அர்ச்சனாவிற்கு அம்மாவின் எண்ண ஓட்டங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே, விசாலாக்ஷி அவர்கள் இருவருக்குமாக இடைவெளியை அதிகப்படுத்தியபோது அர்ச்சனாவாக அந்த இடைவெளியை குறைக்க முயலவில்லை. தன்னால் சுயமாக தன் காலில் நிற்க முடியுமா என்று தனக்கே வைத்துக்கொண்ட பலப் பரீட்சையாகவே நினைத்துக் கொண்டாள்.

***********மதியம் சாப்பிட்டானதும் இரண்டு டாக்சி வைத்துக்கொண்டு தாதர் ஸ்டேஷன் சென்று விசாலாக்ஷி ரங்கபாஷ்யம் தம்பதிகளை ரயிலேற்றி விட்டனர். “சம்பந்தி நான் சொன்னது நினைவிருக்கு இல்லையா? மறந்துடாதீங்க!”, “அர்ச்சனா, டிசம்பர்ல ஊருக்கு வரேன்னு சொல்லி இருக்கே. லீவ் எடுத்ததும் மறக்காம சொல்லு. நான் ஸ்ரீதர், மைத்ரேயிகிட்டேயும் பேசணும். மாப்பிள்ளை உடம்பைப் பார்த்துக்கோங்க”, என்று அவரவர்க்கு தகுந்த செய்திகளை கன காரியமாக உசுப்பிவிட்ட பிறகே சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தார் விசாலாக்ஷி.

“அர்ச்சனா, உடம்பைப் பார்த்துக்கோ. வெங்கட், முடியும்போது அப்பப்போ போன் பண்ணுங்க”, என்று மட்டும் சொல்லிவிட்டு மகளின் கைகளுக்கு ஒரு கூடுதல் அழுத்தமும் வாஞ்சையான புன்னகையும் வழங்கி விட்டு அமைதியானார் ரங்க பாஷ்யம்.

புத்தக ஸ்டாலில் இருந்து கொஞ்சம் மாத வார நாவல்கள் வாங்கி வந்த வெங்கட், பத்திரம் பத்திரம் என்று சொல்லி அனுப்பி வைக்க மெட்ராசை நோக்கி தாதர் எக்ஸ்ப்ரஸ் புறப்பட்டது. ஸ்டேஷனில் இருந்து திரும்பி வரும் வழியில் ராஜலக்ஷ்மி கேட்டுக் கொண்டதற்கு இணங்க குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு பிறகு பிளாட்டிற்கு வந்தனர்.

திட்டமிட்டு செல்லாமல் திடீரென்று கோவில் என்றதும் முகம் மாறி புருவம் சுளுக்கின அர்ச்சனாவை பார்த்துவிட்டு தயங்கினான் வெங்கட். ஆனால், மறுப்பேதும் சொல்லாமல் ராஜலக்ஷ்மியின் வார்த்தைகளுக்காக கோவிலுக்கு வந்தவள் பெரிதாக சுவாமி கும்பிடவில்லை என்றாலும் கை கட்டி நின்று விட்டு மற்றவர்களோடு சேர்ந்து பிரதக்ஷணம் செய்து விட்டு வெளியேறினாள்.

மற்றவர்களும் வந்து சேருவதற்காக கோவில் வாசலில் காத்திருந்த போது, எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி மீண்டும் ஹாஸ்டல் செல்லலாம் என்று யோசிக்க தொடங்கி இருந்தது அர்ச்சனாவின் மனம்.

பிளாட்டிற்கு வந்து சேர்ந்ததுமே ரொம்ப அசதியா இருக்கு என்று கூறி விட்டு ராஜலக்ஷ்மி படுக்க சென்று விட, இந்தியா டுடேயில் க்ராஸ்வர்ட் பசில் ஒன்றை வைத்துக் கொண்டு ராமானுஜம் ஈசி சேரில் அமர்ந்து விட்டார்.

“சரி நானும் கொஞ்ச நேரம் படுக்கறேன்”, என்று முணுமுணுத்துவிட்டு அறைக்கு சென்றாள் அர்ச்சனா. ஹாஸ்டலுக்கு புறப்பட்டு விட வேண்டும் என்று இருந்தாலும், தன் அப்பா அம்மா கிளம்பும் வரை இருந்து விட்டு உடனே புறப்பட்டுவிட்டாள் என்று எக்ஸ் மாமியார் தவறாக நினைத்துக் கொள்ளுவாரோ என்ற யோசனையில் சிறிது நேரம் கழித்து கிளம்பலாம் என்று ஒத்திப் போட்டாள்.

