திண்ணிய நெஞ்சம் வேண்டும்

அத்தியாயம் ஐந்து

 

அடுத்து வந்த நான்கைந்து நாட்களும் அதன் போக்கில் ஓட, கல்யாணத்திற்கு என்று ராகவ் எடுத்திருந்த ஒரு வார லீவும் முடிந்து நாளை வேலைக்குத் திரும்ப வேண்டும். காலை எட்டு மணிக்கு புறப்பட்டால் மாலை ஒன்பது அல்லது ஒன்பதரை வரை செல்லும் அவனது வேலை நாள். வாரக் கடைசியும் வேலைக்கு சென்றே ஆகவேண்டும். சொந்தமாக நியூஸ் பேப்பர் ஏஜென்சி வைத்து நடத்துகிறான். மூன்று இடங்களில் அதற்கான பிரான்ச் வைத்து அங்கே இருந்து புத்தகங்களும் விற்பனை செய்கிறான்.

 

ஒவ்வொரு கடையிலும் வேறு வேலையாட்கள் இருந்தாலும், மேற்பார்வை இடுவது, எதிர்பாராமல் யாரேனும் லீவ் எடுத்தால் அங்கே சென்று அவர்கள் வேலையை ஏற்றுக்கொள்வது, மொத்தமாக புத்தகங்களும் தின, வார, மாத சஞ்சிகைகள் ஆகியவற்றை பதிப்பகத்தாரிடமிருந்தே ஆர்டர் கொடுத்து வாங்குவது, விற்பனையை கூட்ட வியாபார உத்திகள் என்று காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல நேரம் போகும் அவனுக்கு.

அதனால் தான் வேலைக்கு செல்லும் முன்னால் விடுமுறையில் இருந்த நான்கைந்து நாட்களும் வைஜயந்தியுடன் பேச கிடைத்த சந்தர்பங்களில் அவனது வேலை விதம், பொழுதுபோக்கு எல்லாவற்றையும் சொன்னான். வெளியே செல்லலாம் என்று அவன் அழைத்த போது வைஜயந்தி அவ்வளவாக ஆர்வம் காட்டாதது மட்டுமல்ல முடிந்த வரை சாக்குபோக்கு சொல்லி தவிர்க்க அதற்கு மேல் அவளை கட்டாயப் படுத்தாமல், அவர்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே அவளோடு உட்கார்ந்து பேசினான்.

 

தொடக்கத்தில் அதற்கும் கூட ஆர்வம் காட்டாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவே அவள் நினைத்தாலும், அப்படியே விட்டு விடாமல் அவன் நச்சரிக்க, வேறு வழியில்லாமல் சென்றாள். அதற்காகவும்….. கூடவே, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்காகவும். வைஜயந்தி அறைக்குள்ளேயே எப்போதும் இருக்க, எதேச்சையாகவேனும் ராகவும் அறைக்குள்ளே வர நேர்ந்தாலோ சற்று நேரம் இருக்க நேர்ந்தாலோ வைஜயந்தி வெளியே வந்துவிடுவாள்.

 

ராகவிற்கும் இது எரிச்சலை மூட்டுமோ என்ற பயம். போதாக்குறைக்கு வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அனாவசியமான சந்தேகங்களுக்கு இடம் கொடுக்குமோ என்ற யோசனை வேறு. எல்லாமாக, அவன் மொட்டை மாடியில் பேச என்று கூப்பிட்டால் மறுக்காமல் சென்றாள். அப்படி அவனும் ஒன்றும் மணிக்கணக்காக பேசிவிடவில்லை. முதல் நாள் அரை மணியோ முக்கால் மணியோ என்றால் அடுத்த நாள் மேலும் பத்து நிமிடங்கள் கூடுதலாக என்ற அளவில் தான் பேச அழைத்தான்.

இரவு நேரத்தில் மீண்டும் அன்றைய தினத்தில் நடந்த சம்பவங்களை மெல்ல அசைபோட்டபடி அடுத்த நாளுக்கு வேண்டியதை எடுத்து வைப்பான். பிறகு, குட்நைட் சொல்லி படுத்தால் அடுத்த பத்தாம் நிமிடம் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். முதலிரவு அன்றே ஒருத்தர் மேலே படுக்கையில் மற்றவர் தரையிலோ சோபாவிலோ எல்லாம் படுப்பது நடக்காது என்றும் தீர்மானமாக சொல்லிவிட்டதால், இருவருமே படுக்கையிலேயே படுத்துக் கொள்வது என்று முடிவு செய்துகொண்டனர்.

 

ஆனாலும், உறக்கம் என்பது ஆளுக்கொரு திசையில் திரும்பியபடி, உறக்கத்தின் உச்சத்தில் கூட மறந்தும் தன் பக்க படுக்கையை மீறி அடுத்தவர் இருந்த பகுதியில் விரல் நுனி கூட எட்டிப் பார்க்க விடவில்லை.

