திண்ணிய நெஞ்சம் வேண்டும்

அத்தியாயம் நான்கு

 

அத்தியாயம் நான்கு

முதல் நாள் அறைக்குள் சென்ற புடவையிலேயே அடுத்த நாள் காலையும் வெளியே வந்தது பார்த்து வியப்பாக சிலர் புருவம் மேலெழுந்து கீழிறங்கினாலும் மாமியார் முகத்தில் வேகமாக பரவத் தொடங்கின ஏமாற்றத்தையும் கண்டும் காணாமல் சகஜமாக ஒதுக்கி விட்டாள் வைஜயந்தி.

ராகவும் அவன் பங்கிற்கு திருமணத்திற்கு முதல் நாள் என்னென்ன செய்தானோ எப்படி நடந்து கொண்டானோ அப்படியே இருந்தான். மனைவி என்ற பிரஜை அந்த வீட்டில் வந்திருப்பது போலவே நடந்து கொள்ளவில்லை.

 

காலை ஒன்பது மணிக்கு குல தெய்வக் கோவிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் அதற்கு கிளம்பி தயாராகிக் கொண்டிருக்க, சித்ராவின் ஆறு வயது மகள் காவ்யாவையும் விமலாவின் மூன்று வயது மகன் கௌஷிக்கையும் பிரயாணத்திற்கு தயார் செய்யும் பொறுப்பில் உதவி செய்த படி மெல்லிய புன்னகையோடு சிறுவர்களின் விளையாட்டை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் வைஜயந்தி.

கோவிலுக்கு செல்லும் முன்னால் இருவரையும் குளிக்க வைக்க அவர்களின் தாயார் அழைத்து செல்ல, பத்மாசினிக்கு உதவியாக அடுக்களையில் காபி பிளாஸ்க்கை கழுவ வந்தாள்.

“இருக்கட்டும்மா, நேற்றைக்கு தான் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்திருக்கிற புது கல்யாணப் பொண்ணு. முதல்ல இந்த வீடும் நாங்களும் உனக்கு பழகின பிறகு வேலையெல்லாம் செய்யலாம். விமலா கழுவி வச்சிட்டு தான் போய் இருக்கான்னு நினைக்கிறேன். நீ இங்க உட்காரு. உனக்கு என்னென்ன சாப்பிட பிடிக்கும்னு சொல்லு”, இரண்டாம் மருமகளை உட்கார்த்தி வைத்து பேச்சுக் கொடுத்தார்.

உதவி என்று ஒருமுறை கேட்டுவிட்டேன். வேண்டாம் என்று நீங்கள் மறுத்தால் அதற்கு மேல் நான் வற்புறுத்தப் போவதில்லை என்பது போல அத்தோடு விட்டுவிட்டாள் வைஜயந்தி. ஆனால் அதற்காக அவர் கேட்டுக் கொண்டது போல தன்னைப் பற்றியும் பேசத் தொடங்கவில்லை.

காவ்யா மற்றும் கௌஷிக் செய்த லூட்டிகளை பற்றி சிலபல நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாள். காபி குடித்த டம்பளர்களை அடுக்களையில் கொண்டு வந்து வைத்து விட்டு ஷேவ் செய்யப் போனவன் அங்கே வைஜயந்தியை கண்டதும், அப்போது தான் அவள் அங்கே இருப்பது உரைக்க கேள்வியாய் பார்த்தான்.

மகன் கையில் டபரா டம்பளர் பார்த்துவிட்டு, “தேய்க்கப் போடு ராகவ். ஷேவ் பண்ணிக்க போறியா? வைஜு, நீ போய் அவன் குளிச்சதும் போட்டுக்க பான்ட், ஷர்ட் எடுத்து கொடுத்துட்டு வா”, என்று அனுப்பினார்.

வைஜயந்தியின் முகத்தில் தெரிந்த அப்பட்டமான எதிர்ப்பையே ராகவின் வார்த்தைகளும் பிரதிபலித்தது, “ஏம்மா, இத்தனை நாள் நானே தானே எனக்கு பான்ட், ஷர்ட் எடுத்து வச்சிகிட்டேன். இப்போ என்ன திடீர்னு அதுக்கு ஒரு ஆள்?”, கேலியாக கேட்பது போல கேட்டு, அவனது வழக்கமான மானரிசமான ஒற்றை கையை அலட்சியமாய் ஆட்டி அவளை உட்கார சொல்லுவது போல செய்கை காட்டி விட்டு அங்கிருந்து அகன்றான்.

