திண்ணிய நெஞ்சம் வேண்டும்

 

அத்தியாயம் ஆறு


அப்பா அம்மா வீட்டில் இருந்து அவள் சாமான் அண்ணிகளின் மேற்பார்வையில் வந்து இறங்கின போது, “வாம்மா வா.. வா!”, என்று பத்மாசினி இன்முகமாக வரவேற்க, வந்தவர்கள் வைஜயந்தியை பார்வையாலேயே தேடுவதை கவனித்த விமலா, “வைஜுவா? என் பிள்ளை கௌஷிக்குக்கு இட்லி ஊட்டி விடறா. என் கிட்ட ஒரே ஓட்டம் காட்டுவான், இப்போ என்னடான்னா சித்தி தான் ஊட்டனும் என்று தினம் அவளை போட்டு படுத்தி எடுக்கறான்”, என்ற படி இருவரின் முன்னாலும் ஜில்லென்ற தண்ணீர் குவளைகளை டிரேயில் வைத்து நீட்டினாள்.

உள்ளே நுழைந்த போது சற்றே தயக்கம் கலந்த எதிர்பார்போடு வந்தவர்களுக்கு வைஜயந்தி இந்த வீட்டு மனிதர்களோடு சகஜமாக பழக ஆரம்பித்திருப்பது கண்டு நிம்மதி மூச்சு விட முடிந்தது. பேச்சுக் குரல் கேட்டு உள்ளிருந்து வெளியே வந்த வைஜயந்தியும், “வாங்கோ மன்னி!”, என்று வரவேற்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். வைஜயந்தியின் தோள்களில் இன்னமும் தொங்கிக் கொண்டிருந்த கௌஷிக் வந்தவர்களை பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்பது போல தயக்கத்தோடு பார்க்க, விமலா, “அவனை என்னிடம் கொடு வைஜயந்தி, நீ பேசிட்டிரு”, என்று மகனை வாங்கிக் கொண்டு அவர்கள் பேச இடம் கொடுத்து நகர்ந்தாள்.

ஆட்கள் சூட்கேஸ்களையும் சின்னதும் பெரிதுமாக சில பெட்டிகளையும் அவர்களது அறைக்கு எடுத்து செல்லத் தொடங்க, ராகவ் அங்கே இருந்து அதை வைக்க சரியான இடங்களை காட்டிக் கொண்டிருந்தான். வைக்க வேண்டிய இடங்களில் வைத்தான பிறகு அவனும் கீழே வந்து வைஜயந்தியின் அண்ணாக்களோடு பேசிக் கொண்டிருந்தது வைஜயந்தியின் கண்களில் தப்பவில்லை.

 

வேண்டாத ஒப்புமை செய்யக் கூடாது என்றாலும் சுந்தர் அப்பாவையும் அண்ணாக்களையும் செய்யும் அலட்சியம் நினைவில் வரத்தான் செய்தது. அதுவும் அண்ணாக்கள் இருவரையும் அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டு பேசுவதும், 

 

சமயத்தில் அப்பாவை பற்றி குறிப்பிடும் போதே அலட்சியமாகவும் மரியாதை குறைவாகவும் பேசுவது…. எல்லாமே மனதில் வந்து போனது.

சட்டென, சுற்றிலும் அதிகம் பேச்சு சத்தம் கேட்காமல், எல்லாரும் தன் முகத்தை பார்த்தபடி இருப்பதை கவனித்து நிகழ்காலத்திற்கு வந்தவள், என்ன என்பது போல பார்த்தாள். “அடுத்த வாரம் ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வர சொல்லி சொல்லறாங்க, போயிட்டு தான் வாயேன். உன் அண்ணா பிள்ளைங்க எல்லாம் அத்தையையும் புது மாமாவையும் பார்க்க ஆசையா இருப்பாங்க இல்லையா?”, என்று மாமியார் பத்மாசினி சிபாரிசு செய்த போது தான் அண்ணிகள் என்ன கேட்டிருப்பார்கள் என்று புரிந்தது.

