உன்னையல்லால் வேறே யார்? – இரண்டாம் பாகம்

அத்தியாயம் நான்கு

 

வெங்கட் பிளாட்டினுள் நுழையும் போது, வாஷிங் பவுடர் நிர்மாவின் விளம்பரம் முடிந்து, “ஹாய், ஐயம் சஞ்சனா, காட் அனதர் பெப்சி?” என்று அமீர் கானிடம் ஐஸ்வர்யாராய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இவன் வருவதை கவனித்த விசாலாக்ஷி எழுந்து வந்து வரவேற்பாக, “வாங்க மாப்பிள்ளை, இன்னைக்கு ரொம்ப நேரம் ஆகிடிச்சே!”, என்று வருந்தியபடி இரவு உணவை சூடு பண்ண அடுக்களைக்கு சென்றார். ராஜலக்ஷ்மி மகனருகே வந்து உட்கார்ந்து, அவன் ஷூவை கழற்றி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தவர், “இன்னைக்கு வேலை ரொம்ப அதிகம் இருந்ததா ராஜா? இப்படி சோர்ந்து போய் தெரியறியே”, மகனின் தலை முடியை வாஞ்சையாக கோதிவிட்ட படி கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, சாதாரணமாத் தான் இருக்கேன்”, சொல்லிக் கொண்டிருக்கும் போதே விசாலாட்சியின் கரங்கள் நீட்டிய தண்ணீரை வாங்கி இருந்தான். “சரி சாப்பிட வா. உனக்கு பிடிக்குமேன்னு மசால் தோசையும் தொட்டுக்க பூண்டு போட்ட வேர்கடலை சட்னியும் செய்திருக்கு. கை கால் கழுவிட்டு சாப்பிட வாப்பா”, அழைத்துவிட்டு தோசைக் கல்லை போட எழுந்தார் ராஜலக்ஷ்மி.

நின்று திரும்பிப் பார்த்தவன், “இன்னைக்கு கிருத்திகையாச்சே! நீங்க வெங்காயம் பூண்டு எல்லாம் பண்டிகை நாளில் எப்போ சாப்பிட ஆரம்பிச்சீங்க?”, என்று கேள்வியாக நோக்க,

“நாங்க என்னைக்கு வெங்காயம் பூண்டு சாப்பிட்டிருக்கோம்? உனக்கு பிடிக்குமே என்று தான் செய்தது. அது சரி, இன்னைக்கு கிருத்திகைன்னு உனக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் நீ பார்க்க ஆரம்பிச்சிட்டியா என்ன? தீபாவளி பொங்கலுக்கு சுவாமிக்கு நமஸ்காரம் செய்ய சொன்னா கூட செய்ய மாட்டியே, திடீர்னு என்ன ஞானோதயம்?”, திருவிளையாடல் சிவாஜி கணேசனை போல கேள்வி மேல் கேள்வியாக கேட்கத் தொடங்கினார்.

“இது வரைக்கும் தெரியலைன்னால் இனிமேல் தெரிஞ்சுக்க கூடாதா அம்மா?”, என்று நழுவலாக பதில் சொல்லிவிட்டு, “எனக்கு மசாலா தோசை, பூண்டு சேர்ந்த சட்னி எல்லாம் வேண்டாம். ஜஸ்ட், தோசையும் பொடியும் போதும். அதுவும் ரெண்டே ரெண்டு”, என்று பொதுவாக முடித்தான்.

ராஜலக்ஷ்மி பதில் சொல்வதற்கு முன்னால் விசாலாக்ஷி தான் மாப்பிள்ளைக்காக பரிந்து வந்தார், “இவ்வளவு சோர்ந்து போய் தெரியறீங்களே. காலையில இருந்து அலைச்சல் வேற. ரெண்டே ரெண்டு தோசை எப்படி போதும்? நீங்க கை கால் அலம்பிட்டு வர்றதுக்குள்ள நான் தேங்காய் சட்னியும் தக்காளி சட்னியும் அறைச்சிடுவேன்”, என்று சொல்லிவிட்டு சேலைத் தலைப்பை இழுத்து செருகிக் கொண்டு சமையல் கட்டுக்கு விரைந்தார்.