ஆனால் பத்மாஸினி அதை லேசில் விட்டு விடுவதாய் இல்லை. “என்ன கேள்வி கேட்டுட்டு போறான் பாரு! இத்தனை நாள் அவனே எடுத்து போட்டுகிட்டா இப்போவும் அவனே தான் செய்துக்கணுமா? அவன் அப்படி தான் புரியாமல் பேசுவான், நீ ரூமுக்கு போய் அவனுக்கு வேறு ஏதாவது வேணுமான்னு பாரு”, மகனுக்கும் மருமகளுக்கும் உறவு பலப்பட உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அனுப்ப முயல, வேறு வழியின்றி அவனுடைய அறைக்கு வந்தாள்.

ஷேவிங் கிரீமை தாடையில் அப்பியபடி காமா சோமாவென்று ஏதோ ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டிருந்த ராகவ், அறை வாசலில் வைஜயந்தியை கண்டதும், வியப்பாக பார்க்க, அறைக்குள் வந்தது கதவை சார்த்தினாள்.

“சாரி, உங்க பர்சனல் நேரத்தில் உங்களை தனியாக விடமுடியாமல் நானும் இங்கே இருக்க வேண்டியதாக இருக்கு. உங்க அம்மா போ என்று அனுப்பி விட்டுட்டாங்க. காவ்யாவும் கௌஷிக்கும் இன்னும் குளிச்சிட்டு வரலை. எனக்கு இந்த வீட்டின் மற்ற இடங்களுக்கு போய் பழக்கம் இல்லைங்கறதால் வேறு எங்க போகிறதுன்னும் தெரியலை. அதான் இங்கேயே வந்துட்டேன். நான் உங்களை தொந்திரவு செய்யமாட்டேன். கொஞ்ச நேரம் புக் படிச்சிட்டு பிறகு வெளிய போயிடறேன்”, தயக்கமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் சுருக்கமாக முடித்தாள்.

சட்டென, ஒரு டவலை எடுத்து வெற்று மார்பை மூடிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே!”, என்று மட்டும் கூறிவிட்டு ஷேவிங்கை தொடர்ந்தான். அவனுக்கு முதுகு காட்டியபடி கைக்கு கிடைத்த பத்திரிக்கையை புரட்டத் தொடங்கினவள், அவன் ஷேவிங்கை முடித்து குளிக்க செல்லும் வரை நிமிர்ந்தாள் இல்லை.

 

பிறகும், பத்திரிக்கையை கீழே போட்டுவிட்டு நெற்றிப் பொட்டை நீவி விட்டபடி, ஆழப் பெருமூச்சு எடுத்து பந்தையக் குதிரையாய் ஓடிக் கொண்டிருந்த மனதை சமன்படுத்திக் கொண்டாள்.

குளிக்கச் சென்ற ராகவோ, முதலில் வைஜயந்தியை வீட்டை சுற்றிக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பிறகு….. பிறகு, அவளுக்கு வேலைக்கு செல்ல விருப்பமா, அல்லது மேலே படிக்க விருப்பமா என்றும் கேட்டு அதை செய்ய சொல்லவேண்டும்.

உயர் மட்ட பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் இல்லாவிட்டாலும் ராகவின் வருமானம் நிச்சயம் அவர்கள் இருவருக்குமான எதிர்கால வாழ்க்கைக்கு போதுமானதாகவே இருந்தது. அப்பா, அம்மா இருவருக்கும் கூட சேமிப்பிலும் வருமானத்திலும் எந்த குறைவும் இல்லை.

ஆக, பொருளாதார முன்னேற்றம் என்பதற்காக தேவையில்லாவிட்டாலும் வேலைக்கு செல்வதால் அவளுக்கு வெளி உலகம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் மன இறுக்கத்தை குறைக்கும் சந்தர்பத்தையும் கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டான். வெகு சீக்கிரம் இதை பற்றி அவளிடம் பேச வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.

