உன்னையல்லால் வேறே யார்? – இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் பதிமூன்று

 

“அப்பா, ப்ரேக்பாஸ்ட்டுக்கு ரவா கிச்சடி செய்திருக்கேன். டைனிங் டேபிளில் வச்சிருக்கேன். சாப்பிட்டுக்கோங்க. நான் அம்மாக்கு குளிக்க ஹெல்ப் பண்ணிட்டு அழைச்சிட்டு வர்றேன்”, என்று ராமானுஜத்திடம் கூறிவிட்டு ஈசிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ராஜலக்ஷ்மியிடம், “அம்மா, குளிக்க போலாமா?”, என்று கேட்க,

“இரு அர்ச்சனா, நியூஸ் வரப் போறது. ஏதோ, புல்லட்டின் நியூஸ் அப்படின்னு சொன்னங்க. அப்போ எதோ முக்கியமா நடந்திருக்கு போல. பார்த்திட்டு வர்றேன்”, என்று கூறிக் கொண்டிருந்த போதே நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப் பட்டு புலட்டின் செய்திகள் தொடங்கிற்று. அந்த பத்து நிமிடத்துக்குள் எக்ஸ் மாமனாருக்கு கிச்சடி பரிமாறிவிட்டு வரலாம் என்று திரும்பின அர்ச்சனாவும் செய்திகள் காதில் விழ, திகைத்து போய் நின்று விட்டாள்.

ராஜலக்ஷ்மி தன்னை மறந்து அதிர்ச்சியில் கூவியே விட்டார், “ஹையோ மசூதிய இடிச்சிட்டாங்களா? எந்த மதமாக இருந்தாலும் கடவுள் வழிபாடு ஸ்தலம் என்று இருக்கும் ஒரு இடத்தை இடித்து நாசப் படுத்துவது என்பது எத்தனை வேதனைக்குரிய விஷயம் என்று அவரது கூவலில் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் அர்ச்சனா உடனே ராஜலக்ஷ்மியின் அருகே வந்து, “அம்மா, நீங்க டென்ஷன் ஆகாம அமைதியா இருங்க. உங்க உடம்பு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வர்றது”, அது தான் முக்கியம் என்பதை நினைவுறுத்தி செய்திகளை மேலும் தொடர்ந்து கவனிக்க தொடங்கினாள்.

சரியாக அப்போது தொலைபேசி மணியடித்து இவர்களை அழைத்தது. எடுத்துப் பேசினால், வெங்கட் தான் அழைத்திருந்தான்.

பதட்டம் அவனது குரலில் அப்பட்டமாக வழிந்தோடியது. “ஹே சின்னு, வெங்கட் பேசறேன். நீங்கல்லாம் அங்க பிரச்சனையை ஒண்ணும் இல்லாம இருக்கீங்களா? இப்போ தான் நியூஸ் கேட்டேன். பாப்ரி மஸ்ஜித்தை இடிச்சிட்டாங்களாம். பம்பாயில நிறைய இடங்கள்ல ஊரடங்கு உத்தரவு(கர்பியூ) போட்டிருக்காங்களாம். நான் எப்படியாவது இங்கருந்து கிளம்பி வர பார்க்கறேன். அதுவரை நீங்க பத்திரமா இருங்க”, என்று வெங்கட் சத்தமாக சொல்ல முயல, அவன் இருப்பது ஏதோ ஜன சந்தடி மிகுந்த இடம் என்பது அவனை சுற்றிலும் கேட்ட பல வகை கூக்குரல்களில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது.

“நாங்களும் இப்போ தான் நியூஸ் கேட்டோம் வெங்கட். எங்களை பற்றி கவலைப் படாதே. இப்போ கிளம்பி வர்றது எனக்கு சரின்னு படலை வெங்கட். எங்க பார்த்தாலும் கலவரம் ஜாஸ்தியாகிட்டே போகுதுன்னு சொல்றாங்க வெங்கட். இப்போ நீ அங்க இருந்து இங்க கிளம்பி வர்றதை விட அங்கேயே இருக்கிறது தான் பெட்டெர். இரு அம்மா கிட்ட போன் கொடுக்கறேன்”

“வெங்கட் கண்ணா, சிவசேனா ஆளுங்க ரொம்ப பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்களாம். வாஷி பக்கத்துல ஒரு ட்ரைனை வழி மறிச்சு அடிதடியாகிடிச்சு என்று இப்போ தான் நியூஸ்’ல பார்த்தேன். பயமா இருக்குப்பா. நீ எங்க இருக்கியோ அங்கியே பத்திரமா இரு”, பதறக் கூடாது என்று நினைத்தாலும் ராஜலக்ஷ்மியின் குரல் சூழ்நிலையின் தாக்கத்தால் நடுங்கியது.

“அம்மா, நீங்கல்லாம் அங்க தனியா இருக்கீங்களே. அர்ச்சனா கிட்ட போன் கொடுங்க”, ராஜலக்ஷ்மியிடமிருந்து கை மாறி அர்ச்சனாவிடம் போன் வர,

“ஹலோ, வெங்கட்”, என்ற அர்ச்சனாவிடம்,

“அர்ச்சி, பயப்படாதே. எப்படிடா தனியா சமாளிப்போம்னு மலைச்சு போய்டாதே. நான் கிளம்பி வந்துட்டே இருக்கேன்”

“வெங்கட், நான் என்ன சொல்ல வரேன்னா…….”

