திண்ணிய நெஞ்சம் வேண்டும்

அத்தியாயம் மூன்று

 

அம்மா, மாமியார், சித்ரா, விமலா, சாந்தி மற்றும் லதா புடைசூழ ராகவ் காத்திருந்த அறையின் வாயிலுக்கு வந்த வைஜயந்தியின் கண்களில் தெரிந்த கலக்கம் எல்லோருக்குமே புரிந்தது. அறையின் உள்ளே அவள் செல்லும் முன்னால், கையை அழுத்தி ஆறுதல் கூறி கன்னத்தை வருடின அம்மாவின் செய்கை சற்றே தைரியம் கொடுக்க, தன்னையும் அறியாமல் வலது காலை எடுத்து உள்ளே வைத்தாள்.

கதவை தாள் போட்டுவிட்டு தன்னை நோக்கி வருபவளை வேற்றுகிரகவாசியை போல வெறித்துப் பார்த்த ராகவ், மின்சாரம் பாய்ந்தது போல துள்ளி எழுந்து, “வாங்க வாங்க, உட்காருங்க”, என்று உபசரிக்க, அவனை ஒரு முறை தீர்க்கமாக பார்த்தவள், கையில் வைத்திருந்த பால் சொம்பை டீப்பாய் மேல் வைத்து விட்டு, “உங்களுக்கு நமஸ்காரம் செய்ய சொன்னாங்க”, என்று கூறினாள்.

ஆனால் அவளது பாடி லாங்குவேஜ், நிச்சயம் ராகவின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யப்போவதில்லை என்பதை போல விறைத்து இருக்க, ஒற்றை கையால் அதை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, “அவங்க சொல்லறாங்க என்று எல்லாத்தையும் செய்ய வேண்டியதில்லை. இது நம்ம பர்சனல் ஸ்பேஸ். கல்யாணத்துடைய மற்ற சம்பிரதாயங்களை எல்லாம் அவங்க சொல்கிற படி தானே செய்தோம். இது நமக்கான நேரம். உட்காருங்க”, என்று உபசரித்தவன், “எங்க வீட்டுல ஏ.சி இல்லை. ஃபேன் தான். காற்று வருதா? இல்லை பெருசா வைக்கட்டுமா?”,

பொருளாதாரத்தில் அவர்களை விட பல படிகள் உயரத்தில் இருந்து வந்திருப்பவள் இந்த வைஜயந்தி என்பதை நன்றாகவே உணர்ந்தாலும், எங்கள் வீட்டு நிலைமை இது தான், என்பதை அழுத்தமாக உரைத்தன அவனது கேள்வி.

“இல்லை, போதும். சரியா இருக்கு”, அவனது கேள்வியை சரியாக உள்வாங்கி மீண்டும் இரத்தின சுருக்கமாகவே பதிலளித்தாள்.

“இங்கே இருக்கிற பாலோ பழமோ சாப்பிடணும்னு தோணினால் எடுத்து சாப்பிட்டுக்கோங்க. எனக்கு ராத்திரி பால் சாப்பிடும் பழக்கம் இல்லை. ஆனால், நான் சாப்பிடாததால் நீங்களும் சாப்பிடக்கூடாதுன்னு நான் நினைக்கலை”, என்று சொன்னவன், ஜன்னலை தாண்டி வெளியே தெரிந்த நிலவை வெறித்தவன், தயக்கமாக தொண்டையை கனைத்துக் கொண்டு மீண்டும் பேசத் துவங்கினான்.

இதற்குள் கட்டிலின் இன்னொரு மூலையில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்ட வைஜயந்தியும் இவன் மீண்டும் பேசத் துவங்குவதை பார்த்து விட்டு, அவன் பேச காத்திருந்தாள். “ஹ்ம்ம்…… ஹனிமூன் எங்கே போகப் போகிறோம்னு உங்க அண்ணாக்கள் கேட்டாங்க….. நான்…… இப்போதைக்கு ஹனிமூன் போகப் போவதில்லைன்னு நான் சொல்லிட்டேன். ஐ ஹோப் யு ஆர் ஓகே வித் தட். நமக்கு கொஞ்சம் டைம் வேணும்னு தோணித்து….. அதான்…..”

கவனமாக அவன் பேசுவதை கேட்டிருந்தவள், அவன் சொல்வதை ஒப்புவதான பாவனையில், “ஐ அக்ரீ. என்னிடம் கேட்டிருந்தாலும் நானும் இதையே தான் சொல்லி இருப்பேன். சோ, நோ வொர்ரீஸ்”, என்று இயல்பாய் அவனோடு ஒத்துப் பேசினாள்.