குளித்து விட்டு அவன் மீண்டும் அறைக்குள் வந்த போது வைஜயந்தி போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

 

“இப்போ கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கோம் அண்ணா. திரும்பி வந்ததும் நான் போன் செய்யறேன். அதுக்கு பிறகு நீங்க சாமானை எல்லாம் கொண்டு வந்தது வைச்சா போதும். எத்தனை மணிக்கு நாங்க திரும்பி வருவோம் என்று தெரியாது. அப்பா அம்மா என்ன செய்யறாங்க? மன்னிகள் ரெண்டு பேரும் ஹப்பாடா என்று காலை நீட்டி உட்கார்ந்திருப்பாங்க இல்லையா?”, கேட்டுவிட்டு அந்தப் பக்கம் வரும் பதிலுக்கு காத்திருக்க, எதிர்பக்கம் அவள் அண்ணன் என்ன சொன்னானோ, குபீர் என்று சிரித்து பிறகு, “குட்டீஸ் எல்லாம் என் கண்ணுக்குள்ளயே இருக்காங்க அண்ணா”, என்று ஏக்கமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சிரித்த போது மின்னின கண்களும் இறுக்கத்தை தொலைத்து பூவாய் மலர்ந்த முகமும் முற்றிலும் புதிதான ஒரு வைஜயந்தியை காட்ட, ராகவிற்கே வியப்பாக இருந்தது.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தொலை பேசியின் தொடர்பை துண்டித்தவள், அறைக்குள் அவன் வந்தது விட்டதை கவனித்துவிட்டு, மீண்டும் சிரிப்பையும் துண்டித்து விட்டு, “என்னுடைய சாமான்களை எல்லாம் எப்போ கொண்டு வர்றதுன்னு விஜய் அண்ணா கேட்டார். கோவிலில் இருந்து திரும்பி வந்ததும் போன் செய்யறேன், அப்புறம் கொண்டு வாங்க என்று சொன்னேன்”, என்று தகவல் தந்தாள்.

“என்ன சாமான்?”, புரியாமல் கேட்டவனிடம்,

“என்னுடைய துணிமணி, லாப்டாப், சில எலெக்ட்ரானிக் சாமான்கள், பீரோ, கார் இதெல்லாம் தான்!”,

“துணிமணி சரி, மற்றதெல்லாம் எதுக்கு? இதோ என்னுடைய பீரோ இருக்கு. இதுல ரெண்டு ஷெல்ப் காலி பண்ணி தர்றேன். அதுல உன் துணிமணி எல்லாம் வைச்சுக்கோ. மற்றபடி, லாப்டாப், எலெக்ட்ரானிக் சாமான் இதெல்லாம் நானே கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக் கொடுக்கறேன். கார் நிச்சயமா வேண்டாம். உனக்கு வெளியே போகணும் என்றால் நான் கூட்டிப் போகிறேன். நான் வேலைக்கு போய் இருக்கும் போது வெளியே போகணும் என்றால் அம்மாவோ அண்ணியோ கூட வருவாங்க, ஆட்டோ அல்லது கால்டாக்சி பிடிச்சு போயிட்டு வா”, கறாராக சொல்லி நிறுத்த,

அவனையே உறுத்து பார்த்தபடி, அவன் சொல்வதை கவனமாகக் கேட்டிருந்த வைஜயந்தி, “லுக் ராகவ், என்னிடம் எத்தனை துணிமணி இருக்கு என்று உங்களுக்கு தெரியுமா? அதை இந்த ரெண்டு ஷெல்பில் வைக்க முடியும் என்று எப்படி நீங்களா நினைச்சீங்க? லாப்டாப், ஐப்போட் இதெல்லாம் வேண்டாம்னு ஏன் சொல்லறீங்க? கார் ஏன் வேண்டாம்? எனக்கு காரணங்கள் சொல்லுங்க”,

“உனக்கு வேணும்கிறது நான் வாங்கித் தர்ரேனே….”

“உங்களையே எனக்கு இருபத்து நாலு மணிநேரமா தானே தெரியும்! நீங்க எதுக்காக எனக்கு பணம் செலவழிக்கணும்? வெயிட், இந்த புருஷன், பெண்டாட்டி என்ற கதையெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். நீங்களாக எதையும் எங்க வீட்டுல கேட்கலைன்னு எனக்கு தெரியும். கல்யாணம் கூட சிம்பிளா கோவில்ல தான் முடிச்சோம். வரவேற்ப்பும் கிடையாது. தவிர, இதெல்லாம் நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே யூஸ் பண்ணிட்டு இருந்தது தான். புதுசு இல்லை”