 

முதல் நாள் இடப்பக்கமோ வலப்பக்கமோ உனக்கு விருப்பமான பகுதியில் படுத்துக்கொள், என்று அவன் சொன்னபோது உடனடியாக படுக்கையின் வலப்பக்க பகுதியை அவள் எடுத்துக் கொள்ள, அவன் இடப்பக்கம் படுத்துக் கொள்வது என்று முடிவாகியது. வலப்பக்கம் என்பது சுவற்றை ஒட்டி கதவில் இருந்து தள்ளி இருந்த பகுதி.

 

அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் உட்கார வேண்டுமானால் இடப்பக்கம் இருந்த பகுதியை தான் உபயோகிக்க வேண்டும். ஆக, ஒரு மூலையில் தன்னை சுருக்கிக் கொள்வது என்ற மனோதத்துவ வெளிப்பாட்டை தான் இப்படி அரை வாயிலில் இருந்து உட்புறமாக தள்ளி இருந்த பகுதியை எடுத்துக் கொள்ள வைத்ததோ? மேலும், கணவன் மனைவி என்ற திருமண உறவில், பாதுகாப்பு குறைவாக உணர்பவர்களோ பாதுகாப்பு தேவைப்படுபவர்களோ தான் உட்புறமாக இருக்கும் பகுதியை தேர்வு செய்வார்கள் என்றும் எங்கோ படித்த நியாபகம்.

 

அதாவது உறவில், அவர்களுக்கு என்று ஒரு சிறு பகுதியையோ வட்டத்தையோ குறித்துக் கொண்டு அந்த வட்டத்தை விட்டு வெகு குறைவான நேரங்களிலேயே வெளி வரும் குணாதிசயம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று மனோதத்துவ ஆராய்ச்சி கூறுவதாக படித்த நினைவு. 

 

மெல்ல தான் இவளது பயத்தையும் தயக்கத்தையும் போக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

அவன் பக்கத்து விஷயங்களை இலகுவாக பகிர்ந்து கொண்டது போலவே, வைஜயந்தியின் பொழுதுபோக்கு மற்றும் அவளது விருப்பு வெறுப்பு ஆகியவற்றை பற்றியும் இழுத்து வைத்து விசாரித்தான். சொல்லத் தயங்கினவளையும் அவன் இயல்பாக அணுகின விதம் மெல்ல பேச வைக்க கொஞ்சமேனும் அவளை பற்றி பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள். அப்படி நடந்த பேச்சின் முடிவில் தான் ஒரு நாள், “இங்கே கொஞ்சம் செட்டில் ஆகி பழகினதுக்கு பிறகு, உனக்கு வேணுமானால் வேலைக்கு போவதோ மேலே போஸ்ட் கிராஜுவேஷன் படிப்பதோ உனக்கு இஷ்டமானதை செய்யேன். வீட்டில் பொழுது போகாமல் இருப்பதை விட இது மேல் இல்லையா?”, என்று கேட்டான்.

அவன் சொன்னதை யோசித்து, “வேலைக்கு போகிறதா? கார் வந்தாலே வேண்டாத பழக்கங்களும் வந்துடுமோ என்று வேண்டாம் என்று சொன்னீங்க?”, என்று கேட்டாள் குழப்பமாக.

“ஹ்ம்ம்…… எஸ். இப்போவும் அதை தான் நினைக்கறேன். ஆனால், வேலைக்கு போவது என்கிறது உனக்கு நல்ல எக்ஸ்போஷரை கொடுக்கும் என்றும் நினைக்கிறேன். வெளி உலகத்தை புரிந்து கொள்ள, பல விதமான ஆட்களை……”

ஒற்றை கையை தடுப்பது போல முன்னே காட்டி, “ஸ்டாப் இட்! எனக்கு எந்த விதமான எக்ஸ்போஷரும் தேவை இல்லை. அதுனால என்னை காரக்டர் அனலைஸ் செய்வதற்கு பதில் வேற ஏதாவது வேலை பாருங்க”, கோபமாகவே பதிலளித்தாள்.

திகைப்பில் நெற்றி மேடு மேலே ஏற, கண்களில் கவனத்தோடு அவளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அவளது கோபம் குறைய காத்திருக்க, வந்த வேகத்திலேயே கோபம் வடிந்துவிட, சட்டென தன் மேலேயே வெறுப்பாகி போனது வைஜயந்திக்கு.

“ஐயம்… ஐயம் சாரி. எனக்காக உங்கள் விருப்பு வெறுப்பைக் கூட ஒதுக்கி வச்சிட்டு எனக்கு நல்லது செய்யும் என்று வேலைக்கு போவதற்கு ஓகே சொல்லறீங்க….. ஆனால், நான் உங்களை…. கோபமா பேசிட்டேன். ஐயம் டெரிப்லி சாரி”, குன்றலாய் மன்னிப்பு கேட்டாள்.