“ஒ…. ஓகே…. தட்ஸ் குட்”, என்று சொன்னவன், ஒற்றை கை நீட்டி, “டிரஸ் சேன்ஜ் செய்துக்கணுமா? இதையே போட்டுக் கொண்டு தூங்கறதுன்னா கஷ்டமா இருக்காதா?”, என்றபடி அவளது புடவையை தொட்டுப் பார்க்க முயல, மீண்டும் முகத்தில் கலவரம் சூழ்ந்து கொள்ள தன்னிச்சையாய் பின்னே நகர்ந்து விலகினாள்.

கேள்வியாய் அவள் முகத்தை பார்த்தவன், கைகளை பின்னுக்கு இழுத்து, கவனமாக எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது, “இந்த ரூமுக்கு அட்டாச்ட் பாத்ரூம் எல்லாம் இல்லை. பால்கனியும் இல்லை. ஆக, என்னால் இந்த ரூமை விட்டு வெளியே போகணும்னா கதவை திறந்து தான் போகணும். ஆனா, போகமுடியாதுன்னு உங்களுக்கே தெரியும். சோ, நான் தூங்கப் போறேன். திரும்பிப் படுத்துப்பேன். நீங்க இந்த பக்கம் டிரஸ் மாற்றிக்கிறதாக இருந்தால் மாற்றிக்கோங்க. என்னை நம்பலாம்”, என்று நீளமாக பேசி உத்திரவாதம் கொடுத்துவிட்டு கைகளை குறுக்கே கொண்டு வர,

இந்த முறை அவள் முகத்திற்கு சில பல சென்டிமீட்டர்கள் தொலைவிற்கு வந்துவிட்ட கையை கண்டு பதற்றமாக எழுந்து நின்றவளுக்கு உடம்பு உதறத் தொடங்கி இருந்தது.

“ஜெயந்தி….. என்னம்மா? என்னாச்சு?”, கவலையாக கேட்டான் ராகவ். மதியம் தூக்கத்தில் அவள் புலம்பினது வேறு அப்போதிருந்து மனதை குடைந்து கொண்டிருக்க, இப்போது அவளது பதற்றமும் அவனை தாக்கிற்று.

“நீங்க…. நீங்க…. உங்க கையை எனக்கு ரொம்ப பக்கத்துல கொண்டு வந்தீங்க”, கண்ணில் நீரும் சேர்ந்து கொள்ள, திணறினாள்.

“சோ வாட்? உங்க தலைக்கு பின்னால இருக்கிற சுவிட்சை ஆப் பண்ண தான் கையை நீட்டினேன். தவிர, நமக்கு கல்யாணம் ஆகிட்டது. நினைவிருக்கு இல்லையா? கல்யாணம் என்றாலே இதையெல்லாமும் எதிர்பார்த்திருக்கதானே வேணும்?”, ஆணித்தரமாக வந்தது அவனது கேள்வி.

பதில் சொல்ல வகை அறியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை அம்மாவை காணாமல் தவிப்பதை போல மிரள மிரள விழித்தாள் வைஜயந்தி.

அவளது மிரட்சியான பார்வையே இரக்கத்தை உண்டு பண்ண, “ஜெயந்தி, ரிலாக்ஸ். பிசிகல் ரிலேஷன்ஷிப்பிற்கு நீங்க இப்போ தயாராக இல்லைன்னால் நான் வற்புறுத்தப் போவதில்லை. இஷ்டமில்லாமல் உங்களைத் தொடும் அளவு நான் மோசமானவன் இல்லை. ப்ளீஸ்… ரிலாக்ஸ். உட்காருங்க, இந்த தண்ணீரை குடிங்க”, கட்டாயப் படுத்தி அவளை தண்ணீர் குடிக்க வைத்தவன் அவள் சுதாரித்துக் கொள்ள நேரம் கொடுத்து கைகளை கட்டியபடி அவளை பார்த்திருந்தான்.

மெல்ல தன்னை மீட்டுக்கொண்டவள், “நீ… ஹிக்… நீங்க, சிகரெட் குடிப்பீங்களா? ஹிக்….”, என்று கேட்க,

சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்த கேள்வியை கேட்டு புருவம் யோசனையில் சுருங்கினாலும், மெல்ல இல்லை என்று தலை ஆட்டினான்.