“ஷ்…. டோன்ட் வொர்ரி. நீ சொல்லப் போறது என்னன்னு தெரியும். நான் பத்திரமா வருவேன். அதே சமயம், இது போல கலவரம், சண்டை அப்படின்னா உனக்கு எத்தனை பயம்னும் எனக்கு தெரியும். அதுனால தான் சொல்லறேன். நான் வந்துட்டே இருக்கேன். நீ அப்பாகிட்ட போன் கொடு”

“ஹலோ வெங்கட், என்னப்பா கர்பியூ போட்டுடாங்க, சிவசேனா ரொம்ப பிரச்சினை பண்ணறாங்க அப்படின்னு நியூஸ்’ல சொல்லறாங்க. இப்போ கிளம்பி வர்றேன்னு சொல்லறியே”, என்று அவர் பங்கிற்கு அவரும் ஆட்சேபிக்க,

“இல்லப்பா, அர்ச்சனாக்கு இந்த மாதிரி கலவரம், கர்பியூ அப்படின்னா ரொம்ப பயம். ராஜீவ் காந்தி அசாசினேஷன் போதே அவ ரொம்ப பயந்து போய்ட்டா. அதுனால தான் நான் எப்படியாவது வரப் பார்க்கறேன்னு சொல்லறேன். நான் ஜாக்கிரதையா இருந்துப்பேன் அப்பா. கவலைப் படாதீங்க”

“அம்மா வாங்க குளிக்கலாம், நேரமாச்சு. குளிக்காம ப்ரேக்பாஸ்ட் சாப்பிட மாட்டீங்க. ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைக்கெல்லாம் நேரமாகிட்டே போகுது”, என்று ராஜலக்ஷ்மியை கிளப்பி அழைத்து சென்றாள் அர்ச்சனா.

“என்னவோ போ, இந்த வெங்கட் சொல்ல சொல்ல கேட்காம அங்கிருந்து கிளம்பி வர்றேன்னு சொல்லிட்டிருக்கான். கவலையா இருக்கு”, என்றபடியே அர்ச்சனா சொன்னது போல குளித்து மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.

வழக்கமாக பூனாவில் இருந்து பம்பாய் வருவதற்கு மூன்றரை மணி நேரமும், பம்பாய் எல்லையில் இருந்து இவர்கள் இருக்கும் செம்பூருக்கு வந்தடைய மேலும் ஒரு மணிநேரம் சென்றும் வெங்கட் வீடு வந்து சேரவில்லை.

ஆனாலும் ராஜீவ் காந்தியின் இறப்பின் போதே பம்பாயின் நிலவரம் அறிந்தவளாதலால் அர்ச்சனாவும் அதிகம் பதட்டப் படாமல் காத்திருந்தாள்.

மொத்தமாக நான்கரை மணி நேரம், அவசர நிலையை மனதில் இருத்தி கூடுதலாக மேலும் இரண்டு மணி நேரம் என்று ஆறரை, ஏழு மணி நேரம் போயும் வராமல் போக அர்ச்சனா இங்கே வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து ஓய்ந்து விட்டாள்.

நேரம் ஆக ஆக வெங்கட் வந்து சேரவில்லையே என்ற பதட்டத்தில் பெரியவர்களுக்கு நிலை கொள்ளாத தவிப்பு இருந்தாலும் இங்கே அர்ச்சனாவின் மனமும் அதே தவிப்புடன் வாசல் கதவிற்கும் பால்கனிக்குமாக நடந்து தேய்ந்தது.

அங்கே பாட்டிலில் பால் (தொண்ணூறுகள் வரை பம்பாயில் அரசாங்க பால் பாட்டிலில் தான் விநியோகம் செய்யப் படும்)கொண்டு வந்து கொடுக்கும் ஆளிடம் அவ்வப் போது வெளியே நிலவரம் எப்படி இருக்கிறது என்றும் கேட்டுக் கொண்டாள். மாலை ஏழு மணியாகியும் வெங்கட் வந்து சேராத போது அர்ச்சனாவின் முகத்தில் கவலையை தாண்டி அழுகை எட்டிப் பார்க்க தொடங்கியது.

ராமானுஜமே, “அவன் நிச்சயம் பத்திரமா வந்துடுவான் அர்ச்சனா. நீ மத்தியானத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடாமே இருக்கே. அப்போ கேட்டப்போ, வெங்கட் வந்துடட்டும்…. சேர்ந்தே சாப்பிடறதா சொன்னே! இப்போவாவது சாப்பிடு. பசியோட இருந்தா எல்லாமே பூதாகாரமா தான் தெரியும். நாலு வாய் சாப்பிட்டா உனக்கே ஆசுவாசப் படுத்திட்டு நிதானமாக யோசிக்க முடியும்”, என்று ராமானுஜம் வற்புறுத்தினார்.

ஏழரைக்கு தொலை பேசி கிணுகிணுக்க, ஒரே பாய்ச்சலாக அர்ச்சனா அதற்கு எட்டி இருந்தாள். ஆனால், அவளுக்கு முன்னால் அதை உயிர்பித்து எடுத்து பேசத் தொடங்கி இருந்த ராமானுஜமோ ஏகப்பட்ட உம்..உம்ம்ம்….ஆமாம்…..சரி, பத்திரமா இருக்கோம்….. இதோ இங்க இருக்கா, கொடுக்கறேன்”, என்று பூடகமாகவே பேசிவிட்டு ரிசீவரை நீட்ட, நடுங்கின கைகளால் அதனை காதில் பொருத்தினாள் அர்ச்சனா.

கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்த படி இருக்க, வாய் அதன் போக்கிற்கு எதிர் முனையில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துக் கொண்டிருந்தது.

பேசி முடித்து வைத்து விட, கன்னத்தில் இருந்து கண்ணீரை துடைக்கவும் தோன்றாது மெல்ல உள்ளே அவர்களது அறைக்கு சென்றாள். வெங்கட்டின் ஷர்ட்டில் முகம் புதைத்து தஞ்சம் அடைந்தவள் மெல்ல கடந்த காலத்தை நினைத்துக் கொண்டாள். இன்று அவனுக்கு எதுவும் ஆகிவிடாமல் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என்று பதைக்கும் பாழும் மனம் சில வருடங்கள் முன்பு எந்த அளவு அவனை உதாசீனப் படுத்தியது என்று வேதனையோடு நினைத்துப் பார்த்தது.