புருஷன் பெண்டாட்டி என்ற கதையெல்லாம் சொல்ல வேண்டாம் என்றதிலேயே பியூஸ் பிடுங்கின பல்ப் போல அடங்கிவிட்ட ராகவின் கொந்தளிப்பு, அதற்கு மேல் எதுவும் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் சில பல நிமிடங்கள் தவித்தான். தலை துவட்டின ஈரத் துண்டை கோபமாக படுக்கையில் வீசினவன், “அப்போ காரையும் கொண்டு வரப் போகறியா?”, என்று கேட்க,

தோள் குலுக்கல் ஒன்றையே அவனுக்கு பதிலாக கொடுத்துவிட்டு அவள் பதில் பேசாமல் இருக்க, இரண்டே எட்டில் அவளருகே வந்தவன், “எனக்கு பதில் சொல்லு ஜெயந்தி! உனக்கு நிச்சயமா கார் தேவை தானா? ஏன்? அப்படி எங்கே போகணும் உனக்கு?”, அவளது தோள்கள் இரண்டையும் பற்றி ஆத்திரமாக கேட்டவனை விழி விரித்து வியப்பாய் பார்த்தாள்.

மெல்ல கோபமோ பயமோ ஆக்கிரமிக்க, குரல் நடுங்க, அவனது கைகளை விலக்கி, இரண்டடி பின்னே நகர்ந்து சுவற்றில் இடித்துக் கொண்டு நின்றவள், “கார் வேண்டாம் என்கிறதுக்கு காரணம் கேட்டேனே!”, என்று நினைவு படுத்த,

ஒரு ஆழப் பெருமூச்சு எடுத்து அவனது தவிப்பை அடக்கிக் கொண்டவன், அவமானம் பிடுங்கித் தின்ன குன்றிய குரலில், “அவளும் சுதந்திரமா வெளிய போய் வர கார் வேணும்னு கேட்டு…. அதை வாங்கிக் கொடுக்கப் போய் தான்….. வேண்டாத….. சகவாசம் எல்லாம் பழகிக் கொண்டு…. இஷ்டப் பட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வந்தது…. இஷ்டப் பட்ட நேரத்துக்கு அந்த டானியலோடு வெளிய போய்… “, அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்கள் சிவந்து விட, ரத்தமாய் சிவந்து விட்ட விழிகளை அவள் பார்க்கும் முன்னால் திருப்பிக்கொள்ள,

எதுவும் ஆறுதல் சொல்ல முடியாமல் அவனையே வெறித்துப் பார்த்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் முட்டி மோதின. என்ன சொல்லி இது போன்ற அவமானங்களுக்கோ தாம்பத்திய அத்துமீறல்களுக்கு சமாதானம் சொல்ல முடியும்? தீராக்காயம் என்பது இது தானோ!

“ஓகே, கார் வேண்டாம் ராகவ்”, அதற்கு மேல் வாதிடாமல் உடனடியாக ஒத்துக் கொண்டவளை நன்றியாய் பார்த்தவனிடம் தொண்டையை செருமியபடி,

“பட், ஒண்ணு நியாபகத்துல வச்சுக்கோங்க. எல்லா பெண்களும் நிம்போமேனியக் இல்லை. ஒரு சிலர் இது போல நடந்துக்கறதால எல்லாருமே அப்படின்னு நினைக்காதீங்க”, என்று சொன்னவளிடம், ஒப்புதலாக தலை அசைத்து,

“எனக்கும் அம்மா, அக்கா, அண்ணி எல்லாரும் இருக்காங்க. எல்லா பெண்களும் அப்படின்னு நான் நினைக்கலை,” என்று சொன்னவன் குறிப்பாக அவளது தோள்களை பார்த்து,

“அதே போல எல்லா ஆண்களும் மனைவியிடம் பிசிகல்லி அப்யூசிவ் ஆக இருப்பாங்கன்னு நீயும் நினைக்காதே. எங்க அண்ணி ஒண்ணு சொல்லிட்டா தோப்புக்கரணம் போடாத குறையா அதை நடத்தி வச்சிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான் எங்க அண்ணா. எங்க வீட்டுல எல்லா முடிவுகளையும் எடுக்கும் முதல் அதிகாரம் எங்க அம்மாவுக்கு தான். அப்பாவும் அப்பப்போ அவருக்கு சரின்னு பட்டதை சொல்வாரே தவிர அம்மா முடிவெடுத்துட்டா அதை மீற மாட்டார்”

அவன் சொன்னதன் சாராம்சம் புரிந்தது. முக்கியமாய் அதே அளவு அதிகாரமும் உரிமையும் தனக்கும் கொடுக்கலாம் என்று அவன் இலைமறைகாயாக சொல்லும் செய்தியும் புரிந்தது.