ஒற்றை கையை அலட்சியமாக காற்றில் விசிறியாக ஆட்டினவன், “ப்ச்….. அதை விடு. நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை தான் தப்பா போச்சு என்று நினைக்கிறேன். எந்த வார்த்தை அது? தெரிஞ்சால், இனிமேல் அவாய்ட் பண்ணிடறேன்”, இது தான் நிஜமான பிரச்சினை என்று மிகச் சரியாய் ஊகித்த ராகவை மெச்சாமல் இருக்க முடியவில்லை வைஜயந்தியால்.

“நீங்க ரொம்பவே காரக்டர் அனலசைஸ் பண்ணறீங்க ராகவ்!”, உண்மையில் சொல்ல வந்தது, நீங்க ஏன் இவ்வளவு பொறுமைசாலியாகவும் நல்லவராகவும் இருக்கீங்க ராகவ்? என்பது தான். ஆனால், பாராட்டாய் சொல்லப் போக ஏதோ அவனை கவர்வதற்காக இனிக்க பேசுவதாக நினைத்துவிட்டால்? அதனாலேயே அதை சொல்லவில்லை.

தோளை குலுக்கி, நான் அப்படி தான், என்பது போல சொல்லாமல் சொன்னவன், “ஹ்ம்ம்…. என்ன வார்த்தை? வேலைக்கு போவது….? எக்ஸ்போஷர்…..? வெளி உலகம்…..? பல விதமான ஆட்கள்….?”, கடைசி வார்த்தையை சொன்னபோது மீண்டும் கண்ணோரங்கள் இறுகின வைஜயந்தியின் முக பாவமே அது தான் சரியான காரணம் என்று சொல்ல, கேள்வியாய் தலை சரித்து, “பல விதமான ஆட்கள்……? இது என்ன அப்படி தப்பான வார்த்தையா? எனக்கு புரியலையே. சரி, எதுவா இருந்தாலும் இனிமேல் சொல்வதை தவிர்க்கப் பார்க்கிறேன். ஒருவேளை, மறந்து போய் சொல்லிவிட்டால் முறுக்கிக்காதே. இதில் என்ன பிரச்சினை என்று புரியாததால், அந்த வார்த்தையும் கெட்ட வார்த்தையாக இல்லாததால் பழக்க தோஷத்தில் சட்டென வந்துவிட சான்ஸ் இருக்கு”

மேலும் குன்றல் அதிகமாக, “நீங்க எனக்காக உங்களை எதுக்காக கண்ட்ரோல் பண்ணிக்கணும் ராகவ்? நீங்க உங்களை போலவே இருங்களேன்”, தனக்கு என்று ஒன்றை யோசித்து அவன் செய்வதாக சொல்லும் போது, தான் இன்னும் வாய்ப்பூட்டு போட்டு இருப்பது தவிப்பை அதிகப்படுத்தியது. 

“உனக்காக என்று என்னை எந்த விதத்திலும் பெருசா தியாகம் எல்லாம் செய்யலையே. இன்னும் சொல்லப் போனால், எனக்கு பிடிக்காதது என்ற விஷயங்களை உன்னிடமும் எஸ்டாப்ளிஷ் செய்துட்டு வர்றேன் தானே. தனித்துவம் கெடாமல் சின்ன சின்ன அனுசரணைகள் செய்துக்கறதில் தப்பில்லையே….. கல்யாணம் என்கிறதுக்கு அதானே அர்த்தம்?”, பேச்சிழந்து அவனையே பார்த்திருந்தவள் இந்த முறை தன்னை தடுத்துக் கொள்ளாமல் மனதில் பூட்டி வைக்காமல் சொன்னாள், “நீங்க இவ்வளவு நல்லவராக இருக்க வேண்டாம் ராகவ்”

“நான் நல்லவன் என்று யார் சொன்னது ஜெயந்தி? என்னிடமும் குறைகள் இருக்கு. அதெல்லாமும் போகப் போகத்தானே உனக்குத் தெரியும். அவசரப் பட்டு நான் நல்லவன்னு முடிவு பண்ணிக்காதே”.  

 

ஆனால் கடைசி வாக்கியத்தை தன்னுடையதாக்கி, “தன்னிடம் இருக்கிற நல்லதை மட்டுமல்ல குறைகளையும் ஒப்புக் கொண்டு, திருத்திக் கொள்ள முடியாத பட்சத்தில் அதற்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்பவனும் தான் பலசாலி. அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம் ராகவ்”

 

இவளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான் ராகவ்.

Advertisements

One thought on “திண்ணிய நெஞ்சம் வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s