இவள் கண்ணீரோடு அறைக்கு செல்வதை கண்ட ராமானுஜமும் ராஜலக்ஷ்மியும் கவலை பார்வைகளை பரிமாறிக் கொள்ள, “உள்ள போய் அவள சாப்பிட வர சொல்லு ராஜி. ஏற்கனவே பசி, இதுல அழுதுட்டே படுத்தா தலை வலி தான் மிஞ்சும். நான் போய் எல்லாத்தையும் சூடு பண்ணறேன்”

ஆனால் ராஜலக்ஷ்மி அறைக்குள் சென்றபோது வெங்கட்டின் ஷர்ட்டினுள் முகத்தை பதித்திருந்த அர்ச்சனாவை பார்த்துவிட்டு சத்தம் போடாமல் வெளியே வந்து விட்டார். “அவளே அழுது ஓய்ஞ்சி வருவா”, என்று கணவரிடம் கூறி விட்டார். சும்மா படுத்திருந்தால் கூட கூப்பிட்டிருப்பார். வெங்கட்டின் ஷர்ட்டோடு இருப்பவளை பார்த்தபோது அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கிற போது அதை தொந்திரவு செய்ய மனம் வரவில்லை.

 

************ அந்த பொல்லாத சண்டையின் பிரதிபலிப்பாக அடுத்த சில நாட்கள் கோபம், வருத்தம், சீண்டப் பட்ட சுயகௌரவம் என்று பல்வேறு காரணங்களால் மௌனம் காத்தபடி அர்ச்சனா வளைய வர, எப்படி தான் அவளிடம் மன்னிப்பு கேட்டால் அவள் சமாதானமாகி மன்னிப்பாள் என்று புரியாமல் திண்டாடினான் வெங்கட்.

தொடக்கத்தில் குற்ற உணர்வின் காரணமாக திரும்பத் திரும்ப சாரி கேட்டு அவளை சாமாதானப் படுத்த முயற்சித்த வெங்கட், நாட்கள் செல்ல செல்ல எரிச்சலும் கோபமும் போட்டி போட்டு வர மெல்ல பிடிவாத குணத்திற்கு போனான். அர்ச்சனாவும் பிடிவாதத்தை கை விடாமல், வாய் திறந்து பேசாமல், அவளது இறுக்கத்தை காட்டினாள்.

அந்த ஞாயிறை தொடர்ந்து வந்த வார நாட்களும் முடிந்து விட, அடுத்த வார இறுதியும் வந்தடைந்தது. இவர்களை காண தூரத்து உறவினர் ஒருவர் வந்தார். அலுவலக விஷயமாக பம்பாய் வந்து கடந்த நான்கு நாட்களாக தங்கி இருப்பதாகவும், சனிக் கிழமையோடு வேலை முடிந்து விட்டதால் ஞாயிறு ஒரு நாள் தங்கி பம்பாயில் பார்க்க கூடிய ஓரிரு இடங்களை கண்டு விட்டு அன்று இரவு ஊருக்கு திரும்புவதாக திட்டம் என்றும் கூறினார்.

அவருக்கு எதிரே எதையும் காட்டிக் கொள்ள விருப்பப் படாமல் இயல்பாகவே பேசினாள் அர்ச்சனா. வெங்கட் அறிமுகப் படுத்தின போதும் சரி, அதற்கு பிறகு அவரை இரவு உணவிற்கு உபசரித்து அழைத்த போதும் இயல்பாகவே வெங்கட்டிடம் பேசினாள்.

அன்று காலை முழுதும் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வந்தவர், மதியமும் ஹோட்டலில் எதோ சாப்பிட்டதால் இரவு உணவாக வீட்டு சாப்பாடு என்ற ஆசையில் இவர்களது உபசரிப்பை ஏற்று சிறிது நேரம் பேசின படி தங்கினார்.

அர்ச்சனாவை சமாதானப் படுத்தி அவளிடம் நல்ல பெயர் எடுக்க சிறந்த வாய்ப்பு இது…. உள்ளே அவள் இரவு உணவை தனியாக தயாரிக்கும் போது, கூட உதவியாக அவளுக்கு காய் அறிந்து கொடுப்பது, சாமான் எடுத்து கொடுப்பது என்று உதவி செய் என்று மூளை அறிவார்த்தமாக அறிவுறுத்த;
ஹ்ம்ம்….. போன அஞ்சாறு நாளா அவளை சமாதானப் படுத்த நான் எத்தனை டிரை பண்ணினேன்! காது கொடுத்தாவது கேட்டிருப்பாளா? இதுல இன்னைக்கு போய் நான் ஹெல்ப் பண்ணறதால் தான் இவ கோவமெல்லாம் சமாதானமாகப் போறாளா? சரியான அழுத்தம்.. பிடிவாதம்… பாஸ்சிவ் அக்ரஸ்சிவ் நேச்சர்! நீ ஒண்ணும் போக வேண்டாம். தள்ளியே இரு”, என்று அவனது சுயகௌரவம் குறுக்குத் தனமாக யோசித்து கிறுக்குத்தனமாக அறிவுரை வழங்கிற்று.

கிடைத்த ஒரு அறிய வாய்ப்பை வெற்றிகரமாக கோட்டை விட்டு விட்டு, வந்த தூரத்து உறவினரோடு ஊர் கதையை பேசிக் கொண்டிருக்க, அர்ச்சனா தனியொரு ஆளாக மூவருக்கும் இரவு உணவினை தயாரித்து டைனிங் டேபிளில் கொண்டு வந்தாள்.