“இல்லை அத்தை…”, தடுக்க முயன்ற வெங்கட்டை அவன் தோளில் விழுந்த கரம் தடுத்தது. “விடுப்பா, இதெல்லாம் சின்ன விஷயம். நீ வேண்டாம்னு சொன்னாதான் அவங்க ஆசைப் பட்டு செய்யறதை ஏத்துக்கலையேன்னு ஆதங்கப் படுவாங்க. அவங்க போக்கில விட்டுடு”, என்று கூறி அவனை உடை மாற்ற அனுப்பி வைத்தார்.

உடை மாற்றி உணவு மேசைக்கு வெங்கட் வந்த போது, “தில் ஹை கி மான்தா நஹின்…” என்று காதலாகப் பாடிக் கொண்டே பூஜா பட்’இடம் இருந்து தர்பூசணியை அமீர் கான் லவுட்டிக் கொண்டிருந்தான்.

இவனை கண்ணுற்ற மாமனார், “நாங்க நாளை மறுநாள் கிளம்பலாம்னு இருக்கோம். இன்னைக்கு மதியம் தான் தாதர் ஸ்டேஷன் போய் டிக்கெட் புக் பண்ணிட்டு வந்தேன் “, என்று விவரம் தெரிவிக்க,

“ஒ… ஏன் மாமா? அதுக்குள்ள எதுக்கு கிளம்பணும்? மெதுவா போய்க்கலாமே….”, என்று இழுத்தான்.

“இதையே தான் நாங்களும் சொல்லிட்டு இருக்கோம், வெங்கட். என்னவோ கிளம்பணும் கிளம்பணும் என்று கால்ல வெந்நீர் கொட்டினது போல கிளம்பறாங்க. நாளைக்கு செம்பூர் கோவில்ல உங்க அம்மா பூஜைக்கு கொடுத்திருக்கா. உனக்கு ஆபீஸ் போக வேண்டாமே, சனிக்கிழமை தானே! அதுக்கு வந்திட்டு அப்படியே இவங்க கிளம்பற வரை இங்கே இருந்திட்டு போன்னு இப்போதான் கொஞ்சம் முன்னே அர்ச்சனா கிட்ட கூட கேட்டிருக்கா அம்மா. ஆனா, அர்ச்சனா வரலை போல இருக்கு…”, பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டே வந்து, கடைசியில் தேவையற்ற சில தகவலையும் கொடுத்து விட்ட அவஸ்தையில் திண்டாட்டமாக நிறுத்தினார் வெங்கட்டின் தந்தை ராமானுஜம்.

“அவ கிடக்கறா….. எப்போ பாரு, கோணலா யோசிச்சிட்டு….. “, ஒரே போடாக மகளின் போக்கை பற்றி அலட்சியமாக சொல்லிய படி மாப்பிள்ளைக்கு தோசையை தட்டில் இட,

“என்ன ஆச்சு, ஏன் வரலையாம்?”, கேட்க கூடாது என்று உத்தரவிட்டாலும் இந்த சதிகார நாக்கிற்கு இருக்கும் திமிரும் தைரியமும், வழக்கம் போல அது இஷ்டத்திற்கு கேட்டது.

“ஹ்ம்ம்…. என்னவோ சொன்னா, கஷ்டமா இருக்குமாம்….. ஏரி மேலே கோவிச்சிட்டு குளிக்காம போனாளாம் ஒரு கூறு கேட்டவ…. அது மாதிரி இருக்கு”, மாமியார் விசாலாட்சியின் தொனியில் கோபத்தை விட வருத்தமும் எரிச்சலுமே மிஞ்சி இருந்தது.

