திண்ணிய நெஞ்சம் வேண்டும்

அத்தியாயம் இரண்டு

அரை மணி நேரத்தில் உறக்கம் கலைந்த ராகவிற்கு பழக்கமில்லாத அறை சற்றே குழப்பத்தை கொடுக்க, “ம்ஹ்ம்ம்…. ப்ச்….”, என்ற படி வந்த முனகல் சத்தம் குழப்பத்தை தீர்த்தது.

கை கால்களை உதைத்தபடி எதிலிருந்தோ விடுபட போராடுபவள் போல வைஜயந்தி முனக, சட்டென படுக்கையை விட்டு எழுந்தான். அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைக்கும் முன்னாலேயே, “ம்ம்…. ஹான்….. ம்ம்ம்……”, என்றபடி அவளது போராட்டம் இப்போது பலம் பெற்றுவிட திமிறத் துவங்கி இருந்தாள். மடியில் இருந்த லாப்டாப் நழுவி கீழே விழப் போக, பாய்ந்து அதை பிடித்தவன், அருகே இருந்த சிறு மேசை மேல் வைத்து விட்டு வைஜயந்தியை ஆதரவாக இரு தோளிலும் பிடித்து லேசாக உலுக்கி, “இட்ஸ் ஓகேமா. சும்மா கனவு தான். நத்திங் டு வொர்ரி”, என்று கூறி அவளது கன்னங்களை கையால் தட்டி எழுப்ப முனைந்தான்.

“ஆஆ…..”, குரல் எழும்பாமல் கேவலாய் சப்தம் வர விலுக்கென உறக்கத்தில் இருந்து விழித்த வைஜயந்தி சத்தியமாய் அத்தனை அருகே ராகவை எதிர்பார்க்கவில்லை என்பது அவளது அதிர்ச்சியான முக பாவத்திலேயே தெரிந்தது.

“என்ன… என்ன?”, ஏன் என் அருகே வந்தாய் என்று கேட்காமல் கேட்டது அவளது பாவனை.

தோளை குலுக்கி, “ஏதோ கனவு கண்டாய் போல இருக்கு. பயந்து போய் முனகினாய். அதான்……” இல்லேன்னா நீ தூங்கும் போது, உனக்கு தெரியாத போது உனக்கு அத்தனை அருகில நான் வந்திருக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியது அவனது அரைகுறை வாக்கியம்.

மெல்ல விவரம் புரிய, அறையின் ஏசியையும் மீறி வியர்த்து கொட்டி, அதில் ஒட்டிக் கொண்ட முன்னுச்சி முடிகளை ஒரு கையால் ஒதுக்கியபடி கண்களையும் ஒரு முறை அழுத்தி திறந்தவள், “கனவில்லை…. அத்தனையும் நிஜம்! இல்லை… கனவு தான்…. எல்லாமே கனவு தான்!”, ஒன்றுக்கொன்று முரண்பாடாக முனகிவிட்டு பாத்ரூமை நோக்கி முகம் கழுவ சென்றாள்.

அன்று மாலை தயாராகி மீண்டும் ஒருமுறை கோவிலுக்கு சென்று விட்டு, கணவன் மனைவி இருவருமே எல்லாம் வல்ல இறைவனிடம் என்ன கேட்பது என்று தெரியாமல், “நீயே துணை!”, என்று வேண்டிக் கொண்டு வந்தனர்.

பிறகு எல்லாருமாக வைஜயந்தியின் துணிமணிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, ராகவின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். சம்பந்தி விருந்து தடபுடலாக அங்கே அளிக்கப் பட, ராகவ் வைஜயந்தி இருவரை தவிர மற்ற அனைவருமே மெதுவாக இயல்பான உற்சாகத்திற்கு திரும்பி இருந்தனர். அதாவது, கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்ற கவலையை மீறி குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடந்தால் எத்தனை குதூகலம் இருக்குமோ அதில் ஐம்பது சதவீத சந்தோஷம் கொப்பளிக்க பேசிக் கொண்டிருந்தனர்.

ஏதாவது ஒன்று தடுக்கிடலாய் சொல்லி விட்டு தட்டுத்தடுமாறி சமாளிப்பதும், அவர் அந்த பிழையான வார்த்தைப் பிரயோகத்தை செய்யவே இல்லாதது போல மற்றவர்கள் உடனே பேச்சை மாற்றி நிலைமையை சரி செய்வது என்று அவர்களுக்குள் வலுக்கட்டாயமாக இயல்பான சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர்.