“பார்க்கறேன் அண்ணி. இவரிடமும் கேட்டுக் கொண்டு அவர் ப்ரீயாக இருந்தால் வர பார்க்கிறேன். என்னைக்கு வர்றேன் என்கிறதை பிறகு போன் பண்ணி சொல்லறேன்”, என்று சமாளிப்பாக கூறுவது தெரியாத விதத்தில் சொல்ல,

“சனிக்கிழமை காலையில பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ண டிரை பண்ணப் பார்க்கறேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் உங்க வீட்டுக்கு வந்திட்டு சனி ஞாயிறு தங்கிட்டு ஞாயிறு சாயந்திரம் கிளம்புகிறாப்போல வரப் பார்க்கிறேன். ஒரு வேளை சனிக்கிழமைக்கு ஆள் கிடைக்கலைன்னால் தகவல் சொல்லுறோம். இப்போதைக்கு வெள்ளிக்கிழமை வருவதாக வச்சிக்கலாம்”, பளிச்சென கூறிவிட்டான் ராகவ்.

“ஒ….. ரொம்ப சந்தோஷம். குழந்தைகள் மட்டுமில்லை, அம்மா அப்பாவும் உங்க ரெண்டு பேரையும் தம்பதியா வீட்டுக்கு ரெண்டு நாள் கூப்பிடணும்னு சொல்லிட்டிருந்தாங்க”, முதல் அண்ணி ஷாந்தி முகம் மலர்ந்து சந்தோஷித்தாள்.

“ஆமாம்…. வெள்ளிக்கிழமை வந்து ரெண்டு நாள் தங்கப் போறீங்க என்று சொன்னால் ரொம்பவே சந்தோஷப் படுவாங்க”, இரண்டாம் அண்ணி லதா கூறிவிட்டு குறிப்பாக அவளது கணவனை காண, குறிப்பை புரிந்து கொண்டவன் கை நீட்டி, “ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை!”, என்று குரல் கனக்க ராகவிற்கு நன்றி கூறி ஆச்சரியப் படுத்தினான்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பத்மாசினி, ‘கல்யாணத்துக்கு பிறகு முதல் முறையாக வந்திருக்கீங்க’, என்று உபசரித்து மஞ்சள் குங்குமத்தோடு ஆளுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை வைத்துக் கொடுத்து வழியனுப்பினார். கார் வேண்டாம் என்று மீண்டும் எடுத்துப் போகச் சொல்லி விட்டாள் வைஜயந்தி.


பிறந்த வீட்டினர் சென்ற பிறகு கௌஷிக்கைத் தேடி தோட்டத்துப்பக்கம் சென்றவளை யோசனையாக பார்த்திருந்த இளைய மகன் பக்கம் வந்த பத்மாசினி, “என்னப்பா யோசனை?”, என்று வினவினார்.

யோசனை மாறாமல், நெடிய மூச்சோடு பார்வையை விலக்கினவன், “இல்லம்மா, ஒண்ணுமில்ல…”, என்றான்.

“ஒண்ணுமில்லைன்னு சொல்லும்போதே மனசுல நிறைய ஓடுதுன்னு புரியுதுப்பா. ஆனாலும், அவங்க வந்து கேட்டதும் மறுக்காம நீ அங்க போய் தங்க ஒப்புக்கொண்டது ரொம்ப சந்தோஷம்பா”, என்று கூற, ராகவின் பார்வை பல கேள்விகளை தாங்கி அம்மாவின் மீது படிந்தது.

“தப்பு செய்யறோமோ என்று நினைக்காதே ராகவ். ஏதேதோ நினைச்சு மனசை குழப்பிக்காதே”,

“அப்போவும் நான் தப்பு செய்ததாக நான் நினைக்கலைம்மா. என் மனசுக்கு சரின்னு பட்டதை தான் செய்தேன். ஆனால் தப்பாகத் தானே போச்சு”, விரக்தி எட்டிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் விடாமல் ஒட்டிக் கொண்டு வெளிப்பட்டது.

“அவ கிடக்கிறா கடங்காரி. யாரைப் பத்தியும் நினைக்காமல் தான் தன் சுகம்ன்னு தன்னைப் பத்தி மட்டுமே சுயநலமா யோசிச்சு உன்னை ரொம்பவே வேதனைப் படுத்திட்டா. ஆனா, வைஜயந்தி பார்த்தியா, அவங்க அத்தனை பேர் எதிரிலையும் நானே அவங்க வீட்டுக்கு போயிட்டு வா என்று சொன்னாலும், உன்னை விட்டுக் கொடுக்காமல், உன்னை கேட்டுக் கொண்டு பிறகு சொல்லறேன் என்று சொன்னாள் பாரு. அவங்க வீட்டு மனுஷங்களாகவே இருந்தாலும் உன் மனசு நோகாம நடந்துக்கணும் என்று நினைக்கறா பாரு. எந்த சந்தர்பத்திலும் உன் கௌரவம் கெடாமல் நடந்துப்பா வைஜயந்தி என்று தான் எனக்கு தோணுது ராகவ்”