அந்த வருத்தமும் எரிச்சலும் வெங்கட்டிடம் கோபத்தை கிளறி விட, “போதும் தோசை”, என்று விட்டு எழுந்து கை கழுவினவன், “அத்தை, சட்னி ரொம்ப நல்ல இருந்தது…. இத்தனை ராத்திரி நேரத்திலும் எனக்காக தேங்காய் துருவி அரைச்சதுக்கு தேங்க்ஸ். முன்னால செய்ஞ்சு வைச்ச மசாலாவையும் வேர்கடலை சட்னியும் சாப்பிட முடியாததற்கு சாரி”, என்றும் மறக்காமல் நன்றி கூறி வருத்தமும் தெரிவித்து, மாமியாரை நன்றாக குஷிப் படுதினவன், தங்கள் அறைக்கு கார்ட்லெஸ் போனை எடுத்து சென்று, அர்ச்சனாவிடம் தொலை பேசியிலே பட படவென பட்டாசாய் வெடித்தான்…. இதை தான் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் கண்டோம்.

தன்னைப் பெற்றோரும், அர்ச்சனாவின் பெற்றோரும் உறங்க சென்ற பின்பு, கதவுகளை தாளிட்டு விட்டு, தங்கள் அறைக்கு வந்தவன், எப்போதும் போல இப்போதும் மனைவியின் நினைவுகளையும் கூடவே துணைக்கு அழைத்து வந்தான்.

பெருமூச்சோடு ஜன்னலுக்கு அருகே சென்று அங்கே எட்டிப் பார்க்க, மெல்ல நினைவுகள் பின்னோக்கி சென்றது.

கதவினை மூடும் ஓசையில் இலக்கற்று ஓடிக் கொண்டிருந்த சிந்தனையின் வேகம் தடைப் பட்டு, திரும்பிப் பார்க்க, அங்கே, வடித்தெடுத்த சிலை போல மனைவி என்று அன்று காலை வாழ்வினுள் அடியெடுத்து வைத்த அர்ச்சனா நின்றிருந்ததை கண்ட வெங்கட்டிற்கு ஒரு கணம் இதயக் குழியில் ஏதோ ஒன்று அசைவது போல இருந்தது. என்ன என்று சொல்ல முடியாமல், காரண காரியம் கற்பிக்க முடியாமல், மெல்ல தன்னை அவளிடம் தொலைப்பது போல இருந்தது.

முதலிரவின் இலக்கண இலக்கிய வரையறையின் படி நேர்த்தியாக செய்த அலங்காரம் செய்யப்பட்ட அறை; அந்த அறையின் நடுவே, மெல்லிய அலங்காரத்தில் மின்னிய மனைவி; பீச் வண்ணத்தில் மரூன் பார்டர் போட்ட க்ரேப் சில்க் புடவையும், அந்த புடவையின் நெடுகிலும் வளைந்து நெளிந்து ஓடின இளம் பச்சை நிறத்தினாலான பூக்கள், காம்பு மற்றும் கொடி என்று அவளது பெண்மையின் மேன்மையை பாங்குற எடுத்துக் காட்டின சேலை… எல்லாமாக வெங்கட்டிற்கு தாலி கட்டின மனைவியின் மீது காதல், ஈடுபாடு, மோகம் என்று பல ரூபத்தில் அவளிடம் சென்றடைய மனம் துடித்தது.

போதாக் குறைக்கு, அறைக்கு வரும் வழியில் காதோடு காதாக அறிவுரை வழங்கின அக்கா கணவர் ஜெகன்னாத்தின் குரல் இன்னமும் கேட்டது, “வெங்கட், நீ இப்போ ரொம்பவே டையர்டா இருப்பேன்னு தெரியும். ஆனாலும், தூங்க போய்டாதே. முடிஞ்சா, கிவ் இட் எ ட்ரை(!!!) இன்னைக்கு நீ கண்டுக்காம இருந்தியானா, டயர்டா இருக்குன்னு தூங்க போய்ட்டியானா, அவங்க மேல அக்கறை இல்லையோ, ஒரு வேளை பிடிக்கலையோன்னு தப்பா நினைச்சுக்க சான்ஸ் இருக்கு. அதுக்கு இடம் கொடுத்துடாதே. நிறைய பேசு. ஒரு வேளை அவங்க பயத்துலையோ தயக்கத்துலையோ இருந்தா நீ பேசுறதுல மெதுவா அந்த பயம், தயக்கம் எல்லாமே சரியாகிடும். குட் லக்”