பிடிவாதமாக புதுக் கணவன் மனைவியை அருகருகே உட்கார வைத்து விட்டு, “உங்க ரெண்டு பேருக்கும் கைல போலீஸ் திருடன் கைல போடற மாதிரி ‘ஹான்ட் கப்’ போட்டுடப் போறேன். ரெண்டு பேரும் ரெண்டு இஞ்சுக்கு மேல கேப் விடக் கூடாது, சொல்லிட்டேன்”, ராகவின் அண்ணி விமலா சிரித்தபடி சுட்டு விரலை மிரட்டலாக ஆட்டி சொல்லிவிட்டு சென்று விட்டார்.

சாப்பிட்டு விட்டு கை கழுவப் போன ராகவை பின் தொடர்ந்து வந்த அவனது அண்ணன் விஷாலும், அக்கா சித்ராவின் கணவன் மாதவனும் வழி மறித்து, “ராகவ், கொஞ்சம் உள்ள வாயேன், பேசணும்”, என்று கடத்திக் கொண்டு போய்,

“என்னதிது ராகவ், நாங்களும் நேற்று மாப்பிள்ளை அழைப்பின் போதில் இருந்தே பார்த்திட்டு வர்றோம். கொஞ்சம் கூட அவளோடு சிரிச்சு பேச மாட்டேன்கற. ஒரு வேளை பிடிக்காம நாங்கல்லாம் வற்புறுத்தினதால தான் அவ கழுத்தில தாலி கட்டின என்று அவங்க யாரும் நினைச்சிட்டா?”, மாதவன் கண்டிப்பாய் கூற,

“அதானே நிஜம்?”, கூரின அம்பை வந்தது ராகவின் வார்த்தைகள்.

திகைத்துப் போய் பார்த்த மாதவனிடம், “வற்புறுத்தலைன்னு சொல்லறீங்களா?? தவிர, அவங்க மட்டும் என்ன நான் ஆசைப் பட்டு தாலி கட்டினதாகவா நினைச்சிட்டு இருக்காங்க?”, கேலியாக ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

விஷால் அதிர்ச்சியாக, “ராகவ்!”, என்று கூவ, சரியாக அந்த நிமிடம் கதவு திறக்கப்பட, அங்கே வந்து நின்ற சித்ராவிற்கும் விமலாவிற்கும் தெளிவாகவே காதில் விழுந்தது. அவர்களுடைய அதிர்ச்சியை சமாளித்து அவர்கள் பதில் சொல்லும் முன்னால் ராகவே தொடர்ந்தான், “என்னை கல்யாணத்திற்கு வற்புறுத்தும் போதே இதை பற்றிஎல்லாமும் யோசிச்சிருக்கணும்”,

“ராகவ்! இதென்ன மடத்தனமா பேசறே? வெளியே ஹாலில் அவங்கல்லாம் இருக்காங்க. இப்போ பேசற பேச்சை பாரு”, சித்ரா கண்டனமாக கூறிவிட்டு,

“ஹ்ம்ம்…. சரி சரி, ஆகவேண்டியதை பாருங்க”, என்று கறாராக கூறி விட்டு கணவனையும் அண்ணனையும் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு நகர்ந்து நின்றாள்.

ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விமலாவிடம், “அண்ணி, நீங்க ஒருத்தர் தான் பாக்கி. நீங்க என்ன சொல்ல போறீங்க?”, என்று கேட்டான் ராகவ்.

நின்ற இடத்தில் இருந்தே மைத்துனனை ஆழமாக பார்த்தபடி, “அவளை உங்க மனைவியா பார்க்கிறதுக்கு முன்னால் ஒரு மனுஷியா பாருங்க. அவளுக்கு மனசுல சுணக்கம் வராத படி நடந்துக்கணும்னு நினைங்க. எல்லாமே ஈசியா வந்துடாது. கஷ்டம் தான். பழகிக்க வேண்டும் தான். அதான் வாழ்க்கை. ஆனால், ஒரு புன்னகை, அனுசரணையான வார்த்தை, இதமான பேச்சு என்கிறது கூட அதிகப்படி என்று நினைக்கிற அளவு நாம ஒண்ணும் ராக்ஷதர்களாக ஆகிடணும்னு இல்லை. நமக்கு கிடைக்கிறது ஒரு வாழ்க்கை. அதுல வேண்டாததை எல்லாம் நினைச்சு எதுக்காக மனசை குழப்பிக்கணும்? ஏதோ எனக்கு தோணினதை சொன்னேன். உங்களுக்கு தெரியாததில்லை. உங்களுக்கு அறிவுரை சொல்லற அளவு எனக்கு வயசும் இல்லை”, மைத்துனன் என்ற மரியாதை கெடாதபடி, அவனது கௌரவம் பாதிக்காத படி அதே சமயம் பளிச்சென பதில் சொல்லிய விமலாவை யோசனையாக பார்த்தான் ராகவ்.