“நம்ம எல்லார் மனசும் நோகாம நடந்துக்கணும். நம்ம குடும்ப கௌரவம் இதுக்கு மேலயும் சிதறிடக் கூடாது”

“அதுவும் தான். நிச்சயமா வைஜயந்தி அந்த கிராதகி போல இல்லை. நீ மனசை அலைபாய விடாதே ராகவ். இனிமேல் நீ எந்த கவலையும் படவேண்டிய அவசியம் இல்லை”, மகனின் தோள் தட்டி ஆறுதல் கூறிவிட்டு இரவு சமையல் வேலை பார்க்க சமையலறை நோக்கி, “விமலா, பட்டூராவுக்கு சன்னாவை வேகப் போட்டியா?”, என்று மூத்த மருமகளை தேடி சென்றார். அப்பாவும் அண்ணனும் அம்மா பேசி முடிக்கும் வரை இவர்கள் சம்பாஷணையில் குறுக்கிடாமல் இருந்தவர்கள், இப்போது மெல்ல அவர்களது அறிவுரையை தொடங்கினர்.

“ஏன் ராகவ் ஹனிமூன் போகலை?”, விஷால் கேட்க,

“இல்லைண்ணா, எங்க ரெண்டு பேருக்குமே கொஞ்சம் டைம் வேணும். அவசரம் ஒண்ணுமில்லையே, மெதுவா போகலாமான்னு நினைச்சேன்”, மெல்லிய குரலில் பதிலளித்தான் ராகவ்.

“இல்லப்பா ராகவா, டைம் வேணும்னு நீ நினைச்சியே தவிர, அவ இதைப் பற்றி என்ன நினைக்கிறா என்று கேட்டு அதுக்கு பிறகு உங்க முடிவை தீர்மானம் செய்தீங்களா? இல்லை, நீ முடிவு செய்துட்டு அதுக்கு பிறகு அவ கிட்ட சொன்னியா?”, அப்பா ஆணியடித்தாற்போல கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் ராகவ் மௌனம் காக்க, மீண்டும் அப்பா சேஷகோபாலனே, “அவ கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுட்டு உங்க முடிவை எடுத்திருக்கலாமோ?”, மென்மையாக கேட்டாலும் கேள்வியில் அவனை சுட்ட தவறு ராகவை தலை குனிய வைத்தது.

“ஆனா, நான் அதுக்குப் பிறகு அவ கிட்ட இந்த மாதிரி முடிவெடுத்திருக்கேன்னு சொன்ன போது அவ ஓகே என்று தான் சொன்னாள். ப்ரோப்ளம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை”, உறுத்தல் மிகுந்துவிட முணுமுணுத்தான்.

“நீ முடிவெடுத்திட்டு அவ கிட்ட சொன்னியான்னா சரின்னு சொல்லறதை தவிர வேற வழியென்ன இருக்கு அவளுக்கு?”, விஷால் நக்கலாக கேட்க, ஆயிரம் அர்த்தம் பொதிந்த பார்வையை பதிலுக்கு வீசினான் ராகவ்.
 
“நோ ராகவ்! நீ இப்படி எல்லாத்துக்கும் மாதவியோடு வைஜயந்தியை கம்பேர் பண்ணாதே. நிம்மதி மொத்தமா போய்டும்”, எச்சரித்துவிட்டு அண்ணன் வெரான்டாப் பக்கம் ஒதுங்கிக் கொள்ள,

அப்பா வேறெதுவும் பேசாமல், அவனது தோளை தட்டி விட்டு அவரது வேலையை பார்க்க எழுந்து சென்றார்.  