அதே சமயம், தாலி கட்டி முடிந்து அர்ச்சனாவை ஏதோ காரணத்திற்காக அவள் உறவினர்களிடம் அழைத்து சென்ற போது, இவன் தனித்திருந்ததை கவனித்த இவன் நண்பன், கோபால், “என்னடா உன்னை தனியா விட்டுட்டு உன் புது பெண்டாட்டி எங்க போய்ட்டாங்க? நீ இங்க உட்கார்ந்துட்டு ஜாலியா கல்யாணத்துக்கு வந்திருக்கிற மற்ற பொண்ணுங்களை சைட் அடிக்கறியா?”, என்று விளையாட்டாக தோளில் தட்டியபடி கேட்டான்,

சிரித்தபடி இல்லையென தலையாட்டி விட்டு, அதே நேரத்தில் கட்டை விரலை மட்டும் இடது பக்கம் சுட்டிக் காட்டி, அர்ச்சனா அங்கே இருப்பதை தெரிவித்தான். “ஒ…. சரி தான். ஓகே, வெங்கட், நான் உன்கிட்ட நேற்றே சொல்லணும்னு நினைச்சேன். பட், நேற்று உன்னை சுற்றி எப்போதுமே ஆட்கள் இருந்ததால் சொல்ல முடியலை. இன்னைக்கு நீ தனியா தான் இருக்கே. அதான் சொல்றேன்…. ஆரம்பத்தில் இருந்தே, உன் பெண்டாட்டியிடம் ஜாக்கிரதையா இரு. இந்த பொண்ணுங்களே, ஆம்பளைங்க கொஞ்சம் அவங்க கிட்ட அக்கறை காட்டறோம்னு தெரிஞ்சா ஏறி மொளகா அரைச்சிடுவாங்க. ஒரு தடவை நம்மோட கண்ட்ரோல விட்டுக் கொடுத்துட்டா அப்பறம் அவங்களை கையிலேயே பிடிக்க முடியாது. அதுனால, ஆரம்பத்தில் இருந்தே ஒரு எல்லையில் தள்ளி வை. ரொம்ப நெருங்கவும் விடாத. உனக்கு அவங்க மேல இருக்கிற ஈடுபாட்டையும் காட்டிக்காதே. எந்தக் காரணம் கொண்டும் முக்கியமான முடிவுகளை அவங்களை எடுக்க விடாதே. அப்போ தான், அவங்க உனக்கு அடங்கினவங்கலாக இருப்பாங்க”, சமீபத்தில் தான் சுட சுட சண்டை போட்டு மனைவி நிரந்தரமாக பிறந்த வீட்டிற்கு திரும்பிச் சென்ற காயத்தில் பேசினான் கோபால்.

புருவம் நெரிய யோசனையாக பார்த்த வெங்கட்டிடம், “சாரிடா, உன் கல்யாணத்தன்னிக்கே உன்னை எந்த விதமான மூட் அவுட்’டும் பண்ண விரும்பலை. ஆனால், உன்னோட அஞ்சு வருஷம் ஒண்ணா படிச்சிருக்கேன் என்ற அக்கறையில் தான் சொல்றேன், சரியா? தப்பா எடுத்துக்காதே”, நண்பனின் குரல் இன்னமும் ஒலித்தது.

தராசுத் தட்டில் அக்கா கணவரின் அனுபவம் மிகுந்த அறிவுரையா நண்பனின் சொந்த அனுபவம் கொடுத்த அறிவுரையா என்று குழம்பினான்.

அரை நிமிடம் சென்ற பின்பே, அறைக் கதவை சார்த்திவிட்டு உள்ளே வந்த அர்ச்சனா இன்னமும் அங்கேயே நின்றிருப்பத்தை உணர்ந்தான். அதுவரை யோசனைகளின் பிடியில் இருந்தவன், மெல்ல மனைவியின் பார்வைப் பிடியினுள் வந்தான். மனைவி கேள்வியாக தன்னையே பார்த்தபடி இருந்தது அப்போது தான் உரைத்தது. அவள் பார்வைக்கு காரணம் தன் நெரித்த புருவமும் யோசனையான போக்கும் தான் என்று புரிய, மெல்ல சுதாரித்தவன், தொண்டையை கணித்து சீர் செய்து, “வா வா…. ஏன் அங்கேயே நின்னுட்ட?”, என்று மனைவியை வரவேற்றான்.