“ஆல்கஹால்?”

“நோ”, ஒற்றை சொல்லாய் பதில் வர, அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவள், “முதல்லயே சொல்லிடறேன், எந்த காரணம் கொண்டும் உங்களுக்கு பிடிக்காத மாதிரி நான் நடந்து கொண்டா நீங்க என்னை டைவர்ஸ் பண்ணலாம். இதை வேணா நான் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்திடறேன்”

மீண்டும் ஒரு முறை விறைத்து நிமிர்ந்தவனுக்கு ஆத்திரத்தில் முகம் சிவக்கத் துவங்கியது, “எனக்கு பிடிக்காத மாதிரின்னா? எப்படி?”, டைவர்ஸ் என்ற வார்த்தையை விட, அவளின் முன் பாதி வாக்கியமே அவனை கூர் வாளாக அறுத்தது.

“ஒரு வேளை…. நான்….. என்னால்…. முடியாமல் போனால்…..” அதற்கு மேல் முடிக்க முடியாமல் அங்கே அவர்களுக்கு இடையே இருந்த கட்டிலையே கையை விரித்துக் காட்ட, உஸ்ஸ்….. என்ற சப்தத்தோடு ராகவின் நீண்ட நெடும் பெருமூச்சு வெளிவர, விரித்திருந்த அவனது தோள்களும் முதுகும் சற்றே தளர்ந்து இயல்பாக, ஒற்றை கையை அலட்சியமாய் ஒதுக்கி தள்ளியபடி, “தட்ஸ் ஓகே! ஐ கேன் வெயிட். நான் என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்”, என்று மீண்டும் இலகுவாக முகம் மாறிவிட உரைத்தான்.

“இல்ல ராகவ், நான் சொல்லறதை நீங்க புரிஞ்சுக்கோங்க…… என்னால…. முடியாமலே கூட போகலாம்….. “, அவமானத்தில் முகம் செக்கச் சிவந்து போய்விட, கெஞ்சுதலாக பார்த்தாள். அவள் சொல்ல வருவது வெறும் ஆண் பெண் உறவு என்ற மேலோட்டமான விஷயம் மட்டுமல்ல, அதையும் தாண்டி வேறு எதுவோ என்று புரிய, கேள்வியாய் பார்த்தான். அவளிடமிருந்து வேறொன்றும் வராமல் போக, மெல்ல அவனது கையை நீட்டி அவளது கையை பற்றினவன், “அவுட் வித் இட் ஜெயந்தி. எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க. எத்தனை கசப்பா இருந்தாலும் பரவாயில்லை. ஐ வில் ட்ரை டு அண்டர்ஸ்டேன்ட்”, இதமான வார்த்தைகளில் மட்டுமல்லாது கண்களாலும் உறுதியளிக்க,

மெல்ல அவனது கைகளில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டவள் அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளது முந்தானையை கொஞ்சமாக விலக்கி பிளவுஸின் ஒரு பக்கத்தையும் நகர்த்தி தோள்பட்டையை காட்டினாள்.

அரை வட்டம், கால் வட்டம், சென்டிமீட்டர், இன்ச் என்று பல வகையான நீள அகலங்களில் சிகரட் தழும்புகள் விரவிக் கிடக்க, அழுகை குமுறின குரலில், “என் முகத்தை நான் தினமும் கண்ணாடியில் பார்த்துக்கறேன். நான் பெரிய அழகியில்லைன்னு எனக்கு தெரியும். ஆனால்…… ஆனால், மற்றபடியும் என்னை அழகில்லாதவளாகவே ஆக்கிட்டான்”,  

பார்த்துக் கொண்டிருந்த ராகவிற்கே இப்போது ஆத்திரத்தில் உடம்பு உதறியது. சட்டென கை நீட்டி அவளது பிளவுசை சரி செய்து மீண்டும் முந்தானையை மூடினவன், அதற்கு மேல் தாங்க முடியாமல் எழுந்து வந்து அவளது தலையை கைகளில் ஏந்தி வயிற்றோடு அமுக்கிக் கொண்டு, “ஐயம் சோ சாரி ஜெயந்தி. ஐயம் சோ சாரி….. வெரி வெரி சாரி”,


யாரோ செய்த குற்றத்திற்கு ஆண் வர்க்கத்தின் சார்பாய் அவளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடி மன்னிப்புக் கேட்டான் ராகவ்.

Advertisements

One thought on “திண்ணிய நெஞ்சம் வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s