ராஜலக்ஷ்மி அம்மாளின் எண்ணங்களும் நினைப்புகளும் முக்கியமாக இருந்திருக்கவேண்டிய சமயத்தில், அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இருந்தவள், இப்போது ஒதுங்கிப் போகலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அவர் மனம் நோகக் கூடாது என்று யோசிக்க வைக்கிறது. மனித மனத்தின் விநோதங்களை என்னவென்று சொல்வது!!!

தலையணையை சாய்த்து வைத்து விட்டு படுக்க ஆயத்தமான போது, கதவு தட்டும் ஒலி கேட்டு, சென்று திறந்தாள்.

வெங்கட்டை கண்டதும் வியப்பாக பார்த்தாலும் அவன் முகத்தின் பாவம் இன்னுமே குழப்பியது.

“என்ன வெங்கட்?”, என,

வெங்கட்டின் காது மடல்கள் சிவந்திருக்கின்றனவா? வெட்கப்படுகிறானா, என்ன? “சின்னு, உனக்கு…… ஹான்ட்பாக்ஸ் பிடிக்குமேன்னு யூ எஸ்’சுல இருந்து வரும் போது வாங்கி வந்தேன். அங்க ஷெல்புல வச்சிருக்கேன். உள்ள…. உள்ள வந்து எடுத்துக் கொடுக்கட்டுமா?”, என்று கேட்டுவிட்டு அவள் மறுப்பாக கூட சொல்லக் கூடும் என்று நினைக்கவும் இல்லாதது போல நாலே எட்டில் ‘பில்ட் இன் வார்ட்ரோபை’ திறந்தவன் உள்ளே மேல் தட்டில் வைத்திருந்த மூன்று ஹான்ட்பாகுகளையும் அவள் பக்கம் நீட்டினான்.

Gucci, Prada மற்றும் Chanel என்று மூன்று முன்னணி பிராண்ட் ஹான்ட்பாகுகளை காட்டினவனை வெறித்துப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.

அமெரிக்கா சென்ற போதும் என்னை தான் நினைச்சியா என்று தான் நேற்று அர்ச்சனாவை கேலி செய்தது போக, இன்று தானே அவளை தான் அங்கே இருந்தபோது நினைத்திருந்தோம் என்கிறதுக்கு சான்றுகளோடு நிரூபிக்கிறோமே என்ற கூச்சம் ஒரு பக்கம் முகத்தை சிவக்க வைத்தது. ஆனாலும், புது விளையாட்டு சாமான் கிடைத்தால் அதை ஆர்வமாக பகிர்ந்து கொள்ளும் சிறு பையனின் உற்சாகத்தை போல, தான் அவளுக்கென்று வாங்கி வந்த ஹான்ட்பாகுகள் அவளிடம் என்ன விதமான பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது என்ற பரபரப்பும் அவனிடம் தென்பட்டது.

ஆனால்….. ஆனால்…. இதென்ன, அர்ச்சனாவின் வெறித்த பார்வை, அவள் அப்படி ஒன்றும் குளிர்ந்து விடவில்லை என்று அல்லவா காட்டுகிறது!

நிஜம் தான் என்பது போல, “வெங்கட், நமக்கு டைவர்ஸ் ஆகியாச்சு. நியாபகம் இருக்கா? நான் இங்க வந்து தங்கினேன் என்ற ஒரே காரணத்துக்காக இப்போ இதை கொடுக்கறியா? டூ லேட் வெங்கட்….. நாம ரெண்டு பேருமே டூ லேட். இந்த ஹான்ட்பாகை நான் எடுத்துக்க முடியாது. வித்யாகிட்ட கொடுத்துடு”

பால் பொங்கி வரும்போது கைப் பிடி தண்ணீர் சேர்த்தால் அடங்கி விடுவது போல, அவள் பேசப் பேச அவனுள் இருந்த ஆர்வமும் படபடப்பும் வடிந்துவிட முகம் மெல்ல இறுகத் தொடங்கிற்று.