 

அம்மா, அப்பா மற்றும் அண்ணன் என்று மாற்றி மாற்றி உபதேசித்தது யோசனையை தூண்டி விட, வைஜயந்தியிடம் எப்படி பேசத் தொடங்குவது என்ற சிந்தனையில் அவர்களது அறையை நோக்கி சென்றான் ராகவ். இரண்டடி செல்லும் முன்னாலேயே பின்கட்டுக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் நின்றிருந்த வைஜயந்தி கண்ணில் பட்டுவிட்டாள். அவள் கண்ணில் சமவிகுதியில் தென்பட்ட வலியும் வேதனையுமே அவள் இவர்களின் பேச்சை முழுமையாக கேட்டிருக்கிறாள் என்று தெளிவாக சொல்லியது. அவசரமாக ஹாலில் பேசிக் கொண்டதை மனதினுள் ஒருமுறை ஓட்டினவன், “ஹையோ எத்தனை கேட்டாளோ”, என்று நினைத்துக் கொண்டான்.

 

நினைத்து காத்திருந்தது போலவே சிறிது நேரத்தில் காப்பி டம்பளர்களோடும் கல்யாண பட்சணங்களோடும் அவர்களது அறைக்கு வந்தவள், அவனது காப்பி டம்பளரையும் பட்சணத்தையும் அவன் பக்கம் நீட்டி விட்டு, தன் பங்கை எடுத்துக் கொண்டு சாமான்களை அதனதன் இடத்தில் அடுக்கத் தொடங்கினாள்.

அமர்த்தலாக சிறிது நேரம் அவள் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக செல்வதையே பார்த்திருந்தவன், “ஜெயந்தி, நான் உன்னோட கொஞ்சம் பேசணும்! ரெண்டு நிமிஷம் இங்க வந்து உட்காரு…”, என்று அழைத்தான்.

தயக்கமாக, “சொல்லுங்க….”, நின்ற இடத்தில் இருந்தே தவிர்க்க முடியாமல் கேட்டாள்.

தனக்கு எதிரே இருந்த இடத்தை காட்டிவிட்டு காத்திருக்க, வேறு வழியின்றி கையில் வைத்திருந்த சல்வார் செட்டை அங்கேயே வைத்துவிட்டு அவன் கை காட்டின இடத்தில் வந்து அமர்ந்தாள். 

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால நாங்க பேசினதை கேட்டிருக்க போல…”, என்று தொடங்கினான்.

“ஆமாம் கேட்டேன். வேணும்னு ஒட்டு கேட்கலை. நான் கௌஷிக்கை தேடி தான் கொல்லைப் பக்கம் போனேன். அவன் சாப்பிட்டதும் தூங்கிட்டான் போல இருக்கு. உங்க அண்ணி சொன்னாங்க. அதான் திரும்ப உள்ள வந்திட்டு இருந்தேன். அப்போ தான் கேட்டேன். பாதியில நான் அங்க வந்தா தொந்திரவு பண்ணுறாப் போல இருக்குமோன்னு தான் அங்கேயே நின்னுட்டேன்”, தான் ஒட்டுக் கேட்க நேர்ந்ததை விலாவரியாக விளக்கினாள்.
 
“ப்ச்…. நான் அதுக்காக கேட்கலை. எவ்வளவு கேட்டாய்ன்னு தெரியலை. உனக்கு….. நாங்க பேசினதை கேட்டுட்டு உனக்கு ஏதாவது….. தெளிவு படுத்திக்க இருந்தால்…..”,

இல்லை என்பது போல தலையை குறுக்காக அசைத்துவிட்டு, “எங்க அண்ணா அண்ணி கேட்டாங்க என்கிறதுக்காக உடனேயே எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்க ஒத்துக்கொண்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்”, மெல்லிய குரலில் நன்றி கூறினவளை ஏமாற்றமாக பார்த்தான் ராகவ்.

“உங்க வீட்டுக்கு வர்றதாக ஒப்புக்கொள்ளலை. அவங்க வீட்டுக்கு வர்றதாக தான் ஒப்புக்கொண்டேன். இது உன்னோட வீடு. இங்க தான் நாம இருக்கோம்”, வார்த்தைகள் சற்றே சுள்ளென வந்தது.

 

சற்று நேரம் பேசாமல் இருந்தவள், “உங்கம்மா பேசினதை வச்சு, இப்போ நீங்க வரேன்னு சொன்னது ரொம்ப பெரிய விஷயம்னு புரிஞ்சது. அதான் தாங்க்ஸ் சொன்னேன்”, கவனமாக எங்க வீடு என்றோ, உங்கம்மா பேசினது முழுசும் புரியலை விளக்கமாக சொல்லு என்றெல்லாம் வார்த்தைகளை விடாமல் பேசினவளை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்திருந்தான்.