தலை குனிந்து அவன் சொல்வதை மனதில் இருத்திக் கொள்ள முயன்றவள், “எல்லா ஆண்களும் அப்யூசிவ் என்று நானும் சொல்ல மாட்டேன். எங்க அண்ணாக்கள், அப்பா எல்லாரையும் பார்க்கிறேனே. ஆனால்……”, இந்த முறை வேதனையில் முகம் கசங்க முகம் சிவந்து தடுமாறினவள்,

“சில காயங்கள் உடனே ஆறிடும். சிலது ரொம்ப ரொம்ப நாள் ஆகும். சிலது….. நமக்கு படும் அடியை பொறுத்து தானே காயமும் படுது. ஒரு ஆணோடு பிசிகல் ரிலேஷன்ஷிப் என்றாலே…. “, வெறுப்பாய் உதடு சுழித்தவள்,

“முடியலை ராகவ்! உங்களோடு கல்யாணம் என்று எங்க வீட்டுல பேச்சு வார்த்தை தொடங்கினதுல இருந்து எனக்கு நானே கவுன்சலிங் போல சொல்லிக்கறேன். ஆனாலும்……”

“அதுனால தான் புருஷன் பெண்டாட்டின்னு கதை விட வேண்டாம்னு சொன்னியா? இல்லை, தாலி கட்டிட்டதால மட்டும் இந்த கல்யாணம் நடந்துட்டதாக அர்த்தம் பண்ணிக்கவேண்டாம் என்ற அர்த்தத்தில் சொன்னியா?”

“அந்த வார்த்தைகள் உங்களை ஹர்ட் பண்ணி இருந்தால் ஐயம் சாரி. ஆனால், நான் மனசுல நினைக்கிறதை தான் சொன்னேன். அதை வேற எப்படி சொல்லறதுன்னு தெரியலை. ஆனால், நான் சொன்னது தப்புன்னு நினைக்கலை. சரின்னு தான் நினைக்கிறேன்”

“ஒ……. அப்போ தாலி கட்டினதையும் தாண்டி இந்த கல்யாணத்தை நிஜம் ஆக்கியே ஆகணும்”, அவள் கண்களில் பீதி நிரம்பத் தொடங்க,

“பயந்துக்காதே, ஆஸ் ஐ ப்ரோமிஸ்ட், உன்னை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவோ அத்துமீறவோ மாட்டேன். பயப்படாதே”, என்று உறுதி கூறினவன்,

“ஆனால், நாம எப்போவும் இப்படியே இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை கடந்த காலத்தை முழுதாக துடைத்து விட்டுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டேன். அதனால, நமக்குள் நடந்த இந்த கல்யாணம் என்னை பொறுத்தவரை நூறு சதவீதம் இயல்பான கல்யாணம் தான். அதாவது, ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லுகிற அளவு குழந்தையும் குடித்தனமுமாக தான் நாம இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால், இனிமேல் நான் பார்த்துக்கறேன்….”, என்று சொல்லி மென்மையாக புன்னகைத்தான்.

அவன் புன்னகை அந்த சமய இறுக்கத்தை தளர்த்த அவனுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிட்டத்தட்ட ஓட முயன்றாள்.

“ஹான்…. ஓடாதே, நில்லு. இப்போ இந்த நிமிஷத்துல இருந்து தொடங்கலாம். என்ன புடவை கட்டிட்டு வரப் போகிறே?”, என்று விசாரித்து அவள் எடுத்து காட்டின புடவையை பார்த்து ஒப்புதலாய் தலை அசைத்தவன், “சல்வார் எல்லாமும் போட்டுக்கொள்ளுவே இல்லையா? நீ டார்க் ப்ளூ கலர் புடவை கட்டிக் கொள்ளப் போகிறே என்றால் நான் லைட் ப்ளூ ஷர்ட் போட்டுக்கறேன்”, என்று கூறிவிட்டு நகர்ந்தான்.   

 

Advertisements

One thought on “திண்ணிய நெஞ்சம் வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s