சாப்பிட உட்கார்ந்ததும், உறவினர் எதார்த்தமாக, “பரவாயில்லையே தனியா உதவிக்கு வேற யாரும் இல்லாமலே இத்தனை தயார் பண்ணிட்டீங்களே. நிறைய பேருக்கு எதிர்பாராம விருந்தாளி வந்துட்டா கையும் ஓடாது காலும் ஓடாது!”, என்று வியந்து விட்டு சப்பாத்தி அதற்கு தோதாக இரண்டு வகை சைட் டிஷ், ப்ரைட் ரைஸ் தொட்டுக் கொள்ள தயிர் பச்சடி என்று தன் முன் இருந்த வகைகளை ஒரு வெட்டு வெட்டினார். வெங்கட்டிற்கு ஒரு ஓரமாக அவர் கூறிய “தனியா உதவிக்கு வேற யாரும் இல்லாமல்” ஆகிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

ஆனால் அர்ச்சனாவோ அளவாக புன்னகைத்து விட்டு, “ப்ரைட் ரைசுக்கு தயிர் பச்சடி மட்டும் போதுமா? ஊறுகாயும் எடுத்து வரட்டுமா? அப்பளம் ரெண்டு பொரிக்கட்டுமா?”, என்று மேலும் உபசரித்து எதுவுமே நடக்காதது போலவே காட்டிக் கொண்டாள்.

“இல்லம்மா, போதும் போதும்”, என்று வந்தவர் மறுக்க மறுக்க அவருக்கு பரிந்து பரிந்து உபசரித்தவளை பார்க்கையில் “ஒரு வேளை கோபம் எல்லாம் சரியாகிவிட்டதோ! நாம் கொஞ்சம் முறுக்கிக் கொண்டதுமே அவளுக்கும் புரிந்து விட்டது போல…. அதான், தனியா கிச்சன்ல கொஞ்ச நேரம் வேலை செய்யற சமயத்துல யோசிச்சு பார்த்து அவ மேல இருந்த தப்பு புரிஞ்சிருக்கு. ஹப்பா….!!! எப்படியோ ஒரு வழியா கோபம் சரியாகி சமாதானம் ஆனாளே, அதுவே போதும்!!! அப்படி விலை உயர்ந்த ஹான்ட்பாக் கேட்டு அடம் பிடிச்சதுக்கோ, அதுக்கப்பறம் நான் கோபத்துல சொன்ன ஒரு வார்த்தையை பிடிச்சிட்டு இத்தனை நாள் பேசாம இருந்ததுக்கு கூட சாரி கேட்கனும்னு இல்லை”, என்றெல்லாம் பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.

வந்த விருந்தாளி விருந்து முடிந்து கிளம்பின பிறகு தான் அர்ச்சனாவின் கோபமும் பிடிவாதமும் அத்தனை சீக்கிரம் தணிவதாக இல்லை என்ற மாபெரும் உண்மை வெங்கட்டிற்கு விளங்கிற்று.

அதற்கு முன் சென்ற ஐந்தாறு இரவுகளை போலவே இருவரும் ஒருவருக்கொருவர் முதுகு காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்ததில் நடுவே சேது அணையே கட்டி இருக்கலாம்.

சென்ற ஒரு வாரமாக அவளது கோபம் தணியும் என்று பலவிதங்களில் முயற்சி செய்து, எதிர்பார்த்து காத்திருந்து, ஏமாந்து போய் இருந்ததை விட, இன்று அர்ச்சனா வந்தவரிடம் இயல்பாக பேசிவிட்டு தனிமையில் தன்னை ஒதுக்குவதை வெங்கட்டால் தாங்கவே முடியவில்லை. இப்போது அவனுக்குள்ளும் எரிச்சலும் ரோஷமும் பெருக்கெடுத்தது.

அர்ச்சனாவோ ஒரு பக்கம் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தாள். சில நாட்களில் தலை தீபாவளி வந்து விட, ஏற்கனவே தொலை பேசி மூலம் வந்த அழைப்பிற்கு ஏற்ப, அர்ச்சனாவும் வெங்கட்டும் காஞ்சீபுரத்திற்கு பயணப் பட்டனர்.

மெட்ராஸ் வந்துவிட்டு அங்கிருந்து காஞ்சிபுரம் போவதாகவும், தலை தீபாவளி முடிந்ததும் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு மதுராந்தகம் வந்து வெங்கட்டின் பெற்றோர் வீட்டிலும் நான்கு நாள் இருந்து விட்டு பம்பாய் திரும்புவதாக திட்டம்.

மெட்ராஸில் இருந்து பம்பாய்க்கு வந்ததை போலவே இப்போதும் வழியில் வந்த குகைகளை கடந்த போது இருவருக்கும் குகைகளின் எண்ணிக்கைகளும் அதை தொடர்ந்த சம்பவமும் நினைவிற்கு வர, கூடவே இன்றைய சண்டையும் கோபதாபமும் நினைவிற்கு வந்து அவர்களது வீம்பை தொடர வைத்தது தான் பரிதாபம்.

மெட்ராஸ் வந்து அங்கிருத்து காஞ்சிபுரத்திற்கு செல்ல டாக்சியில் ஏறி உட்கார்ந்த போதும் அந்த வீம்பும் மௌனமும் ஆட்சி செய்தது.
காஞ்சிபுரத்தில் ஆரத்தி சகிதம் இவர்களை உற்சாகமாக வரவேற்ற விசாலாட்சிக்கு இவர்களது சோர்ந்து களைத்த முகம் பயணத்தினால் மட்டுமல்ல, அதை தாண்டியும் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று பார்த்த உடனேயே புரிந்து விட்டது.

“வாங்க மாப்பிள்ளை, வா அர்ச்சனா”, என்று வாய் நிறைய வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

செல்லும் வழியில் தடங்கலே இல்லாமல், “பிரயாணம் சௌகரியமா இருந்ததா அர்ச்சனா? என்னங்க, மாப்பிள்ளைக்கு பாத்ரூம் காட்டுங்களேன். கை கால் கழுவிட்டு வாங்க மாப்பிள்ளை, டிபன் ரெடியா இருக்கு. சாப்பிடலாம். அர்ச்சனா, நீயும் டிரஸ் மாத்திக்கறதாக இருந்தால் மாத்திக்கோ”, என்று உபசரிக்க கண்களும் காதுகளும் கவனமாக இவர்கள் நடந்து கொள்ளுவதை கவனித்துக் கொண்டிருந்தது, பாடி லாங்குவேஜ் என்று சொல்வார்களே அது போல.