“ஹ்ம்ம்….. எஸ். எதுவுமே ஈசியா இல்லை. ஒருத்தருக்கொருத்தர் மனிதாபிமானத்தோடு நடத்தணும். கிடைக்கிறது ஒரு வாழ்க்கை…….”, முணுமுணுத்தபடி தன்னை சுற்றி அனைவரும் திகைத்து போய் பேச்சிழந்து பார்த்திருப்பதை நின்று கவனிக்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

“ராகவ்! எங்கே போனாய்? சுவாமியை நமஸ்காரம் செய்துக்கோ. விஷாலும் மாப்பிள்ளையும் எங்கே?”, என்று கேட்டபடி அங்கே வந்த பத்மாஸினி, வைஜயந்தியிடம், “வாம்மா வைஜயந்தி. வந்து தம்பதியா சுவாமியை நமஸ்காரம் செய்துக்கோங்க”, என்று சுவாமி அறையை காட்ட,

சொன்ன சொல்லை குனிந்த தலை நிமிராமல் நிறைவேற்றின மருமகளிடமும், கேள்வி கேட்காமல் செய்த மகனிடமும், அர்ச்சனை செய்த குங்குமம் சந்தனம் ஆகியவற்றை நெற்றியில் இட்டு, அட்சதைகளை ஆசிர்வாதமாக உச்சந்தலையில் தூவினார்.

சித்ராவும் விமலாவும் சுதாரித்துக் கொண்டு வந்து இவர்களோடு சேர்ந்து கொள்ள இந்த அவகாசம் சரியாகவே இருந்தது. சத்தம் போடாமல் வைஜயந்தியை மீண்டும் தனியே அழைத்து சென்று அவளோடு பேச்சுக் கொடுக்க, அந்த நேரத்திற்குள் விஷாலும் மாதவனுமாக வந்து ராகவை கூட்டி சென்றனர்.

போர்க்களத்திற்கு போகும் பலிகடாவின் மனநிலையில் அவர்களோடு வேண்டா வெறுப்பாக சென்ற ராகவிற்கு அவர்கள் தோளில் தட்டி, “ஆல் த பெஸ்ட்! ரூமில பேசினதெல்லாம் நினைவில இருக்கு இல்லையா?”, என்று கேட்டுவிட்டு அவனது பதிலுக்கு காத்திருக்காமல் சென்று விட்டனர்.

அது அவனது அறையே ஆன படியால் எந்த விதமான யோசனையோ தயக்கமோ இல்லாமல் உள்ளே காலடி எடுத்து வைத்தவனுக்கு, அதிர்ச்சியில் உடம்பு விறைத்து நிமிர்ந்தது. முதலிரவுக்கான சகல அலங்காரத்தோடும் ஊதுபத்தி நறுமணத்தோடும் அறை மிளிர, வெளியே வளர்பிறை நிலவு பௌர்ணமியை நோக்கி குளிர்ந்து கொண்டிருந்தது.

அறைக்கு உள்ளே வந்து கதவை சார்த்தினவன், கட்டிலில் உட்கார்ந்த படி மெல்ல சில மாதங்களுக்கு முன் நினைவுப் பலகையை திருப்பினான்.

“ராகவ், ஏண்டா இப்படி பிடிவாதம் பிடிக்கறே? பெண் பார்க்க போனபோதே உன்னை கூப்பிட்டோம். அப்போவும் வரலை. பிறகு போட்டோவை பார்த்து நீ சரின்னு சொன்னதற்காக நிச்சயதார்த்தம் நடத்த நாள் குறிக்க போனபோது வான்னு கூப்பிட்டேன். அப்போவும் வரலை. நாளைக்கு நிச்சயதார்த்தம், அதுக்கும் வரப்போகிறதில்லைன்னு சொல்லறே. ஆனால், இன்னைக்கு அவளை தனியா பார்த்து பேசணும்னு சொல்லறியே. இதெல்லாம் நடக்கிற காரியமா?”, இயலாமை கோபமாக வெளிப்பட பத்மாசினிக்கு சற்றே குரல் மேலே எகிறியது. அவருடைய பல்சும் பி.பியும் கூடவே பேச்சுத் துணைக்கு மேலேறியது.

