Welcome to my Blog

வாங்க வாங்க!

என்னை பற்றிய சில விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சிறு வயதில் பத்து அல்லது பதினோரு வயது முதலே படிப்பதில் மிகுந்த ஆர்வம். அம்புலிமாமா, சித்ரகதா மேலும் வார பத்திரிக்கைகளில் வரும் சிறு துணுக்குகள் என்று ஆர்வமாக படிப்பேன். அதிலும் ஏழு கடல், ஐந்து மலை தாண்டி மூன்றாவது மரத்தின் நான்காவது உடைந்த கிளையில் இருக்கும் கிளிப்பொந்தில் ஒற்றை சிறகுள்ள கிளியின் இறகை கொண்டு வந்தால்…. என்ற ரக கதைகள் என்றால் அந்த பள்ளிப்பருவத்தில் அப்படி ஒரு பைத்தியம்.

பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகு ஆனந்தவிகடன் பத்திரிகையில் வரும் நாவல்கள் / தொடர்கதைகள் என்றால் சொத்தையே எழுதி கொடுத்துவிடும் அளவிற்கு ஆர்வம். கல்கி, லட்சுமி, சிவசங்கரி, வாஸந்தி, பாலகுமாரன், இந்துமதி, ராஜேஷ்குமார், பாக்கியம் ராமசாமி, அநுத்தமா, சாண்டில்யன் என்று எனது ஆஸ்தான எழுத்தாளர்களின் வட்டம் பெரிதாகிக்கொண்டே போனது. பின்னாளில் இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, ரமணிச்சந்திரன் என்று மேலும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

கல்லூரி நாட்களில் விளையாட்டாக, கல்லூரியின் ஆண்டு மலரில் எழுதியதில் தொடங்கியது என் எழுத்துப் பயணம். பிறகு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எழுதினாலும் அது எதுவும் பிரசுரிக்கவில்லை. அதன் பிரதி கூட இப்போது இல்லை – பல காரணங்களால் அதை கிழித்துவிடுவேன். பிறகு முழு நேர வேலை, குடும்பம் என ஆனபிறகு எழுதுவது என்பது பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

வலைத்தளங்கள் வந்த பிறகு, அமுதா வலைதளத்தில் பிற வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை படிக்க செல்லும் போது மீண்டும் விளையாட்டாக எழுதப்போக அதை பாராட்டி ஊக்குவித்து மேலும் எழுத சொல்லி (வலியுறுத்தி) சிலர் சொல்ல “எழுதினால் தான் என்ன” என்று தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மற்ற எல்லா எண்ணங்களையும் பின்னுக்கு தள்ளி எழுத்து மட்டுமே மூளையின் பெரும்பான்மை செயல்திறனை ஆக்கிரமிக்கும் அளவிற்கு எனக்கு முக்கியமாகிவிட்டது.

அவ்வப்போது நேரம் கிடைக்காமை பெரும் பிரச்சினையாகிப் போனாலும் எழுதும் ஆசை விடமாட்டேன் என்கிறது.

சிறு வயது முதலே படிப்பது, எழுதுவது போல வேறு இன்னொரு ஆர்வமும் எனக்கு உண்டு. அது “தமிழ்”. நல்ல இலக்கிய நூல்கள், வலைத்தளங்கள் என்று தமிழின் பால் கொண்ட மோகமும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது. அதுவும் தமிழ் பிரதான மொழி அல்லாத இடத்தில் கடந்த கால் நூற்றாண்டாக தங்கி இருந்தும் கூட தமிழ் என்றால் இன்னமும் காதில் மட்டுமல்ல இதயத்திலும் தேன் வந்து பாய்கிறது.

தமிழின் பால் கொண்ட காதலும் எழுத்தின் பால் கொண்ட ஆர்வமும் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் என்று நினைக்கிறன். கிடைக்கும் நேரத்தை செம்மையாக கையாண்டு எப்படியும் விடாது எனக்கு தோன்றியதை எழுத்தில் வடிப்பேன் என்றும் உறுதி கொண்டுள்ளேன். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் எனக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போது உங்கள் முறை! உங்களை பற்றி சில விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்களா? உங்கள் பொழுதுபோக்கு, இசை / கலை ஆர்வங்கள், எண்ணங்கள் என்று எதை வேண்டுமானாலும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

என் கதைகளை பற்றி, என் எழுத்தைப் பற்றி, இந்த வலைத்தளம் பற்றி என உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பகிர்ந்து கொள்ளலாம். மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

 

நட்புடன்,
வி பி ஆர்

Advertisements