கடித்த பற்களிடையே, “உனக்கு டைவர்ஸ் ஆனது தான் மனசில நிற்குது அர்ச்சனா. எனக்கு கல்யாணம் மட்டும் தான் மனசில இருக்கு. அதுனால தான் பைத்தியக்காரன் மாதிரி இதெல்லாம்…… த்சு…….. என்ன சொன்ன? நீ இங்க வந்து தங்கப் போறே என்று அமெரிக்காவில இருந்தப்போவே எனக்கு ஜோசியம் பார்த்து தெரிஞ்சதா? மண்ணாங்கட்டி…… இதே ஹான்ட்பாகுக்கு முன்னாடி நான் சொன்ன வார்த்தைகளுக்கு ப்ராயச்சித்தம்னு நினைச்சு தான் வாங்கி வந்தேன்! ஆனா…… உனக்கெல்லாம் என்னை என்னிக்குடீ புரியப் போகுது?”, என்று சொன்னவனுக்கு அவள் டூ லேட் என்று சொன்னதற்கு பதிலுக்கு பதில் ஒன்றும் சொல்ல முடியாத ஆதங்கமும் இயலாமையும் சேர்ந்து ஆத்திரத்தை அதிகப் படுத்தியது.

ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு என்பது உண்மை தானே! அதை நிரூபிக்கும் வண்ணம் முட்டாள்தனமாக ஒன்றை செய்தான்! அது, ஒற்றைக் கையால் அவளது தோளை பிடித்து பின்னால் வார்ட்ரோப் இருந்த இடத்திற்கு தள்ளினவன், குனிந்து அவள் இதழ்களில் அழுத்தமாக அவனது இதழ்களை பதித்தான்.

“எனக்கு மிகப் பிடித்த இடத்துக்கு வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து சேர்ந்துவிட்டேன்…. என்னை என் ஜோடியிடம் இருந்து பிரிக்காதே”, என்று கூறுவது போல அவனது இதழ்கள் அவளது இதழ்களை ஆர்வமாக பற்றிக் கொண்டு பரவத்தொடங்கியது.

என்ன தான் கோபம் இருந்தாலும் இதை எதிர்பார்க்காவிட்டாலும் மனதின் ஒரு ஓரத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்த அதீத நிம்மதி உணர்வில் அர்ச்சனாவும் கண்களை மூடி தன்னை மறந்து அனுபவித்தாள்.

துரத்ரிஷ்ட வசமாக ஓரிரு நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட வெங்கட்டிற்கு அவனது சுயக் கட்டுப்பாட்டை நினைத்து அவன் மீதே கோபமும் வெறுப்பும் வந்தது. இத்தனை நடந்த பிறகும் இவள் மேலே எனக்கேன் ஆசையும் வேகமும் குறைய மாட்டேனென்கிறது என்று தோன்ற, “டூ லேட்னு சொன்னியே…. அதோட இதையும் சேர்த்துக்கோ. ஐ ஸ்டில் லவ் யூ! டூ லேட்னு தெரியும், ஸ்டில்….. ஐ லவ் யூ!!”, என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான். அவனுக்கு இருந்த மன நிலைக்கு வார்த்தைகளை கடித்து துப்பி இருக்க வேண்டும். ஆனால், அர்ச்சனாவின் இதழ்களில் அவனது இதழ்கள் பதிந்த போது அதில் வெளிப் பட்ட மென்மைக்கும் காதலுக்கும் சற்றும் குறைவில்லாது வந்தன இந்த வார்த்தைகள்.

படுக்கையில் சாய்ந்து கண்களை மூடின போது, கண்ணில் கொதிக்கும் நீர் வெளியேற, காதுகளில் முதல் முதலாக தான் அவனிடம் தன்னுடைய மனதை திறந்த இடமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் படமாக விரிந்தது.

***************செப்டெம்பர் மாதம் தசராவை ஒட்டி வந்த விடுமுறையில் லோனாவாலா செல்லலாம் என்று வெங்கட் ஹோட்டல் அறைகளை புக் பண்ணி விட்டான். பம்பாய்க்கு அருகே இருக்கும் மலை வாசஸ்தலமான கண்டாலா, லோனாவாலா மிக பிரபலமான விடுமுறை ஸ்தலம். அதிலும் ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை மிக அருமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் புதிதாக திருமணம் ஆனவர்கள் (அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் சில வாலிப வயோதிக அன்பர்கள்) ஆகியோருக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலா தலம்.