இங்கே வெங்கட்டும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்த்துக் கொள்ளவுமில்லை. மாமனாரோடு பேசிக் கொண்டே வெங்கட் ஒரு பக்கம் செல்ல, அர்ச்சனா அம்மாவிடம் வால் பிடித்தபடி வந்தவள், ஒன்றுமே நடக்காதது போல, “ஏம்மா, என் பிரென்ட் பரிமளாவை நீ பார்த்தியா? போன வாரம் என் இன்னொரு பிரென்ட் காவேரிகிட்டேருந்து லெட்டர் வந்தது. பரிமளாவுக்கு மெட்ராசுல வேலை கிடைச்சு போக ஆரம்பிச்சிட்டான்னு காவேரி சொன்னா…..”, வளவளத்த படி அர்ச்சனா அம்மாவோடு அடுக்களைக்குள் வந்து,

“ஹோ…. தயிர் வடையா? தூள்!!! அம்மா, ஒரு சின்ன கிண்ணத்துல போட்டு கொடேன். சாப்பிட்டு பார்க்கணும். உன் சமையல் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு?”

“ஹே…உன்னை என்ன சொன்னேன். கை கால் கழுவி, டிரஸ் மாத்திட்டு வான்னு சொன்னேனா இல்லையா? டிரைன் அழுக்கோட வீட்டுக்குள்ள வர்றது என்ன பழக்கம்? போதாக் குறைக்கு மாப்பிள்ளை, அப்பால்லாம் இன்னும் சாப்பிடலை. மாப்பிள்ளை சாப்பிடறதுக்கு முன்னால நீ சாப்பிட்டு பார்க்கறதுன்னு நிறையவே வேண்டாத பழக்கமெல்லாம் பழகி வச்சிருக்கே”, என்று கண்டிப்போடு அதட்ட,

மாப்பிள்ளை என்ற வார்த்தையில் உதட்டில் தோன்றின அலட்சிய சுழிப்பை விசாலாட்சியும் பார்த்துவிட்டார்.

ஆனாலும் அப்போது தான் வந்திறங்கின மகளை குறுக்கு விசாரணை செய்து கேள்விகள் கேட்க மனம் வரவில்லை.

சற்று நேரம் கழித்து ஆண்கள் இருவரும் சாப்பிட உட்கார, ரங்கபாஷ்யத்திற்கு மகளை விட்டு விட்டு சாப்பிட மனம் இல்லை.

மனைவியிடம், “அர்ச்சனாவும் சாப்பிடட்டுமே. அவளும் தானே டையர்ட் ஆக இருப்பா. பசிக்குமே!”, என்று கூற, விசாலாட்சி ஒன்றும் சொல்ல முடியாமல் கணவர் சொன்னது போல செய்ய “அர்ச்சனா, நீயும் சாப்பிட உட்காரு. நான் பரிமாரறேன்”, என்று மகளையும் சாப்பிட அழைத்தார்.

‘பார்த்தீங்களா?’, என்ற வெற்றிப் பார்வையை அம்மாவிடம் செலுத்தி விட்டு வேகமாக தட்டை எடுத்துக் கொண்டு வந்து அப்பாவின் அருகே உட்கார்ந்து கொண்டு, “அப்பான்னா அப்பா தான்”, என்று செல்லம் கொண்டாடினாள்.

“அர்ச்சனா, மாப்பிள்ளை பக்கத்துல போய் உட்காரும்மா!”, என்று அப்பா தணிந்த குரலில் அறிவுறுத்த அர்ச்சனா தயக்கமாக அம்மாவையும் வெங்கட்டையும் மாறி மாறி பார்த்தாள். விசாலாட்சியின் பார்வை எடை போடும் பாவனையில் இருந்து மெல்ல மாறி கேள்வியாக தாக்கியது. வெங்கட்டோ, தட்டில் பரிமாறப் பட்ட வாழைப் பழம்+சர்கரையையே கன சிரத்தையாக எடுத்து வாயில் இட்டுக் கொண்டிருந்தான்.

யோசனையாக எழுந்து சென்று வெங்கட்டின் அருகே உட்கார்ந்த அர்ச்சனாவை பார்கையில் விசாலாட்சிக்கு வயிற்றில் புளியை கரைத்து, புளிக்காய்ச்சல் கொதித்தது.

இரவு உணவு முழுதும் அர்ச்சனாவை நொடியும் விடாமல் கவனித்து வந்தவர், வெங்கட் அவனது இயல்பில் இருந்து சிறிதும் மாறாமல் சாதாரணமாக தான் பேசுவது போலிருந்தான். அவர் கண்களுக்கு பட்ட வரை அர்ச்சனா தான் அவர்களுக்கான இடைவெளியை ஒவ்வொரு முறையும் உண்டாக்கி வெங்கட்டிடம் இருந்து சற்று விலகி இருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும், “அர்ச்சனா, மாப்பிள்ளை தாம்பூலம் போடுவாரா?”, என்று விசாரிக்க, அர்ச்சனா பேந்த பேந்த விழித்தாள்.

“தாம்பூலமா? அப்படின்னா?”, என்று அர்ச்சனா எதிர்கேள்வி கேட்க,

“வெத்தலை பாக்கு அர்ச்சனா! என்னதிது, கேள்வியே படாதது மாதிரி முழிக்கறே! சரி சரி டையர்டா இருக்கே போல இருக்கு. போய் படுத்துக்கறதா இருந்தா படுத்துக்கோ. மாப்பிள்ளையையும் படுத்துக்க சொல்லிட்டு போ. விட்டா உங்கப்பா விடுதலை போராட்டத்துல இருந்து ஆரம்பிச்சு ஊர் கதை எல்லாம் பேச ஆரம்பிச்சிடுவார்”, என்றார்.