விசாலாக்ஷி படித்து படித்து உரு ஏற்றி வைத்திருந்த படி, பால் சொம்பை அவனிடம் கொடுத்து விட்டு, “நமஸ்காரம் செய்யணும்னு சொல்லி அனுப்பினாங்க, கிழக்கு பார்த்து நிக்கறீங்களா?”, என்று கேட்க,

இத்தனை நேரம் ஜகன்னாத்தும் கோபாலும் செய்த அறிவுரைகள் காற்று வழி பறந்து விண்வெளியை அடைந்தது. பால் சொம்பை பக்கத்தில் இருந்த மேசையில் வைத்தவன், சட்டென ஒரு கரத்தை நீட்டி, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ உட்காரு இங்க”, என்று சொல்லி ஒரே இழுப்பாக இழுத்தான். வழக்கமாக சினிமாவில் இது போல செய்யும் போது கதாநாயகி கதாநாயகன் மடியில் வந்து விழுவாள். அவனுக்கும் அதற்கு மேல் வசதியாக இருந்திருக்கும்.

ஆனால், நம் கதையில் அது போல எல்லாம் நிகழாமல், தொப்பென படுக்கையில் உட்கார்ந்தாள் அர்ச்சனா. சற்றே தடுமாறிவிட்டு, “வ..வ… வந்து பெரியவங்க எல்லாம் சொ…சொ… சொல்லி….அ…அ…அனுப்பினாங்க”, எதிர்பாராமல் இழுக்கப் பட்டதில் திக்கினாளா? அப்படி இழுத்த கணவனின் முதல் ஸ்பரிசம் திக்க வைத்ததா?

ஆனால், அறிவுரைகள் காற்றின் வழி சென்றதை போலவே, வெங்கட்டின் யோசனைகள் மற்றும் நெரித்த புருவம் ஆகியவையோடு நிதானமும் விண்வெளிப் பிரதேசத்தை நோக்கி பறந்து விட்டது. குறும்பாக சிரித்துக் கொண்டே ஜாலியான குரலில், “அ…அ….அதுக்காக இ…இ…இப்போ நீ என் கா…கா….காலில் விழுந்தால், அப்பறம் நா….நா…. நானும் உன் காலில் விழுவேன்”, விண்வெளிப் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிதானமும் யோசிக்கும் திறனும் சற்றே ரிவர்ஸ் அடித்து மீண்டும் ஜன்னல் வழியே வெங்கட்டை அடைந்து, “இப்போ மட்டும் என்ன, நீ இப்படி ஜொள்ளு விடறதுக்கு அவ காலிலேயே விழுந்திருக்கலாம். கங்கா, யமுனா, சரஸ்வதி எல்லாம் வாயில இருந்து வழியறது பாரு. பக்கின்ஹாம் கேனலை மூடு”, என்று கூறி விட்டு மீண்டும் தன் சகாக்களை காண பறந்தது.

“ஹான்! நீங்க என் காலில விழறதா? அச்சோடா….”, நிஜமாகவே பதைத்து தான் போய் இருந்தாள் அர்ச்சனா.

 

கைகள் தாமாக கன்னத்திற்கு சென்று விட, கோழிமுட்டை கண்கள் வாத்து முட்டை அளவிற்கு விரிந்து வெங்கட்டை வசீகரித்தது.

ஆனாலும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தாது, “பாலாவது குடிங்களேன்”, என்று அடுத்த கோரிக்கையை வைக்க,

“ம்ம்ம்…. வேண்டாம். எனக்கு வெறும் பால் அதும் ராத்திரியில சுத்தமா பிடிக்காது”, என்று அதையும் நிராகரித்தவனை சற்றே ஏமாற்றமாக பார்த்தாள். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், மெளனமாக தரையில் கண் பதித்து அவன் ஏதும் சொல்ல காத்திருந்தாள்.