வெங்கட் அர்ச்சனாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அங்கே ஹோட்டல் அறைகளை புக் பண்ணினதுக்கான காரணம், எங்கே முன் கூட்டியே சொன்னால், நவராத்திரி சமயம், பூஜை செய்யணும் என்று உட்கார்ந்து விடுவாளே என்ற பயம். ஊரிலும் யாரிடமும் சொல்லவில்லை. இதற்குள் அர்ச்சனாவிற்கு வெங்கட்டின் வேகமும் மோகமும் ஓரளவிற்கு பழக்கத்திற்கு வந்திருந்தது. பண்டிகை பூஜை என்று பகவத் நினைவுகள் குறுக்கே வராத வரையில் அவளுக்கும் வெங்கட்டின் இந்த நேரம் காலம் பார்க்காமல் இல்லற சுகங்கள் இனிக்கவே செய்தன. ஓரிரு சமயங்களில் ஈடு கொடுக்க முடியாமல் திணறினாலும் பொதுவாக எந்த பிரச்சினையும் எழவில்லை.

அதனாலேயே நவராத்திரி சமயம் பூஜைக்கு இருக்க முடியவில்லையே என்று மனதின் ஓரம் எழும்பின சுணக்கம் கூட, அங்கே சென்று அந்த ரம்யமான சூழலை கண்டதும் சற்றே மட்டுப் பட்டது (என்று நினைத்தாள்). அத்தனை இயற்கை அழகையும் கொட்டிக் கிடக்கும் லோனாவாலாவில் வெங்கட்டின் தோளோடு தோள் உரசியபடி சிலு சிலுக்கும் இதமான குளிரில் அங்கே இருந்த குகைகளை கண்டபோதும், வின்ச்’களில் சென்ற போதும் அர்ச்சனாவிற்கு மயக்கமோ மயக்கம் தான்.

அப்படி ஊர் சுற்றாத சமயங்களில் அறைக்குள்ளேயே அவர்கள் தங்களை மறந்திருந்த தருணங்களில் எத்தனை முறை….. எத்தனை முறை…. தன்னை மறந்து “ஐ லவ் யூ சோ மச் வெங்கட்!”, என்று கூறியிருப்பாள்! அவளது அரைக் கண் மூடின கிறங்கின தோற்றத்தில் கரகரத்த குரலில், “வெங்கட்….”, என்ற தாபக் குரலில் அழைப்பதை ரசித்து கேட்க கேட்க வெங்கட்டின் ஆசையும் வேகமும் இன்னமும் அதிகரிக்க தான் செய்தது.

********* அந்த அளவு தானும் அவனிடம் மயங்கி ஒன்றிப் போனதாலா அவன் அப்படி தன்னை வற்புறுத்தினான்? அதுவும் எந்த விஷயத்தில்??? மூடின கண்களுக்குள் கண்ணீர் வற்றி விட்டாலும் இன்றும் அர்ச்சனாவிற்கு வலித்தது.

வெளியே டி வீ பார்ப்பது போன்ற பாவனையில் ரேமான்ட் சூட்டிற்கான விளம்பரமும் அதை தொடர்ந்து சூப்பர் ஹிட் முக்காபுலா நிகழ்ச்சி தொடங்கி பம்பாய்க்கு மைக்கேல் ஜாக்சன் வருகை தரப்போவதை அறிவித்தது (பின்னாளில் இந்த வருகை ரத்தானது என்பது தனி விஷயம்). கண்ணெதிரே இருந்த ஸ்க்ரீனை வெறித்திருந்த வெங்கட்டிற்கும் அதே லோனாவாலாவில் நடந்ததை நினைத்து வலித்தது. தான் துளியும் சிந்திக்காமல் அவளை வற்புறுத்தினோமே!

************ “ஹே அர்ச்சனா, சீக்கிரம் கிளம்பு, அந்த கேவ் டூர் (Cave tour) சீக்கிரம் தொடங்க போறாங்க. நாம் இன்னும் ப்ரேக்பாஸ்ட் சாப்டுட்டு போகணும். ஞாபகம் இருக்கா?”

“வரேன் வெங்கட். தலைக்கு குளிச்சிட்டு சொட்ட சொட்ட இருக்கேன். துடைச்சி கிளிப் போட்டுட்டு வரேன். நீ வேணா கீழ போய் ப்ரேக்பாஸ்ட் ஆர்டர் பண்ணிட்டு இரு. அது வர்றதுக்குள்ள நான் கீழ வந்துடறேன்”, வரப் போகும் பின் விளைவை அறியாமல் அர்ச்சனா அவனை கீழே அனுப்பினாள்.