“இல்லம்மா, கிட்சன் கிளீன் பண்ண ஹெல்ப் பண்ணிட்டே தூங்கப் போறேன்”,

அர்ச்சனா உதவி இருந்தால் தான் சமையலறை சுத்தம் செய்து முடிக்க முடியும் என்று இல்லாவிட்டாலும் மகளோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் சரி என்று அவளை வேலை செய்ய விட்டு சிறிது நேரம் கழித்து, “போதும் அர்ச்சனா, இனிமேல் நானே பார்த்துப்பேன். நீ தூங்கப் போ”, என்று அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் காலை நிதானமாக ஏழரை மணிக்கு எழுந்து வந்த அர்ச்சனாவை வாகாக பிடித்துக்கொண்டார்.

“அர்ச்சனா, வா வா. குட் மோர்னிங். இந்தா காபி”

“குட்மோர்னிங் அம்மா. தேங்க்ஸ்!”

“மாப்பிள்ளைய எங்கன்னு தேடறியா அர்ச்சனா? அப்பாவும் அவருமா வாக் போய் இருக்காங்க”, என்று மெள்ள நூல் விட்டு பார்த்தார்.

மையமாக தலையாட்டி விட்டு, “ஒ….. அப்படியா? ஓகே ஓகே. சரி, இன்னைக்கு என்ன மெனு?”

“மெனுவெல்லாம் இருக்கட்டும் அர்ச்சனா. நீ எப்படி இருக்கே சொல்லு? மாப்பிள்ளை உன்கிட்ட பிரியமா தான் இருக்கார்னு நேற்று அவர் பேசினதை வச்சே புரிஞ்சது”

“…………..”

“நேற்று பேசினதுன்னு மட்டும் இல்ல, நாங்க போன் பண்ணும் போதெல்லாம் அவர் எங்க கிட்ட மரியாதையா பேசறார்…. உன்னை பற்றி நாங்க விசாரிக்கும் போதும் அவர் பதில் சொல்லறதை வச்சே அவர் உன்கிட்ட ஆசையா தான் இருக்கார்னு நானும் அப்பாவும் இங்க பேசிப்போம்!”

சென்ற முறை வாய் திறக்காமல் இருந்ததை போல இந்த முறை இருக்க முடியவில்லை அர்ச்சனாவால். அது மட்டுமல்ல, பல முறை வெங்கட்டிடம் கூட வெளிப்படையாக பேச வாய் எழாதவள், அவர்களது பிரச்சினையை அம்மாவிடம் கூறினாள். அவர்கள் இல்லற வாழ்வின் தோல்வியின் அடுத்த தவறினை அங்கு அன்று அர்ச்சனா செய்தாள்.

“உங்க கிட்ட மரியாதையா பேசினா போதுமா? நீங்க விசாரிக்கும் போது உங்ககிட்ட பதில் சொல்லறதை வச்சு என்கிட்டே ஆசையா இருக்கிறதா தோணுச்சா? எப்படிம்மா? என் வரையில் உன் மாப்பிள்ளை எப்படின்னு சொல்லட்டுமா? எல்லா விஷயத்திலும் அவர் எடுக்கற முடிவு தான் கடைசி முடிவு. என் இஷ்டம் என்னன்னு ஒரு தடவை கூட கேட்டது கிடையாது. அவருக்கு அஞ்சு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னா எனக்கும் அத்தனை நாள் தள்ளி தான் குழந்தை. அவர் ஆம்லெட் பிடிச்சு சாப்பிட்டா நானும் அதை சாப்பிட்டே ஆகணும்.

அவருக்கு கோவிலுக்கு போக இஷ்டமில்லைன்னா நானும் போக கூடாது. கூட்டிட்டு போக மாட்டார்! அதே நான் ஆசைப் பட்டு ஒரு ஹான்ட்பாக் கேட்டா அதுக்கு உடனே நோ தான் சொல்லுவார். அதுவும் வெறுமனே நோ கூட இல்லை. எட்டாயிரம் கொடுத்து இப்போ ஹாண்ட்பாக் அவசியமா? சம்பாதிச்சா தான் பணத்தோட அருமை தெரியும்னு வாய்க்கு வந்ததை பேசுவார்! இதுல அவர் என் மேல ஆசையா பாசமா இருக்கார்னு நீ தான் மெச்சிக்கணும்”, என்ற ரீதியில் பொருமித் தள்ளிவிட்டாள்.

ஆரம்பத்தில் திகைப்பாக கேட்டுக் கொண்டு வந்தவர், போகப் போக சுதாரித்துக் கொண்டு விட்டார். இது வழக்கம் போல எல்லா கணவன் மனைவிக்கு நடுவிலும் நடக்கும் கருத்து வேறுபாடுகள் தானே தவிர பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை என்று தனக்கு தானே சமாதானப் படுத்திக் கொண்டார். பிறகு, ஒரு தாயாக, இருபத்தைந்து வருடம் திருமண வாழ்வை நடத்தி வெற்றி கண்டவர் என்ற தன்னம்பிக்கையில் மகளின் மன உளைச்சலுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