“நம்ம வீட்டுல மட்டும் நடக்கிற காரியங்கள் மட்டும் தான் நடக்குதா? புதுசு புதுசா ஒண்ணுமேவா நடக்கிறதில்லை?”, ராகவின் குரல் வாக்குவாதத்தில் இறங்க,

“ராகவ், அம்மா சொல்ல வருவது என்னன்னு புரிஞ்சுக்கோ. உன்னை ஒரு முறை கூட நேரடியா பார்க்காம உன்னோடு அவங்க வீட்டு பெண்ணை தனியா எப்படி அனுப்புவாங்க? காலம் கெட்டுக் கிடக்கு. ஏதோ எங்க முகத்துக்காக உன்னை நேரடியா பார்க்கலைன்னாலும் நம்ம குடும்பத்துல நிச்சயம் செய்துக்க அவங்க சம்மதிச்சிருக்காங்க. அதை கெடுத்துக்கணுமா?”, அப்பா சேஷகோபாலனின் குரல் பொறுமையாய் நிலைமையை எடுத்து சொல்லியது.

சிறிது நேரம் மௌனம் காத்த ராகவ், யாருடைய கண்களையும் நேரடியாக சந்திக்க மறுத்து, “அவ… அந்த பெண்ணு…. வைஜ்….. இந்த கல்யாணத்துல சம்மதமான்னு தெரியணும்”

“நாங்க எப்படி நீ சம்மதம் என்று சொன்ன பிறகே மேல்கொண்டு பேச ஆரம்பிச்சோமோ, அதே போல, அவளுடைய வீட்டுலையும் அவளுடைய மனப்பூர்வமான சம்மதம் வாங்கின பிறகே நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்க கூப்பிட்டாங்க. யாரும் யாரையும் வற்புறுத்தலை….”

கேள்விக்குறியாய் புருவம் மேலே எழும்ப, அம்மாவின் குரல் தடுமாறியது, “அ…அ…அது…. வ… வந்து….. கல்யாணம் பண்ணிக்கோ என்று வற்புறுத்தினோம் தான். ஆனால், இன்னாரை செய்துக்கணும்னு வற்புறுத்தலை. பிடிக்கலைன்னு சொல்லி இருந்தால் நிச்சயம் வேற யாரையாவது பார்த்திருப்போம். இப்போ கூட சொல்லு, உனக்கு இஷ்டம் இல்லைன்னால், இதுவரை செய்த ஏற்பாடு எல்லாத்தையும் கான்செல் செய்துட்டு அவங்க கிட்ட வேண்டாம்னு சொல்லிடலாம்”, பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பதை போல சொன்னார் பத்மாஸினி.

“இத்தனை ஏற்பாடு செய்துட்டு, கான்செல் பண்ண போறீங்களா?”, நம்பமுடியாமல் கேட்டான் ராகவ்.

“என்ன செய்ய முடியும்? கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு அப்புறம் உங்களால தான் நான் மாட்டிட்டு முழிக்கறேன்னு நீ எங்க பக்கம் விரலை காட்டறதுக்கு பதில் இப்போவே வேண்டாம்னு சொல்லிடலாம். என்ன பிரச்சினைன்னா, அந்த பொண்ணுக்கு ஆசை காட்டி மோசம் செய்த மாதிரி ஆகிடும். மேலும், அவங்க வீட்டுலையும் ஏக எதிர்பார்ப்போட ஒரே பெண்ணோட கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கறாங்க. அதுல மண்ணள்ளி போட்டுடுவோம்…. ப்ச்… என்ன செய்யறது?”

ஒரு கணம், ஒரே கணம், இமைகள் மூட, அதற்குள் போட்டோவில் பார்த்த அந்த வைஜயந்தியின் முகம் வந்து போனது. நிச்சயம் பேரழகி என்று சொல்ல முடியாது. சுமாருக்கும் சற்று மேலே தான். ஒரு காலத்தில் நான் நிறையவே சிரித்திருக்கிறேன் என்று சாட்சியம் கூறிய கண்கள் இப்போது எதிராளியை துல்லியமாக எடை போடுவது போல உற்றுப் பார்த்திருந்தது. சிரிப்பு என்பது மருந்துக்கும் மறந்து போனது என்று தாடை சொல்லாமல் சொல்லியது.