பிறகு, “ஹனிமூன் போகிறதைப் பற்றி உன்கிட்டயும் பேசிட்டு நான் முடிவெடுத்திருக்கணும். ஐயம் சாரி. ஒரு வேளை உனக்கு எங்கயாவது போகணும்னு இருந்திருக்கலாம்”

 

“நோ ராகவ், நீங்க எதுக்காக ஹனிமூனை ஒத்திப் போட்டீங்க என்று என்னால புரிஞ்சுக்க முடியுது. சொல்லப் போனால், நானே அதுக்காக உங்ககிட்ட நன்றி சொல்லனும்னு இருந்தேன். என்கிட்டே கேட்டிருந்தாலும் நானும் பிறகு பார்த்துக்கலாம் என்று தான் சொல்லி இருப்பேன். இப்போ, நான் நினைச்சதையே நீங்களும் சொல்லிட்டீங்க, ஆனால், பழி என் மேல வராது”

 

 ஹப்பா தப்பிச்சேன் என்ற பாவனையில் வைஜயந்தி சொல்ல, ராகவின் இதழில் புன்னகை பூத்தது. மனதின் ஓரத்தில், “கொஞ்சம் கூட அனுசரணையா பெண்டாட்டி மனம் புரிஞ்சு நடந்துக்கறதில்லை என்று ஏற்கனவே ஒருத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு போய்ட்டா. இவகிட்டேயாவது அதே தப்பை செய்யாம இருந்திருக்கலாம் இல்லையா?”, என்று மனசாட்சி இடித்துரைக்க, அதை தூக்கி ஓரத்தில் கடாசிவிட்டு,

“அடாடா, என்ன ஒரு நல்ல எண்ணம்? அப்போ என் மேலே பழி வந்தால் பரவாயில்லை இல்லையா?”, கேலியாக புன்னகைத்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே வைஜயந்தி பதறி, “ஹையோ, அப்படி எல்லாம் இல்லை. இப்போ என்ன…? நான் வேணா….”, சுதாரித்து வார்த்தைகளுக்கு கத்திரி போடுவதற்குள் அவள் சொல்லவந்த, “நானும் தான் ஒத்திப் போட நினைச்சேன் என்று நான் போய் சொல்லிடட்டுமா?”, என்பதை சரியாக ஊகித்துவிட்ட ராகவின் கேலிப் புன்னகை இன்னும் பெரிதாக விரிய மேலெழுந்த ஒற்றைப்புருவம் வைஜயந்தியை நன்றாகவே உலுக்கியது.

‘ஈசியா பேசற மாதிரி பேசி சரியா மாட்டிவிட்டுட்டானே, இவன்கிட்ட இனிமேல் ஜாக்கிரதையா இருந்துக்கணும்’, என்று நினைத்தபடி அவனை முறைத்தாள்.

“ப்ச்…. சொல்ல மாட்டியா அப்போ? ஆணுக்கு பெண் சரி சமம்; பெட்டெர் ஹாஃப்; லைப் பார்ட்னெர் என்று சொல்லுறாங்க…ஆனால் திட்டு/பழி இதெல்லாம் எங்களுக்கு மட்டும் ஏகபோக உரிமை போல”, மேலும் சீண்டினான்.

வைஜயந்தியின் முறைப்பு மெல்ல குழப்பமாகி, பின்னர் குழப்பம் வடிந்து நிஸ்சலனமாகி விட்டது முகம். “தூக்கம் வருது, உங்களுக்கும் நாளை காலை சீக்கிரம் எழுந்துக்கணும்னு சொல்லிட்டிருந்தீங்க இல்லையா…. படுத்து தூங்குங்க. குட்நைட்”, வைஜயந்தி விலகி செல்ல, முகத்தில் அடித்தது போல உணர்ந்தான் ராகவ்.

வெட்கம், சரசம், சிருங்காரம் என்று இல்லாவிட்டாலும் சும்மா ஜாலியாக என்ற ரீதியிலாவது வைஜயந்தி பதில் சொல்லி இருந்திருக்கலாமோ! மொத்தமாக அவனோடான தவிர்த்து உறங்கசென்றவளை அணுகும் வழி புரியாமல் குழம்பினான். தான் மட்டுமாக அவளிடம் வழிந்தது போலாயிற்றே என்று வேறு அவமானமாக இருந்தது.

 

Advertisements

One thought on “திண்ணிய நெஞ்சம் வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s