“இதோ பாரு அர்ச்சனா, குடும்பத்துல இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயத்துக்கு சண்டை வர்றதும், அதுல யாராவது ஒருத்தர் ஒரு சில வார்த்தைகளை அதிகப்படி பேசிடறதும் சகஜம் தான். இதுனால எல்லாம் நம்ம மேல அன்பு இல்லைன்னு முடிவு பண்ணிட கூடாது. சில ஆம்பளைகளுக்கு வாய் திறந்து அவங்க மனசுல இருக்கிற ஆசையையோ பாசத்தையோ வார்த்தையில சொல்ல வராது. அதை அவங்க காட்டறது கூட வேற விதமாத்தான் காட்டுவாங்க. வேற யார்கிட்டயும் காட்டாத அளவு அவங்க பெண்டாட்டி மேல உரிமை கொண்டாடறது, அந்த உரிமையில சில சமயம் வற்புறுத்தல், கண்டிப்பு என்று அவங்க மனசை காட்டற விதத்தை புரிஞ்சுக்க கொஞ்ச நாள் ஆகும். அதே போல, சின்ன விஷயத்துக்கு கூட எரிஞ்சு தான் விழுவாங்க. அதுக்கான அடிப்படை காரணம் என்னன்னா, அவங்க மனைவி மேல இருக்கிற அக்கறை தான் அவங்களை எரிஞ்சு விழ வைக்கும். இதெல்லாம் உனக்கே போக போக புரியும். மனசை தளர விடாதே.

ஹாண்ட்பாக் விலை எவ்வளவு, அது இப்போ தேவையான செலவு தானா என்றும் யோசிச்சுக்கோ. அதெல்லாம் இல்லாம தானே இத்தனை வருஷம் இருந்திருக்கே. இப்போ எதுக்கு திட்டீர்னு அத்தனை செலவு பண்ணி ஹான்ட்பாக் வாங்கனும்னு மாப்பிள்ளை நினைச்சிருக்கலாம். அதுவும் நியாயம் தானே? நானோ அப்பவோ அதுமாதிரி பார்த்தோம் புடிச்சதுன்னு தேவையில்லாத விஷயத்துக்கு பணத்தை வாரி இறைக்கறதை பார்த்திருக்கியா?

இத்தனை வருஷம் இல்லாதது இப்போ என்ன திடீர்னு புது பழக்கம் உனக்கு? இப்போ நீ ஆசைப் பட்டு கேட்கறே, அவரும் கை நிறைய சம்பாதிக்கறதால் வாங்கியும் கொடுக்கரார்னு வச்சுக்கோ….. நாளைக்கு சொந்த வீடு, வாசல், குழந்தை அப்படின்னு பொறுப்புகள் கூடி செலவும் அதிகம் ஆகும் போது, இதே பழக்கத்துல கேட்டா அவர் எப்படி வாங்கி கொடுப்பார்? அதுனால தான் ஆரம்பத்துலையே பழக்கம் பண்ணவேண்டாமேன்னு வாங்கி கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கார்.

இதெல்லாம் சம்சாரத்துல விழுந்து எழுந்து கரை ஏறினவ சொல்லறேன், கேட்டுக்கோ. மாப்பிள்ளை, நிச்சயம் உன்கிட்ட ஆசையா தான் இருக்கார். அதை வெளிப்படுதர விதம் கொஞ்சம் கரடு முரடா இருந்தாலும், நாளடைவுல உனக்கே அவரோட இயல்பு புரிய ஆரம்பிக்கும். அப்போ, நீயே என்கிட்டே வந்து அவரை பத்தி ஆஹா ஓஹோன்னு சொல்லுவ பாரேன்”, என்று நீள பேசி அவள் யோசிக்க நேரம் கொடுத்து சமைக்க சென்றார்.

 

அம்மாவிடம் சொற்பொழிவு கேட்டதாலோ என்னவோ அர்ச்சனா அதற்கு பிறகு சற்றே மனம் இறங்கி வந்து வெங்கட்டிடம் இயல்பாக பேசத் தொடங்கினாள். தொடக்கத்தில் இவளது பேச்சில் அதிகம் நம்பிக்கை வைத்து உற்சாகம் கொள்ளாமல் வெங்கட்டும் ஒரு எல்லையோடு பேச்சை நிறுத்திக் கொள்ள, தனிமை கிடைத்த போதும் விறைத்துக் கொள்ளாமல் அர்ச்சனா அதே போல வெங்கட்டிடம் சகஜ தொனியில் பேசி சிரித்து, கேலி கிண்டல் என்று இருக்க, மெல்ல மெல்ல வெங்கட்டும் அவனது குதூகலத்தை காட்டத் தொடங்கினான்.

உற்சாகம் மற்றும் குதூகலத்தின் உச்சகட்டமாக அன்று இரவு, அதாவது மறுநாள் விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் வெகு நாட்கள் கழித்து மனைவி மீண்டும் சந்தோஷமாக பேசி சிரித்ததை கொண்டாடும் வகையில், அவளது மனமொத்த சம்மதத்தின் பேரில், “தலை தீபாவளி” கொண்டாடினார்கள் அர்ச்சனா-வெங்கட் தம்பதியர்.

இத்தனை நாட்கள் முகம் காட்டி பேசாமல் இருந்த மனைவியின் மேல் இருந்த தாபத்தை எல்லாம் வெங்கட் அன்று தனக்கு தெரிந்த விதத்தில் கொட்டினான். அவள் பேசாமல் இருந்தது தன்னை எத்தனை தூரம் பாதித்தது, தன்னை எவ்வளவு வருத்தியது என்று எல்லாம் அவர்களின் சங்கமத்தில் கொட்டி தீர்த்தான்.

துரத்ரிஷ்டவசமாக அதை அப்படி புரிந்து கொள்ளாமல், அவனது மோகாவேசம் என்ற அளவில் மட்டுமே அர்ச்சனா புரிந்து கொண்டாள் என்பது வேறு விஷயம்.

அடுத்த நாள் தலை தீபாவளி எல்லாம் பிரமாதமாக (இது பகிரங்கமாக எண்ணெய் ஸ்நானம் செய்து வெடி வெடித்து கொண்டாடுவது) கொண்டாடி, விருந்துண்டு மகிழ்ந்தனர். அன்றும் அடுத்த நாளும் வெங்கட் – அர்ச்சனா இருவருக்கு நடுவிலும் இத்தனை நாளாக சண்டை பூசல் என்று ஒன்று இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்றதையும் கண்ட விசாலாக்ஷி மிக்க நிம்மதியடைந்தார்.