அவள் எதுவும் சொல்வாளோ என்று ஓரிரு நிமிடம் பார்த்தவன் அவள் ஒன்றும் சொல்லாமல் மௌனத்தையே கடைப்பிடிக்க, மீண்டும் தொண்டையை கனைத்து சீர் செய்து வார்த்தைகளை தேடித் பிடித்து கோர்த்து சொல்ல தொடங்கினான். திருமண வாழ்வின் முதல் பெரிய முட்டாள்தனத்தை வெற்றிகரமாக செய்தான்.

“அர்ச்சனா, இப்போ சொல்லப் போறதை நீ சரியான முறையில புரிஞ்சுப்பே என்று நினைக்கறேன். நம்ம ரெண்டு பேருக்கும் அரேஞ்ச்ட் மாரேஜ் செய்து வைத்ததுல நம்மால ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கும் முன்னாலேயே கல்யாணம் என்று நெருங்கி வந்துட்டோம். ஆனா, மற்றதெல்லாம்…. ஐ மீன்….”, என்றவன் ஒரு கையை சுற்றிலும் இருந்த அலங்காரத்தை சுட்டிக் காட்டி, “மற்றதெல்லாம், இப்போதைக்கு அவசரமில்லை என்று தோணுது. மெதுவா, இயல்பா, அதன் போக்கில நடக்கட்டும். இப்போ படுத்து தூங்கலாம். நீயும் காலையில சீக்கிரம் எழுந்தது, கல்யாண புகை அப்படின்னு டையர்டா இருப்பே இல்லையா? “, என்று கேட்க,

மீண்டும் ஒரு முறை ஏமாற்றமாக உணர்ந்தாள் அர்ச்சனா. “நீ என்ன சொல்லறே? உனக்கு ஓகேவா? உன் அபிப்ராயம் என்ன?”, என்று கூடவா ஒருத்தருக்கு கேட்கத் தோன்றாது….

அத்தனை கற்பனைகளோடு வந்ததென்ன? இங்கே இவன் சொல்வது என்ன?
முதலிரவு என்றதும் உடனே கட்டிலில் புரண்டிட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை தான். ஆனால்…. ஆனால், கொஞ்சம் நம்மிடம் மனைவி என்ற முறையில் சல்லாபமாக பேசி இருக்கலாமோ! அதது இயல்பாக எப்படி நடக்கும்? இவரும் கொஞ்சம் முயன்றால் தானே…. பேசுவதற்கு கூடவா டையர்டா இருக்கும்? ஒருவேளை அது வெறும் சாக்கு தானோ!

மனதில் தான் இப்படிப் பட்ட எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, நாலா பக்கமும் மண்டையை உருட்டியபடி அவன் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் சரி என்று விட்டு, அவர்கள் திருமண வாழ்வின் அடுத்த பெரிய மடத்தனத்தை பெண்டாட்டியாய் லட்சணமாய் அர்ச்சனா செய்தாள்.

“சரி விளக்கை அணைக்கறேன், படு”, என்று கூறி விட்டு கண்ணை மூடினான் வெங்கட்.

மூடின கண்களின் வழியே சூடான கண்ணீர் வழிவதை உணர்ந்த போது தான், நிகழ் காலத்திற்கு வந்தது உரைத்தது. நான் அன்று ஒரு வேளை சிறிது நேரமாவது உட்கார்ந்து மனம் விட்டு பேசி இருக்கலாமோ! அவளாவது, இதை தான் எதிர்பார்கிறேன் என்று அவள் மனதில் இருந்ததை தெளிவாக சொல்லி இருக்கலாமோ!

விடை தெரியாத கேள்விகள், மிக மிக காலதாமதமாக வந்து ஆக்கிரமிக்க, உறக்கமில்லா பல இரவுகளை போலவே அந்த இரவும் வெண்ணிலவின் சாட்சியாக ஒவ்வொரு மணித்துளியையும் அவனை கடக்க வைத்தது.