அடுத்த கணம் “அவளின் முகம்” கண்ணுக்குள் வந்து போயிற்று. அழகு என்பதற்கு இலக்கண குறிப்பில் இருந்து இலக்கியத்தில் இருக்கும் வரைமுறை வரை அனைத்தையும் பெற்றிருந்தாள். வயது வித்தியாசமே இல்லாமல் ஏழை பணக்காரர் என்று இல்லாமல் ஆண் பெண் என்று இல்லாமல் அனைவரையும் வசீகரிக்கும் அழகு. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சொட்டிக் கிடக்கும் அதீத அழகு……… ப்ச்…….

மீண்டும் வைஜயந்தியே கண்ணுக்குள் வைத்து, “இல்லம்மா, பேசியே ஆகணும். நீங்களும் வாங்க. நான் அவங்க வீட்டிலேயே ஒரு ரூமில போய் அவங்களோட பேசறேன். வெளியே கூட்டிப் போகணும்னு இல்லை. பட்….. ப்ளீஸ்….. ப்ளீஸ்மா….”, மகன் வாக்கு வாதம் செய்தபோது எதிர்வாதம் செய்த தாயாரால் மகன் ப்ளீஸ் என்று கெஞ்சுகிற போது ஒன்றும் மறுப்பு சொல்ல இயலவில்லை.

அடுத்த அரை மணியில் அவர்கள் வீட்டில் இருக்க, அதற்கு அடுத்த பத்தாவது நிமிடம், மாடியில் இருந்த சிட்டவுட்டில் வைஜயந்தியை சந்தித்தான் ராகவ். எடுத்த உடனேயே பளிச்சென, “நாளைக்கு நடக்கப்போகிற நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானான்னு எனக்கு தெரிய வேண்டி இருந்தது. அதான் பேசணும்னு வந்தேன்”

தயங்குவாள் என்றோ வெட்கத்தில் தலை குனிவாள் என்றோ அவன் நினைத்திருந்தால் அந்தோ பரிதாபம், “என்னுடைய சம்மதத்தையும் கேட்ட பிறகு தானே தேதி குறிச்சாங்க”, இரத்தின சுருக்கமாக அவளது விடையை சொல்ல,

ஒற்றை தோளை குலுக்கினவன், “எஸ், சொன்னாங்க, ஆனால், எனக்கு நேரடியா கேட்டுக்க வேண்டி இருந்தது. உங்க…. உங்களுக்கு…. இதில் பூரண சம்மதம் தானே? நாளைக்கு எந்த விதமான வருத்தமும் இருக்க கூடாது. என்னை பற்றி எல்லா விவரமும் சொன்னாங்க இல்லையா? ஏதாவது சந்தேகமோ விவரம் புரியாமலோ இருந்தால் கேட்டுடுங்க. கல்யாணம் ஆன பிறகு, ஐயோ! இவரை விட பெட்டரா யாரும் கிடைக்காமலா போய்டுவாங்க என்று உங்களுக்கு தோணிடக் கூடாது”

அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், அதற்கு பிறகும் மிக மிக கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, “எஸ், சொன்னாங்க. கல்யாணம் ஆன பிறகு, ஐயோ இவளை போய் கல்யாணம் செய்தோமே, பெட்டரா யாராவது கிடைக்காமலா போயிருப்பாங்க என்று உங்களுக்கு கூட தோணலாம். சோ யோசிச்சுக்கோங்க…..”, என்றவள், சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல சில நிமிடம் தயங்கி விட்டு, பின்பு மெல்லிய குரலில், “முக்கியமா….. ஐயம் நாட் எ வெர்ஜின்”, என்றாள்.

அத்தனை நேரம் தன் வார்த்தைகளையே தன்னிடம் திருப்பி வீசின அவளது திறமையை மனதிற்குள் மெச்சிக் கொண்டிருந்தவன், அவளது கடைசி வாக்கியத்தில் தெரிந்த வலியை கேட்டதும் நிச்சயம் அவளையே திருமணம் செய்து கொள்வது என்று முடிவே செய்து விட்டான். உட்கார்ந்திருந்த சோபாவை விட்டு எழுந்து அவளுக்கு நேரே இரண்டடி தள்ளி வந்து நின்றவன், அவளை போலவே மெல்லிய குரலில், “மீ டூ…..”, என்று சொல்லி விட்டு அகன்றான்.

Advertisements

One thought on “திண்ணிய நெஞ்சம் வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s