“நல்ல பொண்ணு தான்! கொஞ்சம் எடுத்து சொன்னதுமே புரிஞ்சிகிட்டா!! ஒரொரு பொண்ணு போல பிடிவாதம் பிடிச்சிட்டு பிரச்சனைய பெரிசாக்காம ஏதோ நம்ம கிட்ட வந்து பேசினாளே, அதுவே நல்லதா போச்சு!”, என்றெல்லாம் தனக்குள் கூறிக் கொண்டார்.

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, மாப்பிள்ளையிடம் பெண்ணை தாங்கி பேசினதில் ஏற்கனவே மெல்ல மெல்ல முறுக்கிக் கொள்ள தொடங்கி இருந்த வெங்கட்டின் மனம் மாமியாரின் சொற்களில், முறுகி, விறைத்து, முறைத்துக் கொண்டது தான் வினையாகிப் போனது.

தீபாவளிக்கு அடுத்த நாள் மாலை காபி முடிந்த கையோடு மதுராந்தகம் செல்ல ஆயத்தமானார்கள் அர்ச்சனாவும் வெங்கட்டும். அர்ச்சனா உடை மாற்ற என்று அவர்களது அறைக்கு சென்றிருக்க, டாக்சி அழைக்க என்று ரங்கபாஷ்யம் வெளியே சென்றிருக்க ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்த வெங்கட்டை இது தான் தக்க சமயம் என்று அணுகினார் விசாலாக்ஷி.

“மாப்பிள்ளை, நீங்க வந்து இருந்து இந்த தலை தீபாவளியை எங்களோடு கொண்டாடினது ரொம்ப சந்தோஷம்!”, என்று தொடங்கினார்.

வெங்கட்டும் புன்னகையோடு, “அதுக்கென்ன அத்தை. இதே போல, நீங்களும் அங்க எங்களோடு வந்து தங்கணும். பம்பாய் ஒண்ணும் தூரமில்லை. மெட்ராஸ்ல இருந்து ஒரு ராத்திரி ஒரு பகல் பிரயாணம் தான். ஈசியா வந்துடலாம்”, என்று உபசரிப்பாக பதிலளித்தான்.

அவனது பதிலில் நம்பிக்கை வர, விசாலாக்ஷி, “கண்டிப்பா வர்றோம் மாப்பிள்ளை. நீங்களும் அர்ச்சனாவும் சந்தோஷமா குடித்தனம் பண்ணறதை பார்க்க எங்களுக்கும் ஆசை தான். சீக்கிரமே ஒரு பேரனோ பேத்தியோ பெத்து எங்க கையில கொடுத்துடுங்க. உங்களுக்கு வளர்க்கிற சிரமம் கூட இல்லை. நாங்க பார்த்துக்கறோம்”, என,

“பார்க்கலாம் அத்தை. அதுக்கென்ன அவசரம் இப்போ”, என்று அதிகம் அந்த பேச்சை வளர்க்காமல் பதிலளித்தான்.

அவனது நழுவல் பதிலை உடனே இனம் கண்ட விசாலாக்ஷி, “அர்ச்சனா இன்னும் நிறைய விஷயங்களில சின்ன குழந்தை போல தான் இருக்கா. ஒரு குழந்தை பிறந்தா அவளுக்கு பொறுப்பு வந்துடும். உலகம் என்னனு புரியும்”, என்று கூற,

இதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்காததால் ஒன்றும் சொல்லாமல் இருந்தான் வெங்கட்.

விசாலாக்ஷி மேலும் துணிவு பெற்று, “என்னனு புரிஞ்சுக்காம சில சமயத்துல பிடிவாதம் பிடிப்பா. மனசுல என்ன இருக்குன்னு வெளிப்படையா பேச மாட்டா. நீங்க தான் கொஞ்சம் பொறுத்து போகணும். நானும் அவகிட்ட சொல்லி இருக்கேன், அனுசரிச்சு விட்டு கொடுக்கறது தான் வாழ்க்கை அப்படின்னு.

விசாலாக்ஷி பேச பேச வெங்கட்டிற்கு இன்னதென்று குறிப்பிட்டு அவர் சொல்லாவிட்டாலும் இத்தனை நாளாக கோபம் தணியாமல் இருந்த அர்ச்சனா இந்த இரண்டு நாளாக தன்னோடு சிரித்து பேசி பழகுவதற்கான காரணம் புரிந்தது. சந்தோஷம் அடைவதற்கு பதில் கன்னாபின்னாவென்று எரிச்சலும் ஆத்திரமும் வந்தது.

நான் இத்தனை நாட்களில் எத்தனை எத்தனை விதங்களில் சமாதானம் செய்திருப்பேன். அதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், அம்மா சொன்னதும் தான் தேவியாருக்கு மனம் சமாதானமாகி வந்ததோ.
அதென்ன, எனக்கும் இவளுக்கும் இடையே நடப்பதை அம்மாவிடம் கொண்டு சொல்வது என்கிற பழக்கம்??

அப்படி சொல்லறதுன்னு தொடங்கினா ப்ரைவசிங்கற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாம போய்டுமே!! எங்க ரெண்டு பேருக்கு நடுல நடக்கிற விஷயத்துக்கு அதென்ன மூணாவது ஆள் வந்து மத்யஸ்தம் செய்யறது? என்ன தான் அம்மான்னாலும் என்னை பொறுத்த வரை அவங்க மூணாவது ஆள் தான்.

என்ற ரீதியில் வெங்கட்டின் முறுக்கல்கள் வலுவாக சுற்றி சுழன்றது. மதுராந்தகம் செல்லும் வழி, அங்கே அவர்கள் தங்கி இருந்த நேரம், திரும்ப பம்பாய் பிரயாணம் வரை அவனது முறுக்கல் குறையவே இல்லை.