சற்று நேரம் பொறுத்து, அவள் கீழே செல்வதற்கும் ப்ரேக்பாஸ்ட் கொண்டு வந்து டேபிளில் செர்வ் செய்வதற்கும் சரியாக இருந்தது. வெங்கட்டின் ஒரு “விஷ்…..” என்ற சீட்டியும் “மறுபடியும் ரூமுக்கே போய்டலாம் போல இருக்கு”, என்ற கமெண்ட்டையும் சிவந்த முகத்தோடு பெற்றுக் கொண்டு “சும்மா இரு வெங்கட்….. யார் காதுலயாவது விழுந்தா? அது சரி….. இதென்ன? தோசையா? இங்க தோசையெல்லாம் கொடுப்பாங்களா?”, என்று வியப்பாகவும் குழப்பமாகவும் கேட்டுவிட்டு எடுத்து ஒரு வாய் வாயில் இட்டவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

“ஐயையே …… என்ன இது வெங்கட்? தோசை மாதிரி இல்லையே”

சாவதானமாக, “ஆம்லேட் அர்ச்சனா. சூப்பரா இருக்கு சாப்பிட்டு பாரு. நான் சீஸ் ஆம்லேட் வாங்கிட்டிருக்கேன். உனக்கு ப்ளைன் ஆம்லேட். உனக்கும் சீஸ் பிடிக்கும்னா இது முடிச்சிட்டு ஆர்டர் பண்ணறேன்”, என்று கூறி விட்டு அவளது அதிர்ந்த தோற்றத்தை கவனிக்காமல் அவனது தட்டை பார்த்து உண்ணத் தொடங்கினான்.

இரண்டு நிமிடம் கழித்து நிமிர்ந்து பார்த்தவன், அர்ச்சனா அவளது ஆம்லெட்டை தொட்டே இருக்காமல், முதலில் வாயில் இட்ட ஒரு வாய் ஆம்லேட் மட்டும் எப்படியோ உள்ளே சென்றிருக்க மீதியை உண்ணவும் முடியாமல், பசி வயிற்றை கிள்ள எதிரில் இருந்த உணவினை கண்ணெடுக்காமல் வெறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹே…… சின்னு…. இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? ஆம்லேட் தானா வந்து உன் வாய்க்குள்ள ஏறி உட்கார்ந்துக்குமா? சீக்கிரம் சாப்பிடு. அடுத்து வேணும்னா இன்னொரு ஆம்லேட் சொல்லலாம். இல்லேனா, மசாலா சாய் சொல்லலாம். முடிச்சிட்டு சீக்கிரம் டூர் ஆரம்பிக்கிற இடத்துக்கு போய் சேரணும்”, என்று துரிதப் படுத்தினான்.

ம்ஹ்ம்ம்….. அர்ச்சனாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. பார்வையில் இருந்த வெறுப்பும் குறையவில்லை.

“என்ன, ஆம்லேட் சாப்பிட பிடிக்கலையா?”, ஆமாம், எனக்கு வேண்டாம் என்பது போல தலையை பல் வேறு கோணங்களில் தவிப்பாக ஆட்டிவிட்டு தட்டை முன்னால் நகர்த்தின அர்ச்சனாவை ஒரேயடியாக, “சும்மா எப்போ பாரு, இட்லி சாம்பார்னு ஒரே விதம் மட்டும் தான் சாப்பிடுவியா? இதெல்லாம் டிரை பண்ணி பார்த்தால் என்ன தப்பு? இங்க வா….. வாயை திற…… ம்ம்ம்…… மூச்….. ஒரு வார்த்தை பேச கூடாது….. ஆஆ…… அதான், இதை வாயில போட்டு மென்னு முழுங்கு…… எப்படி இருக்கு”, பலவந்தமாக முழு ஆம்லெட்டையும் அவள் திணற திணற அவளுக்கு ஊட்டியும் விட்டு அவளை தட்டை காலி பண்ண வைத்தான்.

அன்று முழுதும் அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட அர்ச்சனா அவனிடம் பேசவில்லை என்பது ஏனோ அன்று அவனுக்கு மூளைக்கு எட்டவே இல்லை! இறுகிப் போயிருந்த அர்ச்சனாவை கவனிக்காமல் எப்படியோ பக்தி வெள்ளத்தில் மூழ்கி இருந்த அவளது நம்பிக்கைகளை மீறி ஆம்லேட் உண்ண வைத்து விட்டோம் என்ற குருட்டு சந்தோஷத்தில் அன்று மிதந்தான்.

********* இன்று அப்படி அவளது நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க தவறினதை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் வேதனை பட்டுக் கொண்டிருக்கிறான்!!